வாஷிங்டன்:ஈரானுக்கு எதிரான தாக்குதல் மேற்காசியாவில் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வீரேந்திர பால்,இந்தியாவின் சார்பாக கூறியதாவது:
இந்திய வெளியுறவுக் கொள்கையின் நோக்கம், இந்தியாவின் எரிபொருள் தேவை ஆகியவற்றை உருக்குலைக்கும் விதமாக அமெரிக்கப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. மேலும் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து தவறானப் புரிதல்களும் உருவாக்கப்படுகின்றன.
இந்திய மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இருந்தும் இந்தியாவில் இன்னமும் 40 கோடி மக்கள் வர்த்தக ரீதியான எரிபொருள் பயன்பாட்டை மேற்கொள்வதில்லை. மாறாக ஈரானிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு மாதந்தோறும் அதிகரித்து வருவதாகவும், அது குறித்த புள்ளிவிவரங்களும் வெளியிடப்படுகின்றன. இச்செயல் இந்தியா குறித்து தவறாகச் சித்தரிக்கப்படுவதாகும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் இறக்குமதி அளவை ஒப்பிடும்போது, ஈரானிடமிருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெயின் இறக்குமதி அளவு குறைவாகவே உள்ளது.
இந்திய மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால், உடனடியாக ஒரு மாற்று ஏற்பாட்டை உருவாக்குவதோ, ஈரானிடமிருந்து கச்சா எகச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதோ இயலாது.
சர்வதேச சமுதாயத்தில் பொறுப்புமிக்க நாடு என்ற வகையில் இந்தியா தனது கடமையை சிறப்பாகவே செய்யும். ஈரான் விவகாரத்தில் மோதல் போக்கு உருவாவது தவிர்க்கப்பட வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment