ஜெனீவா மாநாட்டில் அமெரிக்காவின் பிரேரணை வெற்றி பெற்றாலும் இலங்கைக்கு எதிராக பொருளதாரத்தடை விதிக்க முடியாது என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிராக எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று அமைச்சரால் வெளியிடப்பட்டது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஜெனீவா மாநாட்டில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் தற்போது பரவலாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும் இவ்வாறு யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
இப்பிரேரணை பாதுகாப்பு சபையால் கொண்டுவரப்படவில்லை. ஆகவே, இதன்மூலம் எந்த நிலைமைகளிலும் பொருளாதார தடையை ஏற்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், உள்நாட்டு பிரச்சினையில் வெளிநாடுகளின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகவே, இந்த பிரேரணைக்கு எதிராக அரசாங்கம் போராட்டம் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச ரீதியாக எவ்வாறான அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு எதிராக எந்த அழுத்தங்களும் ஏற்படுத்தப்படவில்லை. எந்நிலையிலும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பாடாது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களை ஜனாதிபதியே தீர்மானிப்பார். மாற்றமாக, சர்வதேச நாடுகள் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க,
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் எங்கள் உடன்பாடின்றி எங்கள் நாட்டு விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஏன் மனித உரிமை ஆணையாளருக்குக் கூட அந்த அதிகாரம் இல்லை.
ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு எதிர்க்கிறது. அதை நடைமுறைப்படுத்த எங்கள் அரசு எந்த வழியையும் ஏற்படுத்திக் கொடுக்காது என்றும் கூறினார்.
No comments:
Post a Comment