தற்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2014ல் தன் பதவி காலத்தை பூர்த்தி செய்யும் போது அடுத்த பிரதமராக யார் வருவர் ? 1 பில்லியன் மக்களின் பிரதிநிதியாக வரும் வாய்ப்பு யாருக்கு இருக்கும் ?
பொதுவாக ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால் அதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு அந்த இலக்கை நோக்கி உழைத்திருப்பார் என்று நாம் நினைக்கலாம். ஆனால் இந்தியாவின் பிரதமர்களின் வரலாற்றை சற்று அலசி பார்த்தால் பிரதமராவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் திட்டமிடுவது ஒரு புறம் இருக்க, அவர்கள் அரசியலில் தண்ணியில்லா காட்டில் பணி மாற்றம் வாங்கியவர்களை போல் இருந்திருக்கிறர்கள் என்பது தான் அதிசயமான உண்மை.
மன்மோகன் சிங்
மன்மோகன் சிங் 2004ல் பிரதமரானார். ஆனால் 2002ல் அவர் எங்கு இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. 1999 நாடாளுமன்ற தேர்தலில் மன்மோகன் தோற்றதோடு பாஜக கூட்டணி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. ஒரு வேளை காங்கிரஸ் வெற்றி பெறும் நிலை என்றாலும் சோனியா தான் பிரதமராக அதிக வாய்ப்பிருந்தது. அதனால் தான் மன்மோகன் பிரதமராக ஆக்கப்பட்ட போது, சென்செக்ஸ் படுபாதாளத்துக்கு சென்றதோடு 3 முதல் 6 மாதங்களில் ஆட்சி கலையும் என்று கூறப்பட்டது. ஆனால் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் பெவிக்கால் ஒட்டியதை போல் 8 வருடங்களை ஓட்டி விட்டார் சிங்ஜி.
குஜ்ரால்
1997ல் குஜ்ரால் பிரதமரானது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எத்துணை பேருக்கு 1995ல் குஜ்ராலை தெரியும் என்பதே கேள்விக்குறி தான். பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத குஜ்ரால் நிலையில்லாமல் இருந்தாலும் 2 வருடங்களை ஓட்டினார்.
தேவ கவுடா
1996ல் பிரதமராக தேவ கவுடாவை நியமிக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட தேவ கவுடா பங்கேற்கவில்லை. கர்நாடக முதல்வராக இருந்த தேவகவுடா பிரதமராக வருவார் என்பதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
வாஜ்பாய்
1990களின் ஆரம்பத்தில் பிஜேபியின் புதிய முகமாக தோற்றமளித்த அத்வானியே பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஆக இருந்தார். ஹவாலா ஊழலில் தன் மேல் உள்ள குற்றச்சாட்டு தவறு என நிரூபிக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார். அச்சமயம் பார்த்து பிஜேபியும் தேர்தலில் வெற்றி பெற அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விட்டார் என்று நினைக்கப்பட்ட வாஜ்பாய் பிரதமராகி விட்டார்.
நரசிம்ம ராவ்
1989ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜீவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த நரசிம்ம ராவ் ராஜீவின் ஆலோசகராக ஒட்டி கொண்டார். அதுவே ராஜீவ் கொலையால் தீடீரென்று பிரதமர் பதவி கிடைக்க காரணமாக இருந்தது என்று உறுதியாக சொல்லலாம்.
ராஜீவ் காந்தி
இந்திரா காந்தி கொலையுண்ட சம்பவம் நடந்திருக்காவிட்டால் பைலட்டாக பணியாற்றிய ராஜீவ் காந்தி பிரதமராக வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை ஒப்பு கொண்டே ஆக வேண்டும்.
மொரார்ஜி தேசாய்
1972ல் அசுர பெரும்பானமையோடு வெற்றி பெற்ற இந்திரா காந்தி 1975ல் எமர்ஜென்ஸியை கொண்டு வந்த போது அது நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்று நினைக்கப்பட்ட போது எங்கே பிரதமர் கனவு எல்லாம். ஆனால் மொரார்ஜிக்கும் அவ்வாய்ப்பு 1997ல் கிடைத்தது.
விதிவிலக்குகள்
இந்தியா சுதந்திரமடைந்த போது சர்தார் படேல், லால் பகதூர் சாஸ்திரி போன்றோரிடமிருந்து போட்டி இருந்த போதிலும் ஜவஹர்லால் நேரு பிரதமராவர் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். லால் பகதூர் சாஸ்திரி கூட நேருவின் மரணத்தால் திடீரென்று பிரதமரானவர் தான். 1960களின் ஆரம்பத்தில் அவ்வளவாக அறியப்படாத இந்திரா, சரண் சிங், சந்திரசேகர் போன்றோரும் பிரதமருக்கான வேட்பாளர்களாக பிரபலமாக அறியப்படாதவர்கள் தாம்.
அடுத்த பிரதமர் யார் ?
இது வரை வந்த பிரதமர்களின் வரலாற்றை பார்த்தோம் என்றால் அடுத்த பிரதமர் யார் என்பதை கணிப்பது இன்னும் கடினமாகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மன்மோகன் சிங்க்குக்கே ஹாட்ரிக் சான்ஸ் கிடைக்கலாம். இல்லையெனில் இளவரசர் ராகுல் காந்திக்கு முடி சூட்டப்படலாம். நம்பிக்கையான ஆள் எனும் பட்சத்தில் பிரணாப் முகர்ஜியோ பெண் எனும் அடிப்படையில் மீரா குமாருக்கோ 2ஜி ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மீளும் பட்சத்தில் நம்ம பச்சை தமிழன் சிதம்பரத்துக்கோ பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம்.
பிஜேபி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தால் நரேந்திர மோடிக்கு பிரதமர் ஆக வாய்ப்பு அதிகம். அத்வானியின் வாய்ப்பை ஓரேடியாக நிராகரிக்க முடியாது. சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்காரி, அருண் ஜெட்லிக்கு கூட கிடைக்கலாம்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவில் பிஜேபி வரும் பட்சத்தில் நிதிஷ் குமாருக்கோ அல்லது காங்கிரஸ் ஆதரவில் பிற கட்சிகளின் ஆட்சி வரும் பட்சத்தில் முலாயம் சிங்குக்கோ வாய்ப்பு கிடைக்க சாத்தியமுண்டு.
இது எதுவுமே இல்லாமல் நாம் இது வரை பார்த்த மாதிரி 2012ல் யாரென்று அறியப்படாத யாரோ ஒருவர் கூட பிரதமர் ஆகலாம் 2014ல். பொறுத்து தான் பார்ப்போமே.
No comments:
Post a Comment