டமாஸ்கஸ்:சர்வதேச தலையீட்டைத் தொடர்ந்து சிரியாவில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் நேற்று துவங்கியது. ஆனால், ராணுவம் தற்பொழுதும் நகரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா-அரபு லீக் தூதர் கோஃபி அன்னனின் முயற்சியின் காரணமாக வியாழக்கிழமை முதல் போர் நிறுத்தத்தை பஸ்ஸாரின் அரசு அறிவித்தது. புதன்கிழமை நள்ளிரவிற்கு பிறகு துப்பாக்கிச்சூடு குறித்தோ, குண்டுவீச்சுக் குறித்தோ செய்திகள் வெளியாகவில்லை.
13 மாதங்களாக நடைபெற்ற ஜனநாயகரீதியான மக்கள் போராட்டத்தினால் சிரியா தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் சிரியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. தற்பொழுது சீனா, போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளது.அன்னனின் மத்தியஸ்த முயற்சிகளை சிரியா அரசு ஆதரவு தெரிவித்து ஒத்துழைக்கும் நடவடிக்கை தொடரும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற சிரியா தயாராகுமா? என்பது குறித்து மேற்கத்திய நாடுகள் சந்தேகத்தை வெளியிட்டுள்ளன.
ராணுவத்தின் பணியை முடித்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக சிரியா அரசு கூறுகிறது. ஆயுதக் குழுக்களின் குற்றகரமான செயல்பாடுகளை தோல்வி அடையச் செய்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், போராளிகளின் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரி கூறுகிறார். புரட்சி போராளிகளுக்கு தேசிய அளவில் ஐக்கியம் இல்லை என்பதால் ஏதேனும் ஒரு குழு தாக்குதலுக்கு முயலும் என்று அரசு சந்தேகிக்கிறது.
பல இடங்களிலும் மீண்டும் தாக்குதல் துவங்க வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஹும்ஸில் கடைகள் மூடப்பட்டு இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. மாகாணத்தில் அனைத்து தொலைபேசி இணைப்புகளையும் அரசு துண்டித்துள்ளது. பள்ளிக்கூடங்களும், அரசு அலுவலகங்களும் மூடப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. பெரும் நெருக்கடியை ஹும்ஸ் மக்கள் எதிர்கொள்வதாக சமூக ஆர்வலர் ஸைஃப் கூறுகிறார்.
ராணுவமும்,கவச வாகனங்களும் செக்போஸ்டுகளில் முகாமிட்டுள்ளன. அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் உடனே துவங்க வாய்ப்புள்ளதாக ஹும்ஸைச் சார்ந்த அபூ ராமி கூறுகிறார்.
No comments:
Post a Comment