லண்டன் : இந்தியா வல்லரசாகும் வாய்ப்பில்லை என லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வந்தாலும், வல்லரசாகும் வாய்ப்பு இந்தியாவுக்கு இல்லை என ”இந்தியா - தி நெக்ஸ்ட் சூப்பர் பவர்?” என லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ”இந்தியா ஒரு வல்லரசு” என தெரிவித்ததை இந்தக் கட்டுரை
சுட்டிக்காட்டி அதனை ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து என புறம் தள்ளியுள்ளது.ஒன்பது ஆய்வாளர்கள் இந்தியா பற்றி எழுதியுள்ள அறிக்கைகள் இந்த ஆய்வுக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசு நிர்வாகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் ஆகியவற்றை ஆராய்ந்து இந்த கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியா வல்லரசு ஆக முடியாததற்கு ஏழு காரணங்கள் இதில் கூறப்பட்டுள்ளது. நக்ஸலைட்கள் பிரச்சினை, ஹிந்துத்வவாதிகளின் நயவஞ்சகம், மத்திய அரசின் இழிவான செயல்பாடுகள், பொருளாதாரத்தில் பெருகி வரும் ஏழை - பணக்காரர் வேறுபாடு, ஊடகங்களின் பின்தங்கிய நிலைமை, சுற்றுச்சூழல் உணர்வின்மை,கூட்டணி அரசினால் ஏற்படும் கொள்கை வேறுபாடுகள் ஆகியவை பிரதான காரணங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நிலவி வரும் சாதிய வேறுபாடுகள், எங்கும் நிறைந்திருக்கும் ஊழல் ஆகியவையும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் உணவு, இலக்கியம், இசை, விளையாட்டு போட்டிகள் உலகெங்கும் வரவேற்பை பெற்றிருந்தாலும் சீனாவுக்கு இணையாக இந்தியா வல்லரசாக ஆகும் என மேற்கத்தேயவர்கள் நினைப்பது தற்போதுள்ள சூழலில் நடைபெற போவதில்லை என லண்டன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கட்டுரைகளை ராமச்சந்திர குஹா, ராஜீவ் ஸிபல்,இஸ்கந்தர் ரஹ்மான், நிகோலஸ் பிலாரல்,ஓலிவர் ஸ்டுன்கெல், ஹரீஷ் வான்கடே, முகுலிகா பானர்ஜி, ஆன்ட்ரூ சான்செஸ் மற்றும் சந்தீப் சென்குப்தா ஆகியோர் சமர்ப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment