கெய்ரோ:எகிப்து அதிபர் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் இடம்பெற்றிருந்த நபர்கள் போட்டியிட தடை விதிக்கும் மசோதாவுக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முபாரக் ஆட்சியின் கடைசி நாட்களில் துணை அதிபர் பதவியை வகித்த முன்னாள் உளவுத்துறை தலைவர் உமர் சுலைமான் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக மனுத்தாக்கல் செய்ததை தொடர்ந்து பாராளுமன்றம் தலையிட்டுள்ளது. இச்சட்டம் அமுலுக்கு வருவதால் உமர்சுலைமான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், ராணுவ அரசின் அனுமதி தேவை. அரசியல் செயல்பாட்டு உரிமை தொடர்புடைய சட்டத்தில் திருத்தம் செய்ததுதான் புதிய சட்டம் ஆகும்.
இச்சட்டத்தின்படி, முபாரக் அரசின் அதிபர், துணை அதிபர், பிரதமர் அல்லது கலைக்கப்பட்ட முபாரக்கின் கட்சியான நேசனல் டெமோக்ரேடிக் பார்டியின் உயர் பதவியை வகித்தவர்கள் அடுத்த 10 ஆண்டுகள் அரசு பதவிகளில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், முபாரக் அரசில் அமைச்சரகளாக பதவி வகித்தவர்களுக்கு இச்சட்டத்தில் தடை ஏற்படுத்தவில்லை. இது முன்னாள் அரபுலீக் பொதுச்செயலாளரும், முபாரக் அரசில் சிறிது காலம் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவருமான அம்ரு மூஸாவுக்கு ஆறுதலை அளிக்கும். அம்ர் மூஸா அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதனிடையே, பாராளுமன்ற நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவில் பேரணி நடத்தினர்.
No comments:
Post a Comment