Facebook Twitter RSS

Sunday, April 08, 2012

Widgets

பாக்.அதிபர் சர்தாரி இன்று அஜ்மீர் வருகை!


பாக்.அதிபர் சர்தாரி இன்று அஜ்மீர் வருகை!
அஜ்மீர்/புதுடெல்லி:பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி இன்று இந்தியாவின் அஜ்மீர் நகருக்கு வருகை தருகிறார். சூஃபி சிந்தனையாளர் காஜா முஈனுத்தீன் ஜிஸ்தியின் அடக்கஸ்தலத்தில் சந்திப்பை(ஜியாரத்) நடத்துவதற்காக சர்தாரி வருகை தருகிறார். சர்தாரியுடன் அவரது மகன் பிலாவல் மற்றும் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ஆகியோரும் வருகின்றனர். இவர்கள் அஜ்மீர் தர்காவில் 35 நிமிடம் இருப்பார்கள் எனத் தெரிகிறது.
பாகிஸ்தானிலிருந்து விமானம் மூலம் ராஜஸ்தான் வந்து சேரும் அதிபர் சர்தாரி மற்றும் குழுவினர் அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அஜ்மீருக்குச் செல்கின்றனர். இதற்காக 4 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் ஞாயிறு மாலை 4.10 மணிக்கு அஜ்மீருக்குச் சென்றடையும்.

பாகிஸ்தான் அதிபரின் பயணத் திட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அஜ்மீர் பிராந்திய காவல்துறை கண்காணிப்பாளர் அதுல் சர்மா மேற்கொண்டுள்ளார். ஹெலிகாப்டர் தளத்தில், ஐஜி ராஜேஷ் நிர்வான், ஆட்சியர் மஞ்சு ராஜ்பல் மற்றும் ஆணையர் ராஜேஷ் மீனா ஆகியோர் அதிபரை வரவேற்பர். விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள தர்காவுக்கு காரில் செல்கின்றனர்.
தர்காவில் இவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அங்கு அவர்கள் சிறிது நேரம் தங்கி வழிபாடு செய்வர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் தளத்துக்கு திரும்புவர்.
பாகிஸ்தான் அதிபரின் வருகையை முன்னிட்டு இப்பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழி நெடுகிலும் போலீஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். தர்கா முழுவதும் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளது. தர்காவை சுற்றியுள்ள மார்கெட் பகுதிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலிருந்து போலீசார் காவல் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பாக்.அதிபருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்த ஒத்திகை சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மூன்று ஹெலிகாப்டர்கள் ஏற்கெனவே அஜ்மீர் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்துள்ளன. அதிபரின் வருகையை முன்னிட்டு இந்த ஹெலிகாப்டர் தளம் தற்காலிக ஏற்பாடாக உருவாக்கப்பட்டுள்ளது. தர்காவில் பொதுமக்கள் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதிபர் வந்து சென்ற பிறகுதான் அனுமதிக்கப்படுவர்.
அதிபருடன் 46 பேர் அடங்கிய குழுவினர் வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது 36 பேராகக் குறைந்தது.  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக ராஜஸ்தான் மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets