அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொருளாதார பத்திரிக்கையான போபர்ஸ் ஆண்டு தோறும் உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்போது புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மெக்சிகோ நாட்டு டெலிபோன் நிறுவன அதிபர் கார்லோஸ் சிலிம் முதல் பணக்காரராக தேர்வு பெற்றுள்ளார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் கோடி. அவர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து முதல் பணக்காரராக இருந்து வருகிறார்.
பல ஆண்டுகளாக பணக்காரராக முதல் இடத்தில் இருந்து வந்த மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் அதிபர் பில்கேட்ஸ் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடி.
முதலீட்டு நிறுவனங்களை நடத்தி வரும் அமெரிக்க தொழில் அதிபர் வாரன் பப்பட் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். 4-வது இடத்தை பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்டு அர்னால்டு பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி.
5-வது இடத்தை ஸ்பெயின் தொழில் அதிபர் அமென்சியோ ஒர்டேக்கோ பிடித்துள்ளார். அவருக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன.
இந்திய தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 21-வது இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடி சொத்து உள்ளது. இவர் கடந்த ஆண்டை விட 10 இடங்கள் பின்தள்ளப்பட்டு இருக்கிறார். இரும்பு தொழில் செய்து வரும் அவருக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே பின்தங்கி இருக்கிறார்.
No comments:
Post a Comment