சென்னை:இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட தொடர் நில அதிர்வு மற்றும் சுனாமி எச்சரிக்கை ஆகியவற்றால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
முன்னதாக சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்திருந்த நிலையில் சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சென்னையில் இன்று மதியம் 2.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது.) சென்னையிலும் உணரப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி தாக்குதலினாலும் சென்னையில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
இந்தோனேசியாவில் 2004 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.2 ரிக்டர் அளவுதான். அதற்கே அந்தமான், இலங்கை, தமிழ்நாட்டின் கடற்கரையோர லட்சக்கணக்கானோர் மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பொருளிழப்பு ஏற்பட்டது. கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.
தற்போது 8.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக இருப்பதால், சுனாமியின் வேகம் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்பட்டதால் மக்கள் பெரும் பீதியுடன் இருந்தனர்.
இந்த நிலையில் சுனாமி தாக்க வாய்ப்பில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.
ஆனால் தற்போது இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த ஆப்டர்ஷாக் ஏற்பட்டது. முதலில் 8.3 ரிக்டராகவும், பின்னர் 8.5 ரிக்டர் அளவிலும் இது பதிவானது. இதையடுத்து 2 மணி நேரம் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நீட்டித்தது.
இதையடுத்து இந்தியாவிலும் சுனாமி எச்சரிக்கை தள்ளிப் போனது. அதன்படி மாலை 6.30 மணி வரை புதுச்சேரிக்கும், இரவு 7 மணி வரை சென்னைக்கும் சுனாமி எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் பூகம்பம் தாக்கி 4 மணி நேரங்கள் கடந்து விட்டதால் தற்போது சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையைப் பொறுத்த வரையில் மந்தைவெளி, மைலாப்பூர், சாந்தோம், ஆழ்வார்ப்பேட்டை மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனிடையே இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து, ஏற்கனவே சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 28 நாடுகளிலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அச்சமடைய வேண்டாம்
முதல்வர் ஜெயலலிதா சுனாமி குறித்து மக்கள் யாரும் பீதியோ, அச்சமோ அடைய வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
‘சுனாமி குறித்து மக்கள் யாரும் பீதியோ, அச்சமோ அடைய வேண்டாம். எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயாராக இருக்கிறது. சுனாமி தாக்கும் நிலை இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் யாரும் பீதியோ அச்சமோ அடைய வேண்டாம்’ என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment