உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்தார். அந்த சந்திப்பின் போது உ.பி. மாநிலத்தின் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி மனு அளித்துள்ளார். அவருடன் சில உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உ.பி.யில் பல மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக தீட்டப்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட தயாராக உள்ளது. பிந்தங்கிய நிலையில் உள்ள உ.பி.யின் வளர்ச்சியால் இந்தியாவும் வளர்ச்சி அடையும். ஆனால் போதுமான நிதி இல்லாததால் மத்திய அரசிடம் கூடுதல் நிதி உதவி அளித்திட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சாலை மேம்பாடு, மின்சாரம், குடிநீர் வசதி, நிலக்கரி தொடர்பான பிரச்சினைகள், நடக்க இருக்கும் கும்ப மேளா மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி கிடைத்தால் மட்டுமே பொதுமக்களுக்கு இந்த வசதிகளை செய்து கொடுக்க முடியும் என பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் உ.பி. மாநிலத்துக்கு போதுமான நிதியை ஒதுக்குவதாக தன்னிடம் கூறியதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
மேலும், மாயாவதி ஆட்சியில் நிறுவப்பட்ட பூங்காக்கள் ஏற்கெனவே நாங்கள் கூறியபடி பள்ளி கூடங்களாகவும், மருத்துவமனைகளாகவும் மாற்றப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment