Facebook Twitter RSS

Tuesday, March 20, 2012

Widgets

பிளவை நோக்கி கர்நாடகா பா.ஜ.க!



பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி பிளக்கும் சூழல் உருவாகியுள்ளது. முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மாநிலங்களவை தேர்தலில் தனது வேட்பாளரை அறிவித்துள்ளார். முதல்வராக தன்னை மீண்டும் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை மேலிடம் ஏற்றுக்கொள்ளாததை தொடர்ந்து எடியூரப்பா இம்மாதம் 30-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் தனது ஆதரவாளரை வேட்பாளராக நிறுத்த தீர்மானித்தார்.
அதேவேளையில் எடியூரப்பாவிற்கு மீண்டும் முதல்வர் பதவி அளிப்பது தொடர்பாக கட்சி தலைமை ஆலோசித்து வருவதாகவும், அவர் சிறிது பொறுமையோடு இருக்கவேண்டும் என்றும் பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் கட்கரி கூறியுள்ளார். எடியூரப்பா முதல்வராக பதவி வகித்த வேளையில் அவரது அரசியல் விவகார செயலாளராக பதவி வகித்த பி.ஜே.புட்டசாமி என்பவர்தாம் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். புட்டசாமி தற்போதைய முதல்வர் சதானந்தா கவுடாவின் அரசியல் விவகார செயலாளராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க சார்பாக மாநிலங்களவையின் 3-வது உறுப்பினர் பதவிக்கு தான் மனு தாக்கல் செய்ததாக புட்டசாமி கூறினார். கட்சி உத்தரவின் அடிப்படையிலா மனு தாக்கல் செய்தீர்கள்? என்ற கேள்விக்கு புட்டசாமி ‘அது எனக்கு தெரியாது’ என்று பதில் அளித்தார். 10 எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் தான் போட்டியிடுவதாக அவர் கூறினார். புட்டசாமி எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து பா.ஜ.க புட்டசாமியை சஸ்பெண்ட் செய்துள்ளது. நேற்று காலையில் பா.ஜ.க மாநில தலைவர் கெ.எஸ்.ஈஸ்வரப்பா கட்சியின் 2 அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவித்திருந்தார்.
எடியூரப்பாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 70 பேர் பெங்களூருக்கு அருகே ஒரு ரிசார்டில் முகாமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் பா.ஜ.கவில் நடக்கும் கருத்துவேறுபாடு காரணமாக மாநிலத்தில் அரசு நிர்வாகம் இயங்கவில்லை என்றும், ஆகையால் அரசை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets