Facebook Twitter RSS

Friday, March 16, 2012

Widgets

பொதுச் சொத்து - எச்சரிக்கை!!!...




இப்னு அப்பாஸ் (ரழி), தனக்கு உமர் (ரழி) அவர்கள் தெரிவித்ததாகப் பின்வரும் சம்பவத்தை அறிவிக்கின்றார்கள் : கைபர் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி 'அவர் ஷஹீத், இவர் ஷஹீத்', என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள் 'இவரும் ஷஹீத்' என்றனர். அதுகேட்ட நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அப்படிக் கூற வேண்டாம். அவர் யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்களில் ஒன்றான ஓர் ஆடையை அல்லது மேலங்கியைத் (திருட்டுத் தனமாக) அபகரித்துக் கொண்டார். அந்த ஆடையுடன் அவரை நான் நரகில் கண்டேன்'' என்று கூறி விட்டு, ''உமர் இப்னு கத்தாபே! நீர் சென்று முஃமீன்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள்'' என்று மக்களுக்கு மத்தியில் சொல்வீராக'' என்றார்கள்.




(ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம், கிதாபுல் ஈமான் - 182)


யுத்தத்தின் போது எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட (கனீமத்) பொருட்களிலிருந்து ஓர் ஆடையைத் திருட்டுத்தனமாக அபகரித்துக் கொண்ட நபருக்கு நேர்ந்த கதி இந்த ஹதீஸில் சித்தரிக்கப்படுகிறது. பொதுச் சொத்துக்களை அபகரிப்போர், அவற்றில் கையாடல் செய்வோர், அதிகாரத்தைப் பயன்படுத்தி தம் சொந்த நலன்களை ஈட்டிக் கொள்வோர் போன்றோருக்கு இந்த ஹதீஸில் மிகுந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதைக் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் கனீமத் பொருட்களை அல்லாஹ் கூறிய பிரகாரமே பங்கிடுவார்கள். ஆனால், அவ்வாறு உத்தியோகப்பூர்வமாக அப்பொருட்கள் பங்கிடப்படு முன்னர் அப்பொருட்களில் ஏதாவது ஒன்றையோ பலதையோ தனிப்பட்ட முறையில் திருடுவது குற்றமாகும். 'குலூல்' எனப்படும். இது பெரும் பாவங்களில் ஒன்று என்பது இஜ்மாவான முடிவு என இமாம் நவவி (ரஹ்) கூறுகின்றார்கள்.

நாம் விளக்க எடுத்துக் கொண்ட ஹதீஸிலிருந்து பல உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

அல்லாஹ் மார்க்கத்திற்காக நடைபெற்ற யுத்தமாயினும் அதில் கிடைத்த கனீமத்தை அது பங்கிடப்பட முன்னர் ஒருவர் திருடினால் அவர் நரகம் நுழைவார்.

அவரது ஈமானிலும் அது பாதிப்பை உண்டு பண்ணும்.அவர் மோசடி செய்த பொருள் அற்பமானதாயினும் சரியே.ஜிஹாதில் ஈடுபட்டார் என்ற சிறப்பை அவர் பெற மாட்டார். அதாவது ஷஹீத் எனப்பட மாட்டார்.அவர் கொல்லப்பட்டால் புனித உயிர்த்தியாகத்தின் சிறப்புக் கிட்டாது.

அற்பமானதாக இருப்பினும் சரியே

ஸஹீஹ் முஸ்லிமில் வந்துள்ள இன்னுமொரு அறிவிப்பில், கைபர் யுத்தத்தின் போது எதிரிகளது அம்பெய்தலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்ட ஒருவரைப் பார்த்து 'அவர் உயிர்த்தியாகம் செய்திருப்பதால் வாழ்த்துக்கள்' என ஸஹாபாக்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு ''முஹம்மதின் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் (அல்லாஹ்) மீது ஆணையாக கைபரில் கிடைத்த கனீமத்கள் பங்கிடப்படுவதற்கு முன்னர் அவற்றிலிருந்து அவர் அபகரித்த ஒரு சிறிய போர்வை (ஷம்லா) அவர்மீது நெருப்பாகப் பற்றி எரிகிறது'' என்றார்கள். இதுகேட்டு மக்கள் பதட்ட முற்றிருக்கையில் செருப்பின் ஒரு தோல் வார் அல்லது இரண்டு வார்களை எடுத்துக் கொண்டு அங்கு வந்த ஒரு நபர் 'இவை கைபரில் நான் (திருட்டுத்தனமாகக கனீமத்திலிருந்து) எடுத்தவை' என்றார். அதுகேட்ட நபியவர்கள் ''நெருப்பிலான ஒரு வார் அல்லது நெருப்பிலான இரண்டு வார்கள்'' என்றார்கள்.


(ஸஹீஹ் முஸ்லிம் கிதாபுல் ஈமான் - 183)

அதாவது செருப்பு வாரை அபகரிப்பவர் கூட அதனை அணிந்த வண்ணம் நரகில் இருப்பார் என்பதே இதன் பொருளாகும். இந்த வாரின் காரணமாகத் தான் அவர் நரகில் நுழைவார் என்றும் பொருள் கொள்ள முடியும். மேலுள்ள ஹதீஸில் வந்துள்ள போர்வை விசயமாகவும் இவ்விளக்கத்தையே கூறலாம்.

ஸஹீஹுல் புஹாரியில் வந்துள்ள மற்றொரு ஹதீஸில் கர்கரா என்பவர் யுத்த சந்தர்ப்பத்தில் ஆடையொன்றை அபகரித்ததால் அவரும் நரகவாதி என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (கிதாபுல் ஜிஹாத் - 190)

கைபரின் போது இறந்த இன்னுமொரு நபருடைய ஜனாஸாவுக்கான தொழுகையை நடாத்தி வைப்பதற்கு நபியவர்கள் மறுத்தார்கள். அப்போது அங்கிருந்தோர் ஆச்சரியமுள்ளு ''அவர் அல்லாஹ்வின் பாதையில் போராடிக் கொண்டே யுத்தப் பொருளைத் திருடியிருக்கின்றார்'' என்று நபியவர்கள் கூறியதாகவும் அவரது பொட்டலங்களை ஸஹாபாக்கள் ஆராய்ந்து பார்த்த போது இரண்டு திர்ஹம்கள் கூட பெறுமதியற்ற யூதர்களது ஆபரணமொன்று அங்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஆதாரம் : மாலிக் - ஜிஹாத் - பக்.458, அஹ்மத் : 4-411, அபூதாவூத் - 2710, நஸஈ - 4:64, இப்னு மாஜா – 2848, ஹாகிம் - 2:127)

இங்கும் கூட இரண்டு திர்ஹம்கள் திருடப்பட்டமைக்காக அவர் மீது தொழுகை நடாத்த நபியவர்கள் மறுத்தமை பொதுச்சொத்தில் - அது சிறியதாயினும் பெரியதாயினும் எவரும் ஆசைவைக்கலாகாது என்பதை உணர்த்துவதற்காகும்.

அந்த ஹதீஸ்களிலிருந்து அடியார்களுடன் தொடர்பான உரிமைகள் (ஹுகூகுல் இபாத்) எவ்வளவு தூரம் மதிக்கப்பட வேண்டும் என்பதைப் புரிய முடியும். குறிப்பாக சொத்துக்களில் - அவை தனி மனிதர்களுக்குரியவையாகவோ பொதுச் சொத்துக்களாகவோ இருப்பினும் அவற்றில் - நியாயமற்ற விதத்தில் கைவைப்பது, அனுபவிப்பது பாரதூரமான குற்றமாகும். அவை அற்பமானவையாக இருப்பினும் சரியே. முதலில் கொஞ்சம் எடுப்பவன் காலப் போக்கில் அதிகமாக எடுப்பதற்குத் தலைப்பட்டு விடுவார் என்பதனாலேயே இந்தக் கடுமையான தண்டனைக்கு அவர் உள்ளாக்கப்படுகின்றார்.

அம்பலப்படுத்தல்

கனீமத் பொருட்களில் திருடுபவர் அந்தப் பொருட்களுடனேயே மறுமையில் வந்திருப்பார் என குர்ஆனும் ஹதீஸும் தெளிவாகவே குறிப்பிடுகின்றன. அந்த நபர் திருடியிருப்பது யாருக்கும் பொதுவான சொத்து என்பதால் தான் அல்லாஹ் அந்த நபரைப் பலருக்கு மத்தியில் அம்பலப்படுத்துகிறான்.

''(யுத்த பொருட்களில்) அபகரித்தவர் தான் அபகரித்த பொருட்களுடனேயே மறுமையில் வந்து நிற்பார்' என (3:61) அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ள பிரிதொரு ஹதீஸின் சுருக்கமாவது, யுத்தப் பொருட்களில் ஆடு, குதிரை, ஒட்டகம் என்பவற்றை யாராவது ஒரு போராளி திருடினால் சுமந்து கொண்டு வருவார். அவை ஒவ்வொன்றும் சப்தமிடும். அப்போது அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'என்னைக் காப்பாற்றுங்கள்: என்று கூக்குரலிடுவார். ''உலகில் இருக்கும் போது நான் உனக்கு (தெளிவாகவே இவ்வாறு யுத்தப் பொருட்களில் மோசடி செய்வது) தவறு என்று கூறியிருக்கிறேன். எனவே, என்னால் உனக்கு எதனையும் செய்ய முடியாது'' என்று நபி (ஸல்) கூறுவார்கள். இப்படியான ஒரு துர்ப்பாக்கியமான நிலையில் முஸ்லிம்களில் எவரையும் தான் மறுமையில் ஒருபோதும் காணக் கூடாது என ஸஹாபாக்களைப் பார்த்து நபியவர்கள் கூறி, இவ்வாறான மோசடியின் பாரதூரத்தைப் பற்றி அதிக அளவு பேசினார்கள். (நீண்ட ஹதீஸின் கருத்து வடிவமே இங்கு தரப்படுகிறது. விரிவாகப் பார்க்க (ஸஹீஹ் புஹாரி, கிதாபுல் ஜிஹாத்)

பொதுச் சொத்துக்களை அல்லது பிறரது பொருட்களை எவ்வளவு அவதானத்துடனும் எச்சரிக்கையோடும் கையாள வேண்டும் என்பதனை உணர்த்த மேலுள்ள ஹதீஸ்கள் போதுமானவையாகும்.

எனவே, ஹராமாக அநியாயமாகத் தேட் பெற்ற பொருளை கழுத்தில் சுமந்து கொண்டு மறுமையில் வந்து பலரது முன்னிலையிலும் அவமானப்படும் துர்ப்பாக்கிய நிலைக்கு எவரும் ஆளாகிட நேரிடும் என்ற பயம் பொறுப்புக்களைச் சுமப்பவர்களுக்கு மிகவும் அவசியமாகும்.

அபகரிப்பின் வடிவங்கள்

யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் மட்டுமல்ல வக்ப் சொத்துக்கள், அநாதைகளது உடைமைகள், அரசசார்பற்ற நிறுவனங்களது சொத்துக்கள், அரச சொத்துக்கள், பைத்துல்மால் சொந்தமான பொருட்கள் என்பவற்றை கையாளும் போதும் இதே எச்சரிக்கை உணர்வு அவசியமாகும். பெரும்பாலானோர் இந்த விசயத்தில் மிகுந்த அசிரத்தையோடு நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் தமது பொருட்களைப் போல அவற்றை மதிப்பதில்லை. பாதுகாப்பதில்லை. மாறாக கிடைத்த சந்தர்ப்பங்களை 'நன்கு பயன்படுத்தி' அவற்றைத் துஷ்பிரயோகம் செய்கின்றனர். அலுவலகத் தொலைபேசி, காகிதங்கள், அரசாங்க வாகனம் மற்றும் உடமைகள் போன்றவற்றை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பாவிக்கின்றார்கள். இது பெரிய குற்றமாகும்.

ஒருவர் எந்தப் பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளாரோ அப்பதவியைகத் தனக்கான அல்லது தனது உறவினர்களுக்கான நலன்களை அடைந்து கொள்வதற்காக ஒருபோதும் பயன்படுத்தலாகாது. ஏனெனில் பிறரது சொத்தையோ தனது அதிகாரத்தையோ சட்ட ரீதியற்ற முறையில் முறைகேடாகப் பயன்படுத்துவது பெரும் துரோகமாகும்.

சம்பளத்துக்கு அப்பால்

அரசுகளும் கம்பெனிகளும் வேலையாட்களுக்குக் குறிப்பிட்ட அளவு சம்பளத்தை வழங்குகின்றன. ஆனால், அத்தொகையை விட அதிகமான அளவைப் பெற்றுக் கொள்ள ஒருவர் குறுக்குவழிகளை நாடினால் அது ஹராமான சம்பாத்தியமாகவே இஸ்லாத்தில் கணிக்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : ''நாம் நமது பொறுப்பொன்றுக்காக ஒருவரை அதிகாரியாக நியமித்து சம்பளமாக அவருக்கு ஒரு தொகையைக் கொடுக்கையில் அதற்கு மேலதிகமாக அவர் எடுத்தால் அது (குலூல்) அபகரிப்பாகும்''. (அபூதாவூது)

ஏனெனில், பலவீனர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் செலவிடப்பட வேண்டிய நிலையிலுள்ள அல்லது பொதுப்பணிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய பணத்தையே அவர் மோசடி செய்கின்றார் என்பதனால் தான் நபியவர்கள் இவ்வாறு கூறியிருக்கின்றார்கள்.

ஆனால், நம்பி ஒப்படைக்கப்பட்ட ஒரு களஞ்சியத்திலிருந்து, அல்லது நிதியிலிருந்து ஒருவர் மிகவுமே அற்பமான அளவைக் கூட திருடுவது, சட்டரீதியற்ற முறையில் அபகரிப்பதாகும் என்று நபி (ஸல்) வஅர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள் :

''உங்களில் ஒருவரை நாம் ஒரு பொறுப்புக்காக நியமித்து அவர் எம்மிடம் காட்டாமல் ஒரு தையல் ஊசியை அல்லது அதனை விட அற்பமான ஒரு பொருளi மறைத்தாலும் அது (குலூல்) மோசடியாகும். அதனை எடுத்துக் கொண்டு மறுமைநாளில் அவர் வருவார்.. .. உங்களில் ஒருவரை ஒரு பொறுப்புக்காக நாம் நியமித்தால் (அவர் சேகரித்த பொருள்) குறைந்த அளவாயினும் அதிக அளவாயினும் (அவை அனைத்தையும், அவர் எம்மிடம்) எடுத்து வரட்டும். அவருக்கு அப்பொருளிலிருந்து எந்த அளவு (நியாயமாக, சம்பளமாகவோ அல்லது சட்டபூர்வமாகவோ) வழங்கப்படுகிறதோ அந்த அளவை அவர் எடுத்துக் கொள்ளட்டும். அவர் எடுக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டவற்றை அவர் விட்டு விடட்டும்''. (ஆதாரம் : முஸ்லிம், கிதாபுல் இமாரா – 1833)

எனவே. சட்ட ரீதியற்ற முறையிலும் குறுக்கு வழிகளிலும் ஒருவர் மேலதிகமாக அனுபவிக்க முயல்வது குற்றமாகும்.

அன்பளிப்பும் லஞ்சமும்

அதுமட்டுமின்றி அபூஸயீத் (ரழி) அவர்களது கருத்துப்படி அதிகாரிகள் குடிமக்களிடம் இருந்து பெறும் அன்பளிப்புக்கள் (புகைவள) கூட (குலூல்) மோசடியாகவே அமையும்.

நபி (ஸல்) அவர்க்ள இப்னு லுத்பியா என்பவரை ஸகாத் சேகரிக்க அனுப்பினார்கள். தான் சேகரித்த பொருட்களில் ஒருபகுதியைச் சுட்டிக்காட்டிய லுத்பியா அவர்கள் அவை ஸகாத் பணம் என்றும் வேறு ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி அவை தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்தவை என்றும் கூறிய போது நபியவர்கள் 'இவர் தனது தாயின், தகப்பனின் வீட்டில் இருந்திருந்தால் இந்த அன்பளிப்புக்கள் கிடைத்திருக்குமா? என்று வினவி விட்டு ''எவன் கைவசம் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவர் (லுத்பியா) இந்தப் பொருட்களில் எதனையும் எடுக்கலாகாது. அப்படி எடுத்தால் (மறுமையில்) அதனைத் தனது கழுத்தில் சுமந்து கொண்ட தான் அவர் வருவார்..'' என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தனது இரண்டு கைகளையும் கமுக்கட்டு தெரியுமளவுக்கு உயர்த்தி, அல்லாஹ்வே நான் எத்தி வைத்து விட்டேனா?'' என்று கேட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சத்தை அல்லது அன்பளிப்புக்களைப் பெறுகின்ற பொழுது மறுபுறத்தில் சமூகக் கடமைகளில் அவர்கள் கோட்டை விடுவதற்கு ஈடாகவே அவற்றைப் பெறுவார்கள். பக்கசார்பான தீர்ப்புகளை வழங்குவதற்கோ வரியிலிருந்து லஞ்சம் வழங்குவோரை விலக்கிக் கொள்வதற்கோ, விஷேச சலுகைகளை அவர்களுக்கு வழங்குவதற்கோ அதிகாரிகள் லஞ்சத்தை அல்லது அன்பளிப்பைப் பெறுவது முழு சமுதாயத்திற்கும் எதிராக அவர்கள் இழைக்கும் துரோகமாகும். அப்படியான நடைமுறைகள் இருக்கும் சமுதாயம் குட்டிச்சுவராகி சின்னாபின்னப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும் அந்த சமூகம் பயந்தாங்கொள்ளியாகி எதிரிகளது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி விடும். இது இறைவன் விதித்த நியதியாகும்.

எனவே, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எந்த சமுதாயத்தில் (குலூல்) மோசடி பரவலாக இடம் பெறுகின்றதோ அவர்களுக்கு மத்தியில் அச்ச உணர்வு தோற்றுவிக்கப்படும்''. (முஅத்தா மாலிக் - கிதாபுல் ஜிஹாத்-26)

இந்த குலூல் எனப்படும் மோசடியில் ஈடுபடும் ஒருவர் அந்த சந்தர்ப்பத்தில் ஈமானுடன் இருக்க மாட்டார் என்பதை பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் பிரஸ்தாபித்தார்கள் : ''உங்களில் ஒருவர் மோசடி செய்கையில் அவர் முஃமினாக இருக்க மாட்டார். உங்களை நான் அப்படியான நிலையை விட்டும் கடுமையாக எச்சரிக்கிறேன்''. (முஸ்லிம் - கிதாபுல் ஈமான் - 103)


முன்னோரின் பேணுதல்

எனவே, அற்பமான பொருளாயினும் தனி மனிதர்களுக்கோ அரசுக்கோ, நிறுவனங்களுக்கோ அவை சொந்தமாக இருந்தாலும் அவற்றை தப்பான, முறையற்ற வழிகளில் விழுங்குவது மிகப் பெரிய குற்றம என உணர்ந்த எமது முன்னோர் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டார்கள். தமக்குக் கிடைத்த அதிகாரங்களையும், பதவிகளையும் அமானிதமாகவும் அல்லாஹ்வுக்கு கணக்குக் காட்ட வேண்டி பொறுப்புக்களாகவுமே கணித்து கடமை உணர்ச்சியின் உச்சத்திலிருந்து செயல்பட்டிருக்கின்றார்கள்.

மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கையில் தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்து, தன்னிடம் இருந்த பைத்துல்மாலுக்குச் சொந்தமான ஓர் ஒட்டகத்தையும், அடிமை ஒருவரையும், கந்தலான, மயிர்கள் கொட்டிய ஒரு துணியையும் பைத்துல்மாலில் சேர்த்து விடும்படி பணித்தார்கள். அவர்களது மரணத்தின் பின் அவை மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒருவர் புதிய கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் வந்து விசயத்தைக் கூறிய பொழுது, உமர் (ரலி) அவர்கள் பூமியில் கண்ணீர் சிந்தும் வரை அழுதார்கள். ஆனால், அவற்றை பைத்துல்மாலில் சேர்க்கவே அவர்கள் விரும்பினார்கள். இதுபற்றி அறிந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவாகள் 'இவற்றை அபூபக்கரின் குடும்பத்தாரிடமிருந்து பறிக்கப் பார்க்கின்றீர்களா? அவர்களிடம் மீண்டும் ஒப்படையுங்கள்' என்று கூறிய பொழுது, உமர் (ரலி) அவர்கள், ''எனது ஆட்சியில் இது நடக்காது'' என்றார்கள்.

உமர் (ரலி) தனது மகனின் ஒட்டகையொன்று சந்தையில் நிற்கக் கண்டார்கள். அதன் உடல் முன்னரைவிடச் சற்றுப் பருத்திருந்தது. அதனை மேய்த்தவர் மிகவுமே சிறந்த புல் தரையில் அதனை மேய்த்திருக்கலாம் என்றும் கலீபாவின் மகனது ஒட்டகை என்பதற்காக இந்த வரப்பிரசாதத்தை அவர் ஒட்டகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் நினைத்தார்கள். அதாவது. அரச செல்வாக்கினால் இப்படி நடந்திருக்கலாம் என்பது அவர்களது கணிப்பாக இருந்தது. எனவே, அதனை விற்று அதன் பெறுமதியை பைத்துல்மாலில் சேர்த்து விடும்படி அவர்கள் தனது மகனைப் பணித்தார்கள்.

ஒரு தடவை அலி (ரலி) அவர்கள், போர்வையொன்றால் போர்த்திக் கொண்டிருந்த போதிலும் குளிரால் அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அன்தாரா (ரலி) அவர்கள் ''உமக்கும், குடும்பத்தாருக்கும் பைத்துல்மாலிலிருந்து ஒரு பங்கை அல்லாஹ் வைத்திருக்கின்றான். அப்படியிருக்க நீர் குளிரால் நடுங்குவதா?'' எனக் கேட்டார்கள். அப்போது அலி(ரலி) அவர்கள், ''அல்லாஹ் மீது சத்தியமாக நான் உங்களது இந்த (பைத்துல்மால்) பணத்திலிருந்த எந்த ஒரு பகுதியையும் எடுத்து அதனைக் குறைத்து விட மாட்டேன். இந்தப் போர்வையும் கூட எனது வீட்டிலிருந்த நான் பெற்றது தான்'' என்றார்கள். (அல் பிதாயா – பாகம் 7, பக் - 3)

எனவே, பொதுச் சொத்துக்கள் மற்றும் பிறரது உடமைகள் என்பவை மிகவுமே கவனமாகக் கையாளப்படல் வேண்டும். அப்படியில்லாத போது உலகிலும் மறுமையிலும் மிகப் பெரிய நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. உலகில் சம்பாதிக்கப்பட்ட பொருள் எவ்வழியில் தேடப்பட்டது என்ற முக்கியமான கேள்விக்கு மறுமையில் சரியான பதிலை அளிக்கும் வரை ஓர் அடியானின் கால்கள் இரண்டும் இருக்கும் இடத்தை விட்டும் நரக முடியாத நிலை உருவாகும்.(திர்மிதி)

தடுக்கப்பட்ட வழியில் பெற்ற உணவை உண்டு ஆடை உடுத்தி நிற்பவனது பிரார்த்தனை கூட அங்கீகரிக்கப்பட மாட்டாது. (முஸ்லிம்)

இக்கருத்துக்களை வேறு சில நபிமொழிகள் மூலமும் விளங்க முடிகிறது. அல்குர்ஆனிலும் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :

''உங்களுக்கு மத்தியில் உங்கள் சொத்து செல்வங்களை அநியாயமான முறையில் புசிக்காதீர்கள்'' (2:188) ''அதிகமான யூத அறிஞர்களும், கிறிஸ்தவ பாதிரிகளும் மக்களது சொத்துக்களை அநியாயமான முறையில் புசிக்கிறார்கள்''. (9:34)

''அநாதைகளின் சொத்துக்களை மிகவுமே சிறந்த வழிமுறையில் அன்றி நீங்கள் (கையாள வேண்டாம்) அணுக வேண்டாம்''. (6:152)

விசுவாசிகளே! நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துரோகம் செய்யாதீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அடைமானங்களுக்கும் (பதவிகள், பொருட்கள்) நீங்கள் மோசடி (துரோகம்) செய்யாதீர்கள். (8:28)
எனவே, அல்லாஹ்வின் சந்நிதியில் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்தோடு சிறிய, பெரிய அனைத்துப் பொறுப்புக்களையும் சொத்துக்களையும் கையாள்வது அவசியமாகும். குறிப்பாக, அடியார்களுக்கு வழங்க வேண்டிய பொருள்கள் உரிமைகள் விசயத்தில் இஸ்லாம் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதை மறக்காமல் செயல்படுவது அனைவரதும் தலையாய கடமையாகும்.

துணைநின்றவைகள் :

அஷ்ஷெய்க் அல் கஸ்ஸாலி குலுகுல் முஸ்லிம், அல் இத்திஹாதுல் இஸ்லாமி அல் ஆலமி, குவைத் பக், 78-80

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, பீ பிக்ஹி; அவ்வலியாத், மக்தபது வஹ்பா – கெய்ரோ, 1999- பக், 122-123

சஈத் ஹவ்வா, அல் இஸ்லாம், பாகம் 3, பக், 6-10 மக்தபது வஹ்பா – கெய்ரோ -1977

இமாம் இப்னு ஹஜருல் அஸ்கலானி, பத்ஹுல் பாரி, பாகம் 6, பக்.185-186

அபூத்தீப் சதிக்ஹஸன், அவ்னுல் பாரீ, பாகம் 3, பக்.593-595

ஷபீர் அஹமத் தேவ்பந்தி, பத்ஹுல் முல்ஹிம் அல் மக்தபதுர் ரஷீதிய்யா, பாகிஸ்தான், பாகம் 1, பக்.229

யூசுப் கான் திஹ்லவி,ஹயாதுஸ் ஸஹாபா, இதாரது இசாஅதித் தீனிய்யாத், பாகம் 2, பக்.229-230

நன்றி
இஸ்லாமியச் சிந்தனை
அஷ் ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபழீல்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets