இடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்குவது என்ற முதல்வர் ஜெயலலிதாவின் முடிவு அதிருப்தி அளிக்கிறது, வேதனை அளிக்கிறது, ஏமாற்றம் தருகிறது. தமிழர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்பது தெரியவில்லை என்று கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வரும் அணு மின் சக்திக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் உதயக்குமார் கூறியுள்ளார். இடிந்தகரை கிராமத்தில் நேற்று அவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழக மக்களின் உயிருக்கு ஆபத்தானது என்றும், எனவே அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முயற்சி செய்து வரும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம்.
இந்தநிலையில் கூடங்குளம் விவகாரம் பற்றி விவாதிக்க தமிழக அமைச்சரவை அவசரமாக கூடியுள்ளதை அறிந்தோம். தமிழக அரசும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க பச்சை கொடி காட்டி விட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 7 மாதங்களாக நாங்கள் பொதுச் சொத்துக்களுக்கோ, யாருக்கோ எந்த சேதமும் ஏற்படுத்தாமல் அகிம்சை முறையில் போராடி வந்தோம். எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த தமிழக போலீசார் திடீர் என்று, எங்கள் போராட்டக்குழுவை சேர்ந்த 10 பேரை கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
இதன் பின்னணியில் ஏதோ மர்மம் உள்ளதை நாங்கள் நேற்றே அறிந்து கொண்டோம். அன்றைய தினம் மாலையில் நெல்லை மாவட்ட கலெக்டரின் உதவியாளரிடம் இருந்து திடீர் என்று எனக்கு போன் வந்தது. சற்று நேரம் கழித்து மாவட்ட கலெக்டர் போனில் என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, தமிழக அரசிடம் போராட்டக்குழு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் சில சந்தேகங்கள் உள்ளன. கடலியல், நீரியியல் பற்றி சில தகவல்கள் எங்களுக்கு வேண்டும் என்று கலெக்டர் கேட்டார். இதுபற்றி ஆலோசிக்க என்னையும், இன்னொருவரையும் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார்.
நான் அவரிடம், இது விஞ்ஞானிகள் சார்ந்த விஷயம். எனவே எங்கள் போராட்டக் குழு அமைத்த நிபுணர் குழு பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறேன் என்றேன். நள்ளிரவு 11 மணி அளவில் கலெக்டர் மீண்டும் போனில் பேசினார். அப்போது நான் உள்பட போராட்டக்குழுவை சேர்ந்த புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ், வக்கீல் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேராக வாருங்கள், என்று கூறினார். அவரிடம், எங்களை அழைப்பதில் ஏதோ மர்மம் உள்ளது. எனவே வரமுடியாது என்று கூறிவிட்டோம்.
இன்று (நேற்று) காலையில் கூடங்குளத்தில் திடீர் என்று போலீஸ் குவிக்கப்பட்டதை அறிந்தேன். எனவே நிலைமையை அறிய இடிந்தகரை கிராமத்துக்கு உடனடியாக வந்துவிட்டேன். அதன் பின்னரும் கலெக்டரிடம் இருந்து போன் வந்தது.
கலெக்டர் என்னிடம் `நீங்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வர முடியாவிட்டால், ராதாபுரம் தாலுகா அலுவலகத்துக்கு வாருங்கள்' என்று கூறினார். அப்போது அவரிடம், `எங்களை ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறீர்கள். மறுபுறம் போலீசாரை குவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்' என்று திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டேன்.
மத்திய, மாநில அரசிடம் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் போராட்டத்தை புறந்தள்ளிவிட்டு இரும்புக்கரம் கொண்டு எங்களை ஒடுக்கி, அணுமின் நிலையத்தை திறந்தால் அது மனித உரிமையை மீறும் செயல் ஆகும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படவில்லை. எனவே இந்த பயிற்சியை முறையாக அளிக்காமல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எக்காரணம் கொண்டும் எரிபொருள் நிரப்பக் கூடாது. அதற்கு அனுமதிக்க மாட்டோம்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும். நாங்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நம்பிக்கை இழக்கவில்லை. மீண்டும் அவர் கூடங்குளம் பகுதி மக்களுக்கு குரல் கொடுப்பார் என்று நம்புகிறோம். தமிழக அமைச்சரவை முடிவையும், தமிழக அரசு அறிவித்து உள்ள ரூ.500 கோடி நலத்திட்டங்களையும் ஏற்க மாட்டோம்.
மக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழக அரசின் முடிவு வருத்தமளிக்கிறது. மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே தமிழக முதல்வர் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இது தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். எந்த அரசையும் நம்பி நாங்கள் போராடவில்லை. எந்தத் தலைவரையும் நம்பி நாங்கள் போராடவிலல்லை. எங்களது போராட்டம் தொடரும்.
தமிழர்கள் மீது இடியை இறக்கியுள்ளது தமிழக அரசு. தமிழர்களுக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது என்பது புரியவில்லை. இது தமிழ் கூறும் நல்லுலகினர் விவாதிக்க வேண்டிய விஷயம். இலங்கைத் தமிழர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்தத் தமிழர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, தமிழர்களுக்கு அநீதிதான் கிடைக்கிறது.
போலீஸ் அடக்குமுறைக்கு தயாரான பிறகு இனி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை. நாங்கள் அமைதியான முறையில் போராடி வருகிறோம். வன்முறைக்கு இடம் கொடுக்கமாட்டோம். சமுதாய தலைவர்கள் மற்றும் பெண்களுடன் கலந்து ஆலோசித்து எங்களது அடுத்த போராட்டம் குறித்து செவ்வாய்க்கிழமை முடிவு செய்வோம்.
மக்கள் பீதியடைய வேண்டாம். யாரும் அச்சப்படத் தேவையில்லை. நம்மை கைது செய்ய போலீஸார் இங்கே வரக்கூடும். அவ்வாறு வந்தால் யாரும் தடுக்க வேண்டாம். போலீஸார் அவர்களது கடமையைச் செய்யட்டும். நமது போராட்டம் அறவழியில் தொடரும். மத்திய, மாநில அரசுகளின் நிலை நிச்சயம் மாறும் என்றார் அவர்.
No comments:
Post a Comment