Facebook Twitter RSS

Monday, March 19, 2012

Widgets

மோடியை புகழும் டைம் பத்திரிகையின் கட்டுரை: சர்ச்சையை கிளப்புகிறது!


The Time magazine cover with the Gujarat chief minister
புதுடெல்லி:அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான டைம் மாத இதழும், அமெரிக்காவில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஆய்வு நிறுவனமான ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்ட்யூசனும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு புகழாரம் சூட்டி வெளியிட்டுள்ள கட்டுரைகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
சனிக்கிழமை வெளியான டைம் மாத இதழின் ஆசியா பதிப்பின் புதிய வெளியீட்டில் அட்டைப் படம் சகிதம் மோடிக்கு புகழாரம் சூட்டி இரண்டு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக மயமாக்கப்பட்ட மாநிலமாக குஜராத்தை மாற்றியவர் என்று மோடியை புகழும் கட்டுரை, 2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பிரதமர் பதவிக்கு மோடியை தூக்கிப்பிடிக்கிறது.
உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சிக்கும், பிரதமர் பதவிக்கு பரிசீலனைக்கப்பட வாய்ப்புள்ள காங்கிரஸின் இளம் தலைவர் ராகுல் காந்திக்கும் மோடி கடுமையான சவாலாக இருப்பார் என டைம் கட்டுரை கூறுகிறது.
அதேவேளையில் இக்கட்டுரைகள் 2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை மூலம் களங்கப்பட்ட தனது இமேஜை மேம்படுத்துவதற்காக மோடி நடத்தும் பிரச்சார பணியின் ஒரு பகுதி என சுட்டிக்காட்டி மனித உரிமை ஆர்வலரான டீஸ்டா செடல்வாட் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் இனப் படுகொலைகள் நிகழ்ந்து அண்மையில்தான் 10 ஆண்டுகள் நிறைவுற்றன. இவ்வளவு காலம் கழிந்தபிறகும் நீதி கிடைக்காத பாதிக்கப்பட்ட மக்களின் துயரமான சூழலையும், வளர்ச்சி என்ற பெயரால் மோடி மிகைப்படுத்தி காட்டும் புள்ளி விபரங்களையும் இந்திய மாத இதழ்கள் துல்லியமாக வெளிக் கொணர்ந்துள்ளன.
இச்சூழலில் சர்வதேச வெளியீடுகளான டைம் பத்திரிகையும், ப்ரூக்கிங் இன்ஸ்ட்யூசனும் கட்டுரைகளை வெளியிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று டீஸ்டா ஸெடல்வாட் கூறுகிறார்.
இம்மாதம் 16-ஆம் தேதி ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்ட்யூசன்ஸ் மோடிக்கு புகழாரம் சூட்டி கட்டுரை வெளியிட்டிருந்தது.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பிரதமராக தேர்வுச்செய்ய வாய்ப்புள்ள, மிகவும் மதிக்கத்தக்க(?) அரசியல் தலைவரான மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கவில்லை என்ற செய்தியுடன் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்ட்யூசனின் கட்டுரை ஆரம்பிக்கிறது.
மோடி என்றால் வர்த்தகம். அவரால் இந்தியாவை வழிநடத்த இயலுமா? என்ற தலைப்புடன் டைம் பத்திரிகை கட்டுரையை வெளியிட்டுள்ளது. நிபுணரான நிர்வாகியாகவும், சர்ச்சைக்குரிய நபராகவும் மோடியை சித்தரிக்கும் கட்டுரை, குஜராத் இனப்படுகொலை மோடியின் பிரதமர் மோகத்திற்கு பின்னடைவாக அமையுமா? என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்துகிறது.
டைம் மற்றும் ப்ரூக்கிங்ஸின் கட்டுரைகளுக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இக்கட்டுரைகள் ஒருதலைபட்சமானது என்றும், முன்னரே திட்டமிட்டு எழுதப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சக்திசின்ஹ் கோஹ்லி.
மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் 12 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாக கூறும் டைம், 1992-93 காலக்கட்டத்தில் 16.75 சதவீதம் வளர்ச்சி குஜராத்தில் ஏற்பட்டதை குறிப்பிட்டிருக்க வேண்டும். இக்கட்டுரைகள் குஜராத்திற்கும், இந்தியாவிற்கும் அவமானத்தை பெற்றுத் தருவதாகும். பொய்யை தொடர்ந்து கூறி அதனை உண்மையாக்க நினைக்கும் மோடியின் முயற்சிதான் இவை என்று கோஹ்லி கூறுகிறார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets