புதுடெல்லி:இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறும் அரசின் அறிவிப்புகளை பொய் என்று கூறியுள்ளார் தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் சக்ஸேனா.
நம் நாட்டின் 120 கோடி மக்கள் தொகையில் 37.5 சதவீதமாக இருந்த ஏழைகள் எண்ணிக்கை 30 சதவீதமாக குறைந்திருப்பதாக மத்திய திட்டக்குழு கடந்த வாரம் தெரிவித்தது. அதாவது, கிராமங்களில் தனி நபர் சராசரி வருமானமாக ஒரு நாளைக்கு ரூ.22க்கு கீழும், நகரங்களில் ரூ.28க்குக் கீழும் வருமானம் பெறுபவர்களை வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களாக (ஏழைகள்) கருதலாம் என சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக திட்டக்குழு மேற்கோள் காட்டியது.
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஏழைகளை மதிப்பிடுவதற்கான அளவீடு மிகமிகக் குறைவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, புதிய முறையில் ஏழைகளை கணக்கிடுவதற்காக நிபுணர் குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
இந் நிலையில், ஏழைகள் எண்ணிக்கை சுமார் 70 சதவீதமாக இருக்கலாம் என்றும், இதைக் கண்டறிவதற்காக பல்வேறு கோணங்களில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் தேசிய ஆலோசனை கவுன்சில்(என்.ஏ.சி) உறுப்பினர் சக்சேனா கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் சக்சேனா கூறியதாவது: ஏழைகள் எண்ணிக்கை குறைந் துள்ளதாக மத்திய அரசு கூறியிருப்பது தவறு. குறிப்பாக, சத்துணவு, சுகாதார வசதி, பாது காக்கப்பட்ட குடிநீர், கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் அடிப்படையில் பார்த்தால் ஏழைகள் எண்ணிக்கை 70 சதவீதம் வரை இருக்கும். எனவே, பல்வேறு கோணங்களில் மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்றார் அவர்.
No comments:
Post a Comment