Facebook Twitter RSS

Thursday, April 19, 2012

Widgets

அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கமுடியாது: உச்சநீதிமன்றம்!


உச்சநீதிமன்றம்
புதுடெல்லி:அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளுக்கு தனிச் சின்னம் ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேர்தலின்போது, தங்களுக்குத் தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ், பிரஜா ராஜ்யம் (தற்போது காங்கிரஸூடன் இணைந்து விட்டது), பகுஜன் விகாஸ் அகாதி உள்பட 15 அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தன. தனிச்சின்னம் ஒதுக்கப்பட்டால், குழப்பமின்றி தங்கள் கட்சிக்கு வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். ஆனால், விதிகளைக் காரணம் காட்டி தங்களுக்குத் தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது என்று 15 அரசியல் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டன. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தேர்தல் ஆணையம், சட்டப்பேரவைத் தேர்தலின்போது குறைந்தபட்சம் 2 இடங்கள் மற்றும் 6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே தனிச்சின்னம் ஒதுக்க முடியும் என்று கூறியது.
இவ்வழக்கின் விசாரணையின் இறுதியில் நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், எஸ்.எஸ். நிஜார், ஜஸ்தி செலமேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பு விபரம்:
“பதிவு பெற்ற – ஆனால், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்குத் தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் சில விதிகளை வகுத்துள்ளது. வாக்காளர்களிடையே குழப்பத்தைத் தவிர்க்க பொதுச்சின்னம் வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரினாலும், அதற்கு அந்தக் கட்சிகள் தகுதி பெற வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி மற்றும் 6 சதவீத வாக்குகளை அவை பெற்றிருக்க வேண்டும்; அப்போதுதான் அவற்றுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என்பது தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதி. இது அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதனால், தனிச்சின்னம் கோரும் அரசியல் கட்சிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
மூன்று நீதிபதிகளில் ஜஸ்தி செலமேஸ்வர் மட்டும் தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள விதிகளுக்கு எதிராக தீர்ப்புக் கூறினார். அவர், “வாக்காளர்கள் குழப்பம் அடையாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘தேர்தல் சின்னம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்படாத கட்சி என்ற காரணத்துக்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு சின்னத்தை ஒதுக்கினால் அது வாக்காளர்களிடம் குழப்பதையே ஏற்படுத்தும். இது அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவை மீறுவது போல் ஆகும்” என்று கூறியிருந்தார்.
ஆனால், மற்ற 2 நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்தின் விதிகள் சரியான கண்ணோட்டத்துடன்தான் வகுக்கப்பட்டுள்ளன. அதனால் அரசியல் கட்சிகளின் வழக்கை தள்ளுபடி செய்யலாம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
பெரும்பான்மை அடிப்படையில், மூன்றுக்கு இரண்டு நீதிபதிகள் எழுதிய தீர்ப்பின்படி, அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets