Facebook Twitter RSS

Thursday, April 05, 2012

Widgets

அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளின் மன நிலை பாதிக்கப்படுகிறது – மன நல மருத்துவர்கள் வெளியிடும் தகவல்!!!



அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி இன்றைய காலத்திற்கு ஏற்புடையது அல்ல. ஏனெனில் அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எதிர்காலத்தில் வன்முறையாளர்களாக மாற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.



குழந்தைகள் விளையாட்டுத்தனமானவர்கள். துறு துறு என்று எதையாவது செய்து அனைவரையும் கவர முயற்சி செய்வார்கள். அவர்களின் செயலை கண்டு மகிழ்ச்சியடையும் பெற்றோர் அதே குழந்தை சாதாரணமாக செய்யும் செயலைக்கூட அங்கீகரிக்காமல் அவர்களை கண்டிப்பதற்காக அடிக்கின்றனர். எனவே குழந்தைகள் விளையாட்டுத்தனமாக செய்வதை ஏற்றுக்கொண்டு அதிக கண்டிப்பு இல்லாமல் பக்குவப்படுத்த பெற்றோர்கள் முயல வேண்டும்.


ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான சைக்காலஜி உண்டு. முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பெற்றேர்களின் வேலைப்பளு, அவர்களின் நேரமின்மை ஆகியவற்றிக்கு இடையே ஒவ்வொரு குழந்தையும் சிக்கித் தவிக்கின்றன.

ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும். நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா. குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள். நல்ல பலன்தரும் விதைகளாக, விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசி வளர்க்க வேண்டும்.

குழந்தைகளின் செயலை கண்டிப்பது வேறு, அதே சமயத்தில் அவர்களை தண்டிப்பது வேறு. தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக்குள்ளாக்குவது.

கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது. குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது.    

எதிர்கால சமுதாயம்

மாறாக குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள். 
குழந்தை உரிமை மீறல்

குழந்தைகளை அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது. குழந்தைகளுக்கு பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாம். நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால், வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால், அவனும் நம்மை அடிப்பான்.

எண்ணங்களை திணிக்காதீர்கள்

குழந்தை வளர்ப்பு பற்றி கவிஞர் கலீல் ஜிப்ரான் கூறியுள்ளதை இறுதியாக இங்கே நினைவு கூறலாம்

குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்கிறார் கலீல் ஜிப்ரான்.

குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக்குள்ளாகக் கூடாது என்ற உண்மையை பெற்றோர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள் …..

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets