
கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க தேர்வுச் செய்யப்பட்ட குழுவிற்கு அதிபர் வேட்பாளரும், அரபுலீக்கின் முன்னாள் பொதுச் செயலாளருமான அம்ர் மூஸா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கத்திய ஆதரவாளர்களான மதசார்பற்ற கட்சிகள் குழுவில் இருந்து வாபஸ் பெற்றதற்கு பிறகு அம்ர் மூஸா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவில் அனைத்து தரப்பினரும் இடம்பெறவேண்டும் என அவர் கூறுகிறார்.
அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவில் 50 சதவீத உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்தும், மீதமுள்ளவர்கள் பொது சமூகத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை மேற்கத்திய ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் 20-25 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க கூடாது என்று அம்ர் மூஸா கூறுகிறார். பெண்கள், சட்டவல்லுநர்கள், காப்டிக் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பது அம்ர் மூஸாவின் குற்றச்சாட்டு.
பாராளுமன்றத்தில் இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு இவர்களின் நிம்மதியை கெடுத்துள்ளதாக கருதப்படுகிறது. 100 உறுப்பினர்களை கொண்ட அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவில் 16 பேர் இஃவான்களின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டியின் உறுப்பினர்கள் ஆவர். ஒன்பது பேர் ஸலஃபிகளின் அந்நூர் கட்சியை சார்ந்தவர்கள்.
இதனிடையே 100 உறுப்பினர்களை கொண்ட அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவில் 48 பேர் மட்டுமே இஸ்லாமிய கட்சிகளைச் சார்ந்தவர்கள் என்று இஃவானுல் முஸ்லிமீன் கூறுகிறது. இதில் 36 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். 12 பேர் வெளியே உள்ளவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையினர் மீது சிறுபான்மையினர் அவர்களின் விருப்பத்தை திணிக்க முயல்வதாக இஃவானுல் முஸ்லிமீன் குற்றம் சாட்டுகிறது.






No comments:
Post a Comment