துருக்கியின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் இல்கர் பாஸ்பக், உச்ச அரச பேரவையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசேட நீதிமன்றம் ஒன்றிற்கு பதிலாகவே இங்கு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இவர் மீதான விசாரணைகள் அவரது தொழிலுடன் தொடர்புபட்டவை அல்ல. மாறாக பயங்கரவாத குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டவை என மேன்முறையீட்டு நீதிமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.
தன்மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டை நகைச்சுவை என இவர் வர்ணித்துள்ள இவர், அதனை தான் மறுக்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதியில் இவரும் தொடர்புபட்டிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும், தன்மீதான விசாரணை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அவமானப்படுத்தும் ஒரு செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
பாஸ்பக் 2008-2010 வரை துருக்கியில் இராணுவத் தளபதியாக இருந்தார். அர்தூகானின் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான நாசகார வலையமைப்பில் இவருக்கும் தொடர்பிருந்தது என பரவலாகக் கருதப்படுகிறது.
உயர் இராணுவ அதிகாரி ஒருவரை இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்துவது என்பது, பிரதமர் தையிப் அர்தூகான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் சாத்தியம் இல்லாத ஒரு விடயமாகவே இருந்தது.
இதற்கு முன்னர் துருக்கி இராணுவத்தினர் நீண்டகாலமாக அதிகார மட்டத்தில் பலத்த செல்வாக்குடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விசாரணை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
No comments:
Post a Comment