Facebook Twitter RSS

Wednesday, December 26, 2012

Widgets

சேலம் அருகே பயங்கரம் பட்டாசு விபத்தில் 8 பேர் பலி


சேலம்: சேலம் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 4 பெண்கள்,  3 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உடல் சிதறி இறந்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கொப்பம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சாந்தி(36). இவர்கள் உப்புபள்ளம் மற்றும் செங்காட்டூர் பிரிவு காட்டுவளவு கரடு ஆகிய 2 இடங்களில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தனர். இவர்களுக்கு சூரியா(10), அம்மு(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு உப்புபள்ளம் ஆலையில் நடந்த தீ விபத்தில் சரவணன் இறந்தார். இதன் பின்னர் சாந்தி 2 தொழிற்சாலைகளையும் நிர்வகித்து வந்தார். பகலில் மட்டும் இந்த ஆலைகளில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சாந்தி, தனது குழந்தைகள் சூரியா, அம்மு ஆகியோரை அழைத்துக் கொண்டு காட்டுவளவு கரடு பட்டாசு ஆலைக்கு சென்றார்.

 அங்கு வழக்கமாக பணிபுரியும் தொழிலாளர்களுடன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். விடுமுறை நாட்களில் பட்டாசுக்கு லேபிள் ஒட்டுதல், சணலை தயார் செய்தல் போன்ற பணிகளை மாணவ, மாணவிகள் செய்வது வழக்கம். நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிக்கும் மருந்து கலவை உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவியதில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ வெடி மருந்து, ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் நாட்டு வெடிகள் உள்ளிட்டவை வெடித்து சிதறின.  பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். ஆலை உரிமையாளர் சாந்தி, இவரது மகன் சூரியா (12), சிவகாமி (40), கேசவன்(12) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். 

ஆலையில் பணிபுரிந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், தீயில் கருகியும் உயிருக்கு போரா டினர்.  20 நிமிடத்துக்கும் மேலாக மருந்து மற்றும் வெடிகள் வெடித்துக் கொண்டிருந்தன. படுகாயமடைந்த பாறைக்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கம்(50), விஜயா(37), இவரது மகள் விமலா(17), சதீஷ்(19), இவரது சகோதரி தீபா(12), ஈஸ்வரி (35), பழனியப்பன் (40) ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இவர்க ளில் தீபா மரணமடைந்தார். மேலும் மாணவர்கள் பவித்ரா(11), மனோஜ்குமார்(12) ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி தங்கம், ஈஸ்வரி, விஜயா ஆகியோர் இறந்தனர். தீ விபத்தில் காயமடைந்தவர்களிடம் மாஜிஸ்திரேட் ரபீக் வாக்குமூலம் பெற்றார். விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் மாணவர்கள். மேலும் சில மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets