புதுடெல்லி:இந்திய சிறைகளில் தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் வாடும் பாகிஸ்தானியர்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கைதிகள் தொடர்பான வழக்கு நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகள் 21 பேரைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் கூறியதாவது:
தண்டனைக் காலம் முடிந்துள்ள இந்த பாகிஸ்தானியர்களில் 16 பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், 5 பேர் வாய் பேசமுடியாத, காது கேட்காத நிலையில் உள்ளனர். இவர்கள் விஷயத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பெரும் மனக் காயத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற கைதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படுகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவர்களைத் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் சமீபத்திய இந்திய வருகையைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, இந்தியா-பாகிஸ்தானில் உயர்நிலைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் சந்தித்துப் பேசும் போது கூட இது தொடர்பாக விவாதிக்க மாட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். இந்த விஷயத்தில் இன்னும் 3 வாரங்களுக்குள் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்தக் கட்ட விசாரணையை மே 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
No comments:
Post a Comment