புதுடெல்லி:முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமை மீண்டும் குடியரசு தலைவராக்க முயலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின்(என்.டி.ஏ) முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போதைய துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்சாரிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளையில் அப்துல் கலாமை மீண்டும் குடியரசு தலைவராக்கலாம் என்ற முடிவை சமாஜ்வாதி கட்சி வாபஸ் பெற்றுக்கொண்டது.
சமாஜ்வாதி கட்சி இதுவரை குடியரசு தலைவர் வேட்பாளரை குறித்து முடிவு எடுக்கவில்லை என்று கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் பதவிக்கு அனைவரும் ஒப்புக்கொள்ளும் பொது வேட்பாளராக அப்துல் கலாமை பரிந்துரைச் செய்யும் என்.டி.ஏவின் முயற்சிக்கு எதிரான காங்கிரஸின் மறைமுக நடவடிக்கைதான் லாலு அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று கருதப்படுகிறது.
குடியரசு தலைவராக பதவி வகிக்க ஹாமித் அன்சாரி பொருத்தமானவர் என்றும் தனது கட்சியின் ஆதரவு அவருக்குத்தான் என்றும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் பதவிக்கு அப்துல் கலாமை ஆதரிப்போம் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான ஷாஹித் சித்தீகியின் அறிவிப்பில் நேற்று திருத்தம் செய்தார் முலாயம். சித்தீகி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், கட்சி இவ்விவகாரத்தில் இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் முலாயம் தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டில் குடியரசு தலைவர் பதவிக்கு அப்துல் கலாமின் பெயரை முதன் முதலில் பரிந்துரைச் செய்தவர் முலாயம்சிங் யாதவ் ஆவார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் அவரை பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டன. அப்துல் கலாம் குடியரசு தலைவராக பதவி வகித்த வேளையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றிய மசோதாவை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பினார். இதனால் அப்துல் கலாமை பொது வேட்பாளராக்க காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என கருதப்படுகிறது.
குடியரசு தலைவர் பதவிக்கு வேட்பாளராக தேர்வுச் செய்யப்படுவார் என கருதப்படும் மேற்குவங்காள மாநில முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி நேற்று புவனேஷ்வரில் ஒடீசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.
அதேவேளையில் குடியரசு தலைவர் வேட்பாளரை குறித்து மிகவும் முன்னரே முடிவுச்செய்ய தேவையில்லை என்று மாநிலங்களவை கூட்டத்தொடரின் முதல் நாள் பங்கேற்க வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார். முதலில் குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகட்டும். பின்னர் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment