அஜ்மீர்:19 ஆண்டுகளாக அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நாட்டு வைராலஜி மருத்துவர் கலீல் ஜிஸ்தி இன்று விடுதலையாகிறார்.
1992-ம் ஆண்டு அஜ்மீரில் நடந்த கொலை தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரியில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அஜ்மீர் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அண்மையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இந்தியாவுக்கு வந்தபோது, ஜிஸ்தியின் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் விவாதித்தனர். இதையடுத்து, வயது, மனிதாபிமான அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல் அஜ்மீரிலுள்ள விசாரணை நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வரை கிடைக்கவில்லை. இதனால், சிஸ்டி விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும், உச்ச நீதிமன்ற உத்தரவு புதன்கிழமை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
“உத்தரவு கிடைக்கப்பெற்றதும் விரைவு நீதிமன்றத்தை அணுகுவோம்” என்று கலீல் ஜிஸ்தியின் சகோதரர் ஜமீல் ஜிஸ்தி கூறினார்.
“ஜாமீன் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்துவிட்டு, சிறையிலிருக்கும் எனது சகோதரரை வரவேற்கச் செல்வோம்” என்று அவர் மேலும் கூறினார்.
அஜ்மீரிலுள்ள குவாஜா மொய்னுதீன் ஜிஸ்டி தர்காவில் காதிமாக ஜமீல் ஜிஸ்தி பணியாற்றி வருகிறார்.
No comments:
Post a Comment