மனாமா:இரண்டுமாத காலமாக சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் மனிதஉரிமை ஆர்வலர் அப்துல் ஹாதி அல் கவஜாவுக்கு ஆதரவு தெரிவித்து பஹ்ரைன் தலைநகரான மனாமாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
ஆம்னஸ்டி உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அப்துல் ஹாதியை விடுதலைச்செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்திருக்கவே, இப்பேரணி நடைபெற்றுள்ளது.
சுதந்திரம் அல்லது உயிர் தியாகம் என்ற முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிய மக்கள் மீது போலீஸ் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கியை பிரயோகித்தது.
கண்டன பேரணியை துவக்கி வைத்து உரை நிகழ்த்திய ஷியா அறிஞர் ஷேக் இஸ்ஸா காஸிம் கூறுகையில், “அப்துல் ஹாதி சிறையில் இறந்தால் நிலைமை கட்டுப்பாட்டை இழக்கும்” என்று எச்சரிகை விடுத்தார்.
டென்மார்க் குடியுரிமை பெற்றுள்ள அப்துல் ஹாதியை சிகிட்சைக்காக கோபன் ஹெகனுக்கு அனுப்ப டென்மார்க் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து ராணுவ மருத்துவமனைக்கு அப்துல் ஹாதி மாற்றப்பட்டுள்ளார். அப்துல் ஹாதியின் உடல் எடை 10 கிலோ குறைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக செய்தி ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அப்துல் ஹாதியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், உணவு சாப்பிடாவிட்டால் அவருக்கு மரணம் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவருடைய வழக்கறிஞர் முஹம்மது அல்ஜிஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி அப்துல் ஹாதி மற்றும் 7 எதிர்கட்சி தலைவர்களுக்கு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
No comments:
Post a Comment