Facebook Twitter RSS

Saturday, August 24, 2013

Widgets

மிக மோசமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு

எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தனது வரலாற்றில் மோசமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர். இராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசு கடந்த மூன்று தசாப்தங்களில் ஆட்சியில் இருந்த நிர்வாகம் எடுக்காத நடவடிக்கையாக அந்த அமைப்பின் உயர்மட்டத் தலைவர் மொஹமட் பதீயை கைது செய்து சிறைவைத்துள்ளது.

இதன்படி எகிப்தின் சமூக, அரசியல் மற்றும் மத அடிப்படையில் அதிக தாக்கம் செலுத்தும் அமைப்பை கட்டுப்படுத்துவதில் முன்னரைவிடவும் கடுமையான சட்டங்களைக் கையாள்வதை புதிய அரசை அமைத்த இராணுவத் தளபதி ஜெனரல் அப்தல் பத்தாஹ் அல் சிசி உறுதி செய்துள்ளார். 70 வயதான பதீ கடந்த செவ்வாய்க்கிழமை கெய்ரோவில் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். ஏற்கனவே முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பல முன்னணி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது மீண்டும் ஒருமுறை ரசகசியமாக இயங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
“நாஸர் காலத்தைப் போன்று நாம் இரகசியமாக இயங்க வேண்டிய சூழலை நெருங்கியிருக்கிறோம். ஆனால் இம்முறை மிக மோசமாக உள்ளது” என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் கிஹாத் அல் ஹதத் குறிப்பிட்டுள்ளார். 1954 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த இராணுவ ஆட்சியாளர் கமால் அப்தல் நாஸர் சகோதரத்துவ அமைப்பை முழுமையாக அழிக்க முற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கண்காணிக்கப்படும் அவதானம் இருப்பதால் இணைய தளங்களூடான தொலைத்தொடர்புகளை தற்போது தவிர்த்து வருவதாக ஹதத் குறிப்பிட்டார். அத்துடன் பல தலைவர்களும் பொது இடங்களில் வெளிப்படாமலும், கண்காணிக்கப்படும் அவதானம் இருப்பதால் கையடக்க தொலைபேசிகளை தவிர்த்தும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு முறை இடத்தை மாற்றியபடியும் இருப்பதாக ஹதத் விபரித்துள்ளார். கடந்த ஒருவார வன்முறைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான முர்சி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் உயர்மட்ட தலைவர் பதீயின் மகன், மற்றொரு தலைவரான மொஹமட் அல் பல்தஜியின் 17வயது மகள் மற்றும் சகோதரத்துவ அமைப்பின் நிறுவனர் ஹஸன் அல் பன்னாவின் பேரன் காலித் பெர்னாஸ் அப்தல் பாஸித் ஆகியோரும் கொல்லப்பட்டோருள் அடங்குகின்றனர்.
“அமைப்பின் கட்டமைப்பு எவ்வாறு செயற்படுகிறது என்று கேட்பது இறந்துகொண்டிருப்பவரை பார்த்து எவ்வாறு செயற்படுகிaர்கள் என்று கேட்பது போல் உள்ளது” என்று கைதாகும் அபாயம் காரணமாக தமது பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மற்றொரு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, எதிர்த்து நிற்பதுதான் இராணுவ சதிப்புரட்சி தலைவர்களை பலவீனப்படுத்த ஒரே தேர்வாக உள்ளது என ஹதத் விபரித்துள்ளார். ஆனால் 48 நாட்கள் சகோதரத்துவ அமைப்பு இந்த கொடியை ஏந்தி நின்றது இப்போது அது எகிப்து மக்களிடம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் ஜெனரல் சிசியின் வெற்றி குறுகிய காலமாகவே இருக்கும் என சகோதரத்துவ அமைப்பு நம்புகிறது. புதிய அரசின் ஒடுக்குமுறை படை நடவடிக்கை மூலம் தலைநகர வீதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் நீண்ட கால அடிப்படையில் சகோதரத்துவ அமைப்பு ஆழமாக வேறூன்றவும் சாதகமான வாய்ப்புகள் இருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.
ஆனால் மொஹமத் பதீயின் கைதை தொடர்ந்து அந்த அமைப்பின் இடைக்கால உயர்மட்ட தலைவராகத் தெரிவாகி இருக்கும் மஹ்மூத் இஸ்ஸத் அந்த அமைப்பின் இரும்பு மனிதராக கருதப்படுபவராவார்.
அவரது பழைமைவாத சிந்தனை காரணமாக இவ்வாறு அழைக்கப்படுவதாக சகோதரத்துவ அமைப்பு தொடர்பான நிபுணர்கள் கூறியுள்ளனர். தலைவராக நியமிக்கப்பட்ட தைத் தொடர்ந்து இஸ்ஸத்தும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் தலைமறைவாகியுள்ளார்.
இது சகோதரத்துவ அமைப்பு சீர் திருத்தவாதிகளுக்கு பதிலாக கடும் போக்காளர்களின் கைகளுக்கு செல்ல வாய்ப்பாக அமையும் என வொஷிங்டனை மையமாகக் கொண்டு இயங்கும் மத்திய கிழக்கு நிலையத்தின் சகோதரத்துவ அமைப்பு தொடர்பான ஆய்வாளர் கலீல் அல் அனானி கூறியுள்ளார்.
மறுபுறத்தில் இடைக்கால அரசு மீண்டும் முபாரக் காலத்து அரசியல் சட்டமான மத அடிப்படையிலான கட்சிகளை அரசியலில் ஈடுபட தடைவிதிக்கும் சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதேபோல் சகோதரத்துவ அமைப்பை சட்ட அடிப்படையில் தடை செய்யவும் இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இராணுவம் ஒவ்வொரு நகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதால் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்துவதிலும் சிக்கலை எதிர்நோக்குவதாக தெரியவருகிறது. சகோதரத்துவ அமைப்பின் உள்ளூர் கட்டமைப்புகளின் ‘குடும்பங்கள்’ என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான கூட்டங்களும் குழம்பி இருப்பதாக நைல் பிராந்தியத்தின் சகோதரத்துவ அமைப்பின் முன்னணி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆர்ப்பாட்டங்களுக்கு அதரவாளர்களை ஆனுப்புவதிலும் சிக்கலை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.
‘சிசி இப்போது ஒரு இரயில் போலத்தான் செயற்படுகிறார். தனது வழியில் குறுக்கிடும் அனைத்துடனும் மோதிக்கொண்டு செல்கிறது” என்று குறிப்பிட்ட அவர், “சிசியின் செயலுக்கு ஆரவாரிப்பவர்களுக்கு தெரியாது அடுத்து அவர்கள்தான் அந்த இரயிலில் மோதவுள்ளார்கள் என்று” எனவும் தெரிவித்தார்.
அதேவேளை எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை ஒடுக்கும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையின் ஒரு கட்டமாக அதன் ஊடக பேச்சாளர் அஹமட் ஆரிப் நேற்று கெய்ரோவில் கைது செய்யப்பட்டார்.ஆரிப் நஸ்ர் நகரில் உள்ள தனது சிற்றப்பா வீட்டில் தங்கியிருக்கும் தகவல் பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்ததையடுத்து நேற்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டியது தொடர்பில் அதன் ஊடக பேச்சாளருக்கு உள்ள பங்கு குறித்து சட்ட மா அதிபர் விசாரணை நடத்த உத்தரவிட்டதையடுத்தே அவர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் லுதினன்ட் மொஹமட் இப்ராஹிம் குறிப்பிட்டார். ஏற்கனவே முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உயர்மட்ட தலைவர் உட்பட பெரும்பாலான தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-தகவல் தினகரன்

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets