ஹவானா:கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் தலைவரான ஃபிடல்காஸ்ட்ரோவுடன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பெனடிக்ட் சந்திப்பை நடத்தியுள்ளார்.
ஹவானாவில் புரட்சி சதுக்கத்தில் நடந்த திருபலிக்கு முன்னர் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர்.
போப் பெனடிக்ட்டுடன் சந்திப்பை நடத்துவதில் தனக்கு மகிழ்ச்சியே என்று முன்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரையில் ஃபிடல் காஸ்ட்ரோ கூறியிருந்தார். அதேவேளையில், புரட்சி சதுக்கத்தில் நடந்த திருபலியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருபலியுடன் போப் தனது 3 தின கியூபா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கத்தோலிக்க தலைவர் கியூபா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1998-ஆம் ஆண்டு ஜான்பால்-II கியூபா சென்றிருந்தார்.
கியூபாவில் சர்ச்சுக்கும், அரசுக்கும் இடையே அண்மையில் கூடுதல் இடைவெளி குறைந்திருந்தது. ஆனால், கியூபா மக்கள் மேலும் திறந்த மனது கொண்ட சமூகமாக மாறவேண்டும் என்ற போப்பின் கருத்திற்கு பதில் அளித்துள்ள அரசு வட்டாரங்கள், இதன் மூலம் நாட்டில் அரசியல் மாற்றம் எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளன.
அதேவேளையில் பொருளாதார சீர்திருத்தம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment