Facebook Twitter RSS

Thursday, March 15, 2012

Widgets

கஸ்மியின் கைது எழுப்பும் கேள்விகள்?


supporters kazmi
டெல்லி இஸ்ரேல் தூதரக வாகன குண்டுவெடிப்பு வழக்கில் தலைநகரில் பிரபலமான மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கஸ்மியிடம் கூடுதல் விசாரணை நடத்துவதற்காக அவர்  20 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சார்ந்த கஸ்மி தலைநகரில் தலைசிறந்த உர்து பத்திரிகையாளர் ஆவார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்காக பணியாற்றியவர் கஸ்மி. தூர்தர்சனுக்காக ஈராக் போரைக் குறித்து நேரடியாக துணிச்சலுடன் சென்று செய்திகளை சேகரித்தார். குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருடன் பல வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் பங்கேற்றுள்ளார். ஃப்ரஸ் இன்ஃபர்மேசன் பீரோவின் அக்கிரெடிட்டேசன் பெற்றுள்ள கஸ்மி டெஹ்ரான் ரேடியோ, ஈரான் நியூஸ் ஏஜன்சி ஆகியவற்றிலும் ரிப்போர்ட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் சொந்தமாக ஒரு செய்தி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
மேற்காசியா விவகாரங்களின் அரசியல் நிலைப்பாடுகளையும், தனது சொந்த கண்ணோட்டத்தையும் அளித்து சக பத்திரிகையாளர்களிடம் மதிப்பை பெற்றுள்ள கஸ்மியை தீவிரவாத வழக்கில் கைது செய்திருப்பது தலைநகரின் பத்திரிகை உலகை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேற்காசியா விவகாரங்களில் இந்தியாவின் அணிசேரா கொள்கைகளுக்கு உகந்தவாறு வலுவான கருத்துக்களை பதிவுச் செய்யும் வகையில் கட்டுரைகள் எழுதியும், ஒரு வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு செய்திகளை அளித்தும் வந்ததின் பேரில் முற்றிலும் ஜனநாயகவாதியும், பத்திரிகையாளருமான ஒரு குடிமகனை கறுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவது சமூக, பத்திரிகை மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
டெல்லி யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ், இண்டர்நேசனல் ஃபெடரேசன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ், கமிட்டி ஆஃப் ப்ரொடக்ட்ஸ் ஜெர்னலிஸ்ட்ஸ் ஆகிய ஊடகவியலாளர்கள் அமைப்புகளும், அன்ஹத், இந்தியன் முஸ்லிம்ஸ் கோ ஆர்டினேசன் கமிட்டி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற சமூக அமைப்புகளும், அருந்ததி ராய், ஷப்னம் ஹாஷ்மி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் கஸ்மிக்காக தங்களது ஆதரவு குரலை எழுப்பியுள்ளனர்.
அநியாயமாக கஸ்மியை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை கண்டித்துள்ள சமூக ஆர்வலர்கள், அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலைச்செய்து விசாரணையை வேகமாக நடத்தி முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலியான தீவிரவாத குற்றச்சாட்டுக்களின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தும், போலி என்கவுண்டர்களை நடத்தியும் பிரசித்திப் பெற்ற டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு இஸ்ரேல் பயங்கரவாத உளவு அமைப்பான மொஸாதுடன் இணைந்து நடத்திய கஸ்மியின் கைது நடவடிக்கையை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்பது சமூக மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கருத்தாகும்.
கார் குண்டுவெடிப்பு நடந்த உடனேயே இதன் பின்னணியில் ஈரான் செயல்பட்டுள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. வழக்கு விசாரணையில் இந்திய போலீசாருக்கு உதவுவதாக கூறி மொஸாதும் இந்தியாவில் களமிறங்கியது. ஆனால், ஜார்ஜியா மற்றும் பாங்காங்கில் நடந்த குண்டுவெடிப்புகளைப் போல  டெல்லி குண்டுவெடிப்பிலும் ஈரானின் மீது குற்றம் சாட்டிய இஸ்ரேலுலின் கருத்திற்கு  துவக்கத்தில் டெல்லி போலீசும், உள்துறை அமைச்சகமும் மறுப்பு தெரிவித்தன. ஆனால், இஸ்ரேல் விடவில்லை. அவர்கள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க துவங்கினர்.
ஈரானை பகைக்காமல் இருக்க இந்தியா கூடுதலாக புலனாய்வு தகவல்களை வெளியிட தயங்குவதாக இஸ்ரேல் பத்திரிகையான ‘ஹாரட்ஸ்’ கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி குற்றம் சாட்டியது. இந்திய பாதுகாப்பு அதிகாரியுடன் நட்புறவு கொண்டாடும் ஒரு ஹாரட்ஸின் ரிப்போர்ட்டரை மேற்கோள்காட்டி அப்பத்திரிகையின் தூதரக செய்தியாளர் பராக் ராவிட்  இச்செய்தி கட்டுரையை எழுதியிருந்தார்.
இக்குற்றச்சாட்டை டெல்லி போலீஸ் பி.கே.குப்தா மறுத்தபொழுது அதனை பொருட்படுத்தவில்லை என்று ட்விட்டரில் ராவிட் எழுதினார். இவ்வாறு வாத பிரதி வாதங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் ஜார்ஜியா, பாங்காக் தாக்குதல்களின் பின்னணியில் ஈரானின் ரகசிய அமைப்பான குத்ஸ் ஃபோர்ஸ் செயல்பட்டுள்ளதாக இஸ்ரேலின் குற்றச்சாட்டை பின் தொடர்ந்து தாங்கள் விசாரணை நடத்தும் தகவலை டெல்லி புலனாய்வு அமைப்பைச் சார்ந்த சிலர் வெளியிட்டனர்.
உ.பி உள்பட 5 மாநிலங்களின் தேர்தல்கள் முடிந்த உடனேயே இம்முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகமும் உறுதிச் செய்தது. விரைவிலேயே கஸ்மியை போலீஸ் கைது செய்தது. மேலும் அவருக்கு ஈரானுடனான உறவை ஊர்ஜிதம் செய்ய ஆதாரங்களை தேடுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டது. இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து பார்க்கும் வேளையில் இஸ்ரேல் தலைமையிலான சர்வதேச சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கஸ்மிக்காக குரல் கொடுப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டெல்லி இஸ்ரேல் வாகன குண்டுவெடிப்பு சர்வதேச மட்டத்திலான வழக்காக மாறிய பிறகும் அவ்வழக்கை சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏயிடம் ஒப்படைக்காமல் மொஸாதின் மேற்பார்வையில் டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவிடம் ஒப்படைத்தது குறித்தும், ஊழல் வழக்கில் சிக்கி இடம் மாற்றப்பட்ட, போலி என்கவுண்டர் வழக்கில் டெல்லி அரசின் விசாரணையை எதிர்கொள்ளும் அதிகாரியை இவ்வழக்கை விசாரிக்கும் டெல்லி போலீஸ் ஸ்பெஷல் பிரிவின் குழுவிற்கு தலைவராக நியமித்தது குறித்தும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தியாவில் அண்மைக் காலங்களில் நடந்துவரும் தீவிரவாத வேட்டையின் தொடர்ச்சியாகத்தான் கஸ்மியின் கைது அமைந்துள்ளது. குண்டுவெடிப்பில் அவருடைய பங்கினை வெளிப்படுத்தும் எவ்வித ஆதாரமும் டெல்லி போலீஸ் ஸ்பெஷல் பிரிவுக்கு கிடைக்கவில்லை. வழக்கம் போலவே உயர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறி சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டன. இத்தகைய செய்திகளை வெளியிடும் வேளையில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. முன்பு இத்தகைய பொய் கதைகளை பரப்பி கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கஷ்மீர் பத்திரிகையாளர் இஃப்திகார் ஜீலானியின் கைது நடவடிக்கைப் போலவே கஸ்மியின் கைதும் அமைந்துள்ளது.
இவ்வழக்கில் எவ்வித ஆதாரமும் கிடைக்காத சூழலில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவருக்கு ஸ்கூட்டரை வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது டெல்லி போலீஸ். ஆனால், கஸ்மியின் உறவினர் ஒருவருக்காக வாங்கிய ஸ்கூட்டர் தங்களது வீட்டில் முன்பே நிறுத்தப்பட்டிருந்தது என்றும், அதற்கான ஆவணங்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் கஸ்மியின் மகன் ஷவ்ஸாப் கூறுகிறார்.
அடுத்து இன்னொரு வாதத்தையும் முன்வைக்கிறார்கள். கடைசியாக கஸ்மி இரண்டு பேருக்கு வழி காண்பித்தாராம். சமூக நல்லிணக்கத்தையும், நாடுகள் இடையேயான நட்புறவையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இக்குண்டுவெடிப்பில் எவ்வளவு கேவலமான வாதங்களை நமது புலனாய்வு ஏஜன்சிகள் முன்வைக்கின்றார்கள் என்பது வெட்ககேடாகும்.
முஸ்லிம்களை வாக்கு வங்கியாக கருதும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், அவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள புலனாய்வு ஏஜன்சிகளும் முஸ்லிம்களை எவ்வாறு இந்தியாவில் நடத்துகின்றார்கள் என்பதற்கான சமீபத்திய ஆதாரம்தான் கஸ்மியின் கைதாகும்.
ஷப்னம் ஹாஷ்மி கூறியதுபோல இந்தியாவில் முஸ்லிம்களாக பிறப்பதே குற்றமாக மாறியுள்ளதோ என்று தோன்றுகிறது.
நிரபராதிகளை வேட்டையாடியதற்காக பல விலைகளை கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்ட பிறகும் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் நாங்கள் பாடம் படிக்கமாட்டோம் என்ற வீம்பில் உள்ளார்களா?
அல்லது இந்தியாவின் இறையாண்மையை பணயம் வைத்து விட்டு செய்து கொண்ட சர்வதேச ஒப்பந்தங்களின் காரணமாக உள்நாட்டு பாதுகாப்பும், வெளிநாட்டுக் கொள்கைகளும் ஏகாதிபத்திய பயங்கரவாத சக்திகளிடம் சரணாகதி அடைந்துவிட்டனவா?
கஸ்மியின் கைது எழுப்பும் இத்தகைய கேள்விகளுக்கு யார் பதில் அளிக்கப் போகிறார்கள்?
அ.செய்யது அலீ.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets