பெய்ரூத்:எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் பலன் தரும் என்ற நம்பிக்கையில் ஃபலஸ்தீன் புலன் பெயர்ந்தோர் உள்ளனர்.
பல தசாப்தங்களாக லெபனான் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான ஃபலஸ்தீன் புலன்பெயர்ந்தோர் பிறந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு துயர வாழ்வை அனுபவித்து வருகின்றனர்.
ஃபலஸ்தீன் சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு அரபு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பேரணிகள் நடந்தேறின. 50 லட்சம் முதல் 70 லட்சம் வரையிலான ஃபலஸ்தீன் புலன்பெயர்ந்தோர் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
லெபனான், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளில் அதிகமான பேர் தங்கியுள்ளனர். ஷப்ரா, ஷத்தீலா உள்பட ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன் புலன் பெயர்ந்தோர் வசிக்கும் லெபனான் முகாம்களில் வாழ்க்கை துயரமானதாகும். ஐ.நா தலைமையிலான நல்வாழ்வு நடவடிக்கைகள் தற்பொழுது கிட்டத்தட்ட முடங்கிவிட்டது. சொந்த மண்ணிற்கு திரும்பி வரும் ஃபலஸ்தீன் மக்களை அனுமதிக்கமாட்டோம் என்ற பிடிவாதத்தில் இஸ்ரேலிய சியோனிச அரசு செயல்பட்டு வருகிறது.
உலக நாடுகளின் அஜண்டாக்களில் ஃபலஸ்தீன் புலன்பெயர்ந்தோரின் பிரச்சனைகள் இடம்பெறுவதில்லை. ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சியைத் தொடர்ந்து எகிப்தில் உருவாகியுள்ள அரசியல் மாற்றம் ஃபலஸ்தீன் மக்களின் விவகாரங்களில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தொடரவேண்டும் என்றும் ஹமாஸ் தலைமை கருத்து தெரிவிக்கிறது. ஆனால், காஸ்ஸாவிலும், ஃபலஸ்தீனின் இதர பகுதிகளிலும் மேலும் அடக்குமுறையை கையாளுவதே இஸ்ரேலின் திட்டமாகும்.
அரபுநாடுகளிடமிருந்து உறுதியான முடிவு உடனடியாக ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவே என்றும் ஃபலஸ்தீனிகள் நம்புகின்றனர். ஃபலஸ்தீன் எதிர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்த ஆயுதங்களும் இதர உதவிகளும் வழங்க எகிப்து தயாராக வேண்டும் என்று ஹிஸ்புல்லாஹ் போன்ற போராளி அமைப்புகளின் கோரிக்கை.
லெபனான் ஏற்படுத்தியுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் புலன்பெயர்ந்தோர் வாழும் முகாம்களில் வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. முகாமில் இருந்து வெளியே செல்ல புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளியே உள்ளவர்கள் முகாமில் குடும்பத்தினரை சந்திப்பதற்கு ராணுவத்தின் முன் அனுமதியை பெறவேண்டும். வெளியே செல்பவர்கள் இரவு ஏழு மணிக்கு முன்பாக முகாமிற்கு திரும்பவேண்டும்.
No comments:
Post a Comment