மும்பை:குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக தீவிரவாத பட்டம் சூட்டி கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட காஜா முஹம்மது யூனுஸின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மஹராஷ்ட்ரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் காலியான பேருந்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பங்கிருப்பதாக குற்றம்சாட்டி 2003 ஜனவரி மாதம் கறுப்புச் சட்டமான பொடாவில் அநியாயமாக யூனுஸ் கைது செய்யப்பட்டார்.
25 வயதான யூனுஸ் துபாயில் சாஃப்ட்வெயர் எஞ்சீனியராக பணியாற்றி வந்தவர் ஆவார்.பேருந்து குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட யூனுஸ் போலீஸ் காவலில் வைத்து போலீஸாரின் வெறித்தனமான சித்திரவதைக்கு பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது தாயார் ஆசியா பேகம் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 போலீஸ்காரர்களில் 10 பேரை விடுதலைச் செய்துள்ளது.
ரூ.20 லட்சம் இழப்பீட்டு தொகையை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட போலீஸ்காரர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்து 2 மாதத்தில் அளிக்குமாறு நீதிமன்றம் கூறியது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள போலீஸ்காரர்களில் ஒருவரான சச்சின் வாஸே துணை போலீஸ் ஆய்வாளர் ஆவார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக கருதப்படும் இவர் பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான பால்தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் அங்கமானார்.
இவ்வழக்கில் இழப்பீடு வழங்கப்பட்டது குறித்து காஜா முஹம்மது யூனுஸின் மூத்த சகோதரர் காஜா ஹுஸைன் கூறியது:
14 போலீஸ்காரர்கள் குற்றவாளிகள் என்று சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி கண்டறிந்தனர். நீதிமன்றம் இழப்பீடாக அறிவித்துள்ள ரூ.20 லட்சம் தொகை காஜா யூனுஸின் உயிரை திரும்ப தராது. நீதி நடைமுறைப்படுத்த வேண்டுமானால் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான டாக்டர்.அப்துல் மத்தீன், 14 போலீஸ் அதிகாரிகளும் காஜா யூனுஸை சித்திரவதைச் செய்து கொலைச் செய்ததை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை சி.ஐ.டி போலீசார் 2006 ஆம் ஆண்டு அளித்த பிரமாணப் பத்திரத்திலும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டனர். நான் எனது வழக்கறிஞர் மிஹிர் தேசாயுடன் கலாந்தாலோசித்துவிட்டு இவ்வழக்கு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்வேன் என்றார்.
காஜா யூனுஸிற்கு நீதி கிடைப்பதற்காக சட்டரீதியாக போராடி வந்த அவரது தந்தை மரணமடைந்துவிட்டார்.
No comments:
Post a Comment