டமாஸ்கஸ்:சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு துவங்கிய ஜனநாயக ரீதியிலான மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு இன்று ஓர் ஆண்டு நிறைவுறுகிறது.
கடுமையான மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும் தொடர்கதையாக மாறிவிட்ட சிரியாவில் இதுவரை 8500 பேர் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டம் துவங்கிய நாள் முதல் சிரியா ரா|ணுவம் கைது செய்த எதிர்ப்பாளர்களும், சிவிலியன்களும் திட்டமிடப்பட்ட சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கூறுகிறது.
கட்டமைக்கப்பட்ட முறையில் சிவிலியன்கள் மீது சிரியா அரசு நடத்திவரும் தாக்குதல்களின் துல்லியமான ஆதாரங்களை ஆம்னஸ்டி புதன்கிழமை சமர்ப்பித்த அறிக்கை விளக்குகிறது.
நேரடி சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் 31 வகையான சித்திரவதைகளை குறித்து ஆம்னஸ்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவின் நிலைமையைக் குறித்த அறிக்கையை சர்வதேச க்ரிமினல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று ஆம்னஸ்டி வலியுறுத்தியுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மட்டுமே இத்தகையதொரு முடிவை எடுக்க முடியும். ராணுவத்தினரையும், போலீசாரையும் கொலைச் செய்யும் தீவிரவாதிகளை தாங்கள் கொலைச் செய்வதாக ஈவு இரக்கமற்ற பஸ்ஸாரின் அரசு நியாயப்படுத்துகிறது
உடல் முழுவதும் தாக்குதல், சிகரெட் நெருப்பால் சுடுதல், மின்சார அதிர்ச்சியை கொடுத்தல், சிறைக் கைதிகளுக்கு முன்பாக வைத்து பாலியல்ரீதியாக பலாத்காரம் செய்தல், டயரில் கட்டி தூக்கி தாக்குதல், கால் நகங்களை பிடுங்குதல் உள்ளிட்ட சித்திரவதைகள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பெரும்பாலான கைதுகள் நீண்டகால அடிப்படையிலாகும். வழக்கறிஞர்களையோ, உறவினர்களையோ சந்திக்க அனுமதிக்கவில்லை. சிறைக் கைதிகளை மெளனிகளாக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்று ஆம்னஸ்டி கூறுகிறது.
சிரியாவில் இருந்து 2,30,000 பேர் புலன் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் உள்ளனர். புலன் பெயர்வதை தடுப்பதற்கு துருக்கி, லெபனான் எல்லைப் பகுதிகளில் கண்ணி வெடிக்குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment