Facebook Twitter RSS

Monday, December 10, 2012

Widgets

காஸ்ஸா:ஹமாஸ் மாநாட்டில் ஒற்றுமை முழக்கம்!


Hundreds of thousands of Palestinians gather to mark the 25th anniversary of Hamas in Gaza City
காஸ்ஸா:ஃபலஸ்தீன் விடுதலை போராட்ட இயக்கமான ஹமாஸின் 25-வது ஆண்டு விழா பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும். 45 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைப் பிறகு பிறந்த நாட்டிற்கு ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல் வருகை தந்தது ஃபலஸ்தீன் மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.
அண்மையில் எட்டு தினங்களாக இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலால் தங்களுடைய போராட்ட வீரியம் சிறிதளவு கூட குறைந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் உள்பட ஐந்து லட்சம் பேர் காஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தேசிய கீதத்தை பாடியும், ஃபலஸ்தீன் கொடியை வீசியும் இஸ்ரேல் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியும் வந்த மக்களை ஹமாஸ் ஸ்தாபக தலைவர் ஷேக் அஹ்மத் யாஸீன், அப்துல் அஜீஸ் ரன்தீஸி ஆகியோர் புன்சிரிக்கும் பிரம்மாண்ட புகைப்படத்தைக் கொண்ட மேடை வரவேற்றது.
ஹமாஸ் கமாண்டர்களின் கடுமையான பாதுகாப்பின் கண்காணிப்பில் மாநாட்டு நகரம் இருந்தது. காலித் மிஷ்அலும், இஸ்மாயீல் ஹானிய்யாவும் மேடைக்கு வந்தபொழுது உச்சபட்ச குரலில் மக்களின் தக்பீர் முழக்கம் வானை எட்டியது.
காலித் மிஷ்அலின் வருகையை யொட்டி காஸ்ஸாவிற்கு வந்த ஃபத்ஹ் இயக்கத்தின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டது சிறப்பாகும். ஐக்கிய ஃபலஸ்தீனுக்காக ஒன்றிணைந்து போராடுவோம் என்று காலித் மிஷ்அல் விடுத்த அழைப்பு ஃபலஸ்தீன் மக்கள் மிகவும் விரும்பிய வார்த்தைகளாகும்.
2006-ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக ஹமாஸின் மேடையில் ஃபத்ஹ் இயக்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஒற்றுமையின் செய்தி இங்கிருந்து துவங்குகிறது என காலித் மிஷ்அல் அறிவித்த உடன் மக்கள் பலத்த கரகோஷத்துடன் அதனை வரவேற்றனர்.
ஒரே அரசு, ஒரே அதிபர், ஒரே பாராளுமன்றம்!- இதுதான் ஃபலஸ்தீனுக்கு தேவை என்று மிஷ்அல் கூறினார்.
மேலும் அவர் கூறியது: “இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம்! பிறந்த மண்ணின் விடுதலைக்கான போராட்டம் மரணம் வரை தொடரும். எங்களின் ஒரு இஞ்ச் நிலத்தைக் கூட நாங்கள் யாருக்கும் விட்டுத்தர மாட்டோம். புனித போரும், ஆயுத எதிர்ப்பு மட்டுமே எங்களது முன்னால் உள்ள ஒரே வழி. இஸ்ரேல் சிறைகளில் உள்ள அனைத்து ஃபலஸ்தீனர்களையும் விடுவிப்போம். இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க உதவிய ஈரானுக்கும், பேச்சு வார்த்தையில் முக்கிய பங்கு வகித்த எகிப்தையும், துருக்கியையும் எங்களுக்கு ஆதரவளித்த சர்வதேச சமூகத்தையும் பாராட்டுகிறோம்.” இவ்வாறு காலித் மிஷ்அல் கூறினார்.  thanks thoothuonline

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets