Facebook Twitter RSS

Sunday, April 01, 2012

Widgets

ஈரானிடம் எண்ணெய் வாங்குபவர்கள் மீது அமெரிக்கா தடை!


ஈரானிடம் எண்ணெய் வாங்குபவர்கள் மீது அமெரிக்கா தடை
வாஷிங்டன்:ஈரானிடம் கச்சா எண்ணெயை வாங்குபவர்கள் மீது தடை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அனுமதி வழங்கியுள்ளார்.
ஈரானின் எண்ணெயை புறக்கணிப்பதால் தோழமை நாடுகளுக்கு நெருக்கடி ஏற்படாது என்றும் உலக சந்தையில் போதுமான அளவு எண்ணெய் கிடைப்பதாகவும் ஒபாமா கூறுகிறார்.
கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகள் மீது தடை விதிக்கப்படுகிறது. ஈரானின் எண்ணெயை குறைப்பது மூலம் சந்தையில் பற்றாக்குறை ஏற்படுகிறதா? என்பது குறித்து கவனமாக கண்காணிக்கப்படும் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

தெற்கு சூடான், சிரியா, யெமன், நைஜீரியா, நார்த் ஸீ ஆகிய இடங்களில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையால் எண்ணெய் உற்பத்தியில் இவ்வாண்டு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டு இதர நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்குவதை அதிகரித்து நெருக்கடியை தீர்க்கலாம் என்று ஒபாமா கூறுகிறார். வெளிநாடுகள் வருகிற ஜூன் 28-ஆம் தேதிக்குள்ளாக ஈரானின் சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயை வாங்குவதை குறைக்கவேண்டும். இல்லையெனில் அமெரிக்க நிதி நிறுவனங்கள் அந்நாடுகளுடன் உறவை துண்டிக்கும் என்று கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கா கையெழுத்திட்ட சட்டம் கூறுகிறது.
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொண்ட ஜப்பான் மற்றும் 10 ஐரோப்பிய நாடுகளை தடையில் இருந்து அமெரிக்கா விலக்கியுள்ளது. அதேவேளையில், ஈரானிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் மீது அழுத்தம் செலுத்துவதுதான் அமெரிக்காவின் புதிய தடை. இந்நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை வாபஸ் பெறக்கோரி அமெரிக்கா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மூன்று மாதத்திற்குள் இந்நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்காவிட்டால் அந்நாடுகளின் நிதிநிறுவனங்கள் தடையை சந்திக்க வேண்டிவரும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க செனட்டர் பாப் மெனண்ட்ஸ் அசோசியேட் ப்ரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
வருகிற ஜூன் மாதம் ஈரானின் எண்ணையை பூரணமாக நிறுத்த ஐரோப்பிய யூனியன் தீர்மானித்துள்ளது. ஈரானிடமிருந்து வாங்கும் எண்ணெயில் 20 சதவீதத்தை குறைப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets