நெல்லை:கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தின் மூலம் வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து கூடங்குளம் போராட்டக் குழுவினரைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இடிந்தகரை விரைந்த உதயக்குமார், அங்குள்ள லூர்து மாதா சர்ச் வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கும் அவர் இன்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உதயக்குமார் அமர்ந்திருப்பதால் மக்கள் தடுப்பை மீறிச் சென்றால் ஏதாவது பிரச்சினையாகி விடுமோ என்று போலீஸார் அஞ்சுகின்றனர். இதனால் மக்களுடன் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். உதயக்குமாரைக் கைது செய்ய ஒத்துழைப்பு தருமாறு அவர்கள் கோரி வருகின்றனர்.
இதுகுறித்து ஐஜி ராஜேஷ் தாஸ் கூறுகையில், உதயக்குமாரை போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி மக்களை கேட்டு வருகிறோம். இதற்காக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புடன் உதய குமாரைக் கைது செய்வோம். எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என்றார்.
இந்நிலையில் தமிழக அரசின் இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாவட்டங்களை சேர்ந்த 15,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் அவர்கள் கூடங்குளத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் கடல் வழியாக கூடங்குளம் வர துவங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
No comments:
Post a Comment