Facebook Twitter RSS

Saturday, December 22, 2012

Widgets

விஜய்.இன் துப்பாக்கி அல்ல; அது புரோகித்-இன் துப்பாக்கி


வைகறை வெளிச்சம் ;1. இந்திய இராணுவத்தில் புரோகித் என்றோர் இராணுவ அதிகாரி. இவர் இராணுவத்தின் உளவு பிரிவை சேர்ந்தவர். அவர் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிராக ஓர் இந்து ராஷ்டிராவை உருவாக்க நினைக்கிறார். அதற்காக உழைக்கிறார்.
2. இவர் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று நினைக்கிறார். முஸ்லிம்களை பழி வாங்கும் விதமாக ஒரு தீவிரவாத இந்து குழுவை உருவாக்குகிறார். அதில் இந்து அமைப்புகளை சேர்ந்த பல பேரும், பல சாமியார்களும் அடக்கம். அந்த அமைப்பின் பெயர் அபிநவ் பாரத்.

3. இதற்கு இந்திய உளவுத்துறையை சார்ந்த பல அதிகாரிகள் (ஏன் மொத்த அமைப்புமே என்றும் சொல்லலாம்) உதவி செய்கின்றனர். அந்த அமைப்பு இந்தியாவின் பல இடங்களிலும் குண்டு வைக்கிறது. அதில் இந்தியர்கள் பலர் (முஸ்லிம்களும் இந்துக்களும் இன்னும் பலரும்) கொல்லப்படுகின்றனர்.
4. அதற்கான வெடி மருந்துகளை புரோகித் இராணுவத்தில் இருந்தே களவாடி கொண்டு வந்து தருகிறார். இந்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய இராணுவ அதிகாரிகளையே பயன்படுத்துகிறார்.
பின்னர் அந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் காட்டி அப்பாவி முஸ்லிம்கள் பல்லாயிரம் பேர் கைது செய்யப்படுகின்றனர்.  இது இந்திய உளவுத்துறையின் ஆசிர்வாதத்துடன் நடக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் பெருத்த கொந்தளிப்பு எழுகிறது.
5. அதன் பின்னர் மத்திய அரசு நாட்டிற்கு விசுவாசமான கர்கரே என்றொரு அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது. அதில் உண்மைகள் வெளிவந்தன. இராணுவத்தில் இருந்து வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டது தெரியவருகிறது. இராணுவ அதிகாரி புரோகித் கைது செய்யப்படுகிறார். புரோகித்-இன் லேப்டாப் கைப்பற்றப்படுகிறது. அதில் ஏகப்பட்ட உண்மைகள் வெளிவருகின்றன.
ஆனால் உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டிய அதிகாரி கர்கரே சத்தமில்லாமல் கொல்லப்படுகிறார். கர்கரே அணிந்த குண்டு துளைக்காத சட்டையில் ஓட்டையா அல்லது அந்த சட்டையை அவருக்கு அணிவித்தவர்கள் சத்தமில்லாமல் அவரை கொலை செய்ததை கண்டும் காணாமல் உள்ள சட்டத்தில் ஓட்டையா? எங்கு ஓட்டை என்பது யாருக்கும் புரியவில்லை.
தற்போது ஒரு புதிய கதை இராணுவத்தாலும் காவி கரைபடிந்த ஊடகங்களாலும் நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது புரோகித் என்பவர் இந்திய இராணுவத்தின் ஆணைப்படியே இதை செய்தார். (?) நாட்டில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க இந்து தீவிரவாத குழுக்களுடன் சேர்ந்து குண்டு வைத்தார். அப்பாவிகளை கொன்றார். ஆனால் இவை அனைத்தையும் இராணுவத்திற்கு தெரிந்தே செய்தார் என்பதே அது. இந்த கதைகளுக்கு மத்திய அரசும் மௌனம் சாதித்து வருகிறது. அதாவது புரோகித்தை காப்பாற்றும் புதிய முயற்சி இது. அதற்கு மத்திய அரசு பக்க வாத்தியம் வாசித்து வருகிறது.
சரி அது இருக்கட்டும். துப்பாக்கி படத்தை பற்றிய விமர்சனத்தில் கர்கரேவும் புரோகித்தும் எங்கே வந்தார் என்பது தானே உங்களுக்குள் எழுந்துள்ள கேள்வி. இப்போது துப்பாக்கி படத்தின் கதையை சொல்கிறேன். மேலே சொன்ன கதையையும் இதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு புரிந்து விடும்.
1. துப்பாக்கி படத்தின் கதாநாயகன் விஜய். இராணுவ உளவு அதிகாரி.
2. அவர் கண்முன் நடக்கும் முஸ்லிம்கள் வைக்கும் குண்டு வெடிப்பைக் கண்டு கொதிக்கிறார். பாவம் இருக்கத்தானே செய்யும். அந்த குண்டுவெடிப்பை நடத்தும் ஒரு முஸ்லிமை உயிருடன் பிடிக்கிறார். அவனைக்கொண்டு அவனுடன் இன்னும் 12 முஸ்லிம்கள் (இவர்களை ஸ்லீப்பர் செல்கள் என்று அழைக்கிறார்கள், இவர்கள் சாதாரணமாக மக்களுடன் மக்களாக இருப்பார்கள். இவர்கள் வெளிநாட்டில் இருந்தெல்லாம் வரமாட்டார்கள். உள்ளுரிலேயே உள்ளவர்கள். அதாவது இந்திய பிரஜைகள். இவர்கள் அன்றாட வேலைகளை பார்த்துக்கொண்டே தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுவார்கள். இவர்கள் செல்போன் கடை வைத்திருப்பார்கள், ஜூஸ் கடை வைத்திருப்பார்கள், மெக்கானிக் கடை வைத்திருப்பார்கள். தங்களுக்கென்று கொடுக்கப்படும்  வேலையை (அசைன்மென்ட்) செய்யும் நேரம் வந்தவுடன் அதனை சரியாக செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு உத்தரவு கொடுக்க ஒருவன் இருப்பான். இப்படி நாட்டின் பல பகுதிகளிலும் ஆட்கள் இருப்பார்கள். அப்படித்தான் இந்த படத்தில் காட்டுகிறார்கள்.) குண்டு வெடிப்பை நிகழ்த்த இருப்பதை அறிகிறார் விஜய்.
3. உடனே காவல்துறையில் உள்ள தன் நண்பனை தன்னுடன் இணைத்துக் கொள்கிறார்.
4. தன்னுடன் உள்ள இராணுவத்தில் பணிபுரியும் அதிகாரிகளை துணை சேர்த்துக்கொண்டு அந்த 12 பேரையும் சுட்டுக்கொல்கிறார். பின்னர் அதன் மூளையாக செயல்படும் வில்லனை கண்டுபிடித்து அவனை அழிக்க செல்கிறார். அதற்காக இராணுவத்தில் இருந்து வெடிமருந்துகளை எடுத்து கொண்டு வருகிறார். தன்னுடன் பணிபுரிந்து கை கால்களை இழந்த இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் வில்லனின் கப்பலை துவம்சம் செய்கிறார்.
இதற்கிடையே விஜயை மிரட்டி பல இடங்களில் பல கார்களின் அவரை வரவைத்து தன்னுடைய இடத்திற்கு கொண்டு வருகிறான் வில்லன். பின்னர் அந்த கார்களில் எல்லாம் வெடிகுண்டுகளை வைத்துள்ளேன். அந்த கார்களில் நீ வருவதையும் படம் எடுத்து வைத்துள்ளேன். இப்போது உன்னைக் கொன்று விடுவேன். உன்னை கொன்றதாக  இராணுவத்தில் உள்ள எங்கள் நபர் சொல்லிக்கொள்வார். அதற்காக அவர் புகழப்படுவார் என்று கூறி தன்னுடைய லேப்டாப்பை காட்டுகிறான்.
கிளைமாக்ஸில் அந்த முஸ்லிம் இராணுவ அதிகாரியை காட்டுகிறார்கள். நல்ல பெயர் வாங்கி இராணுவத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை தேர்வு செய்து அங்கும் ஸ்லீப்பர் செல்களை உருவாக்குவது தான் அந்த முஸ்லிம் இராணுவ அதிகாரியின் திட்டம். முடிவில் அந்த இராணுவ அதிகாரியை அவரே சுட்டுக்கொண்டு சாகும் படி செய்கிறார் கதாநாயகன் விஜய்.
5. மொத்தத்தில் புரோகித் கதை அப்படியே உல்டா செய்யப்பட்டுள்ளது. புரோகித் போலவே விஜய் செயல்படுகிறார். எதிர்பாராத விதமாக வில்லன்கள் கையில் விஜய் சிக்கிக்கொண்டு தீவிரவாதிகள் வைத்த குண்டுகளை விஜய் வைத்தது போல் வில்லனுடைய லேப்டாப்பில் காட்டியிருப்பது புரோகித்-இன் லேப்டாப்பில் புரோகித் செய்த சதிகள் பதிவாகியிருப்பதை காப்பாற்றும் வண்ணம் உள்ளது.
படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் ஆழமாக திட்டமிடப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ஏதாவது ஒரு 10 நிமிடத்தை பார்த்தால் கூட அதில் ஒரு முஸ்லிம் தீவிரவாதியையோ அல்லது அவன் செய்யும் தீவிரவாத செயலையோ காட்டுகிறார்கள். செய்திகளில் முஸ்லிம்களின் பெயர்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் இடங்கள் என படத்தின் அனைத்து ஃபிரேம்களும் முஸ்லிம்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏதோ  ஏனோ தானோவென்று பணம் பண்ணுவதற்காக எடுக்கப்பட்ட படமாக தெரியவில்லை. படத்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் நஞ்சு விதைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கெதிராக முஸ்லிம்கள் கூட்டமைப்பு கிளம்பியவுடன் கூட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கு படம் போட்டு காட்டப்பட்டது.
ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும் படக்குழுவினரால் உறுதியளிக்கப் பட்டது.
இதற்கிடையே படத்தை அப்படியே ஓட்டும் முயற்சியும் சமகாலத்தில் படக்குழுவினரால் செய்யப்பட்டது. அவர்கள் தமிழக உள்துறை செயலாளர் சந்தித்து படத்திற்கும் படகுழுவினருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. “நீங்கள் கண்டதையும் படம் பண்ணுவீர்கள், உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தந்துகொண்டிருக்க வேண்டுமா?” என்று உள்துறை செயலாளர் கூறிவிட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் படக்குழுவினர் தலைமை செயலகத்தின் பின்புறமாக செய்தியாளர்களை சந்திக்காமல் வெளியேறினர்.
முஸ்லிம்களின் கூட்டமைப்பினர் படக்குழுவினரிடம் திரைப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்படவேண்டும், படக்குழுவினர் இத்தகையதொரு படத்தை எடுத்ததற்காக முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்தனர். இல்லையெனில் இத்திரைப் படத்தை எந்த திரையரங்கிலும் காட்ட விடமாட்டோம் என்று கூறினர்.
இதன் படி ஊடகங்களின் முன் படக்குழுவினர் பகிரங்க மன்னிப்பு கேட்டனர். அப்போது நாடகத்தனமாக காட்சிகளும் அரங்கேறின. தாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல தங்கள் செயல்களால் முஸ்லிம்கள் வருத்தப்பட்டிருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என ஒப்பாரி வைத்தவர்கள் இதற்கு பிராயசித்தமாக இனி வரும் காலத்தில் விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் எனவும் முஸ்லிம்களை பெருமைபடுத்தும் விதத்தில் படம் எடுக்கப்போவதாகவும் கூறினர். இவ்வளவு கேவலமாக முஸ்லிம்களை காட்சிக்கு காட்சி களங்கப்படுத்தி  நிறுத்தி நிதானமாக யோசித்து காட்சிகளை அமைத்து படம் எடுத்தவர்கள் இதனை முன்னரே யோசித்திருக்க வேண்டும்.
இதன் பின்னர் படக்குழுவினர் முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் சமாதானம் செய்து கொள்ள முன்வந்து அவர்கள் ஆட்சேபித்த சில காட்சிகளை நீக்கியதாக கூறி மீண்டும் படத்தை காட்டினர். ஆனாலும் அதில் பல காட்சிகள் அப்படியே தான் இருந்தன. ஒட்டு மொத்த படமே திட்டமிடப்பட்டு ஒவ்வொரு காட்சியும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படத்தை ஒட்டு மொத்தமாக தடை செய்வது தான் சரியானதாக இருக்கமுடியும் என பலர் அங்கே பேசிக்கொண்டதை நம்மால் கவனிக்க முடிந்தது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அதில் ஒரு காட்சி. ஸ்லீப்பிங் செல்லை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் விஜயால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவருடைய படம் தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது. அவருடைய வீட்டில் அவருடைய குழந்தை அதைக்காட்டி அம்மா அது அப்பா என்கிறான். அக்குழந்தையின் அம்மா அதாவது தீவிரவாதியின் மனைவி குழந்தையின் வாயை இறுக்கமாக பொத்தி அழைத்து செல்கிறாள், ஒரு சொட்டு கண்ணீர் விடாமல். இந்த காட்சியை சுட்டிக்காட்டி படத்தின் டைரக்டரிடம் இக்காட்சியின் மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன? முஸ்லிம்களின் வீடுகளில் உள்ள பெண்களும் தீவிரவாதத்திற்கு உடந்தை என்பதா அல்லது கணவன் இறந்தாலும் அதை பற்றி ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் அழுத்தமாக குழந்தை வாயை பொத்துவது முஸ்லிம் பெண்கள் அழுத்தமானவர்கள் விஷயம் தெரிந்தாலும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவா என்ற கேள்வி முஸ்லிம் கூட்டமைப்பினரால் எழுப்பப்பட்டதற்கு அவர் வாயடைத்து போனார். மௌனமாக இருந்தார். இக்காட்சி கடைசிவரை படத்தில் இருந்து நீக்கப்படவில்லை.
அடுத்ததாக இன்னொரு காட்சி. விஜயின் தங்கை தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார். அவளுடைய கழுத்தை அறுத்து கொலை செய்ய தீவிரவாதிகள் முயல்கின்றனர். அதை படம் பிடிக்கவும் முயல்கின்றனர். இந்த காட்சியின் பின்னணியில் அரபு எழுத்துக்கள். அருகில் சிலர் அரபு வசனங்களை ஓதுகின்றனர். இக்காட்சியும் நீக்கப்படவில்லை. இதே போல் பல காட்சிகளை சொல்லலாம்.
செய்வது அனைத்தையும் செய்து விட்டு உடலைக் காட்டி வியாபாரம் செய்பவர்கள் நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவார்கள் அல்ல என ஒப்பாரி வைத்துவிட்டு சென்றுள்ளனர். இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறாது என்ற எண்ணத்துடன் முஸ்லிம் கூட்டமைப்பினரும் இப்படத்தை அனுமதித்தனர்.
நம்மை பொறுத்தவரை இப்போராட்டங் களினால் இப்படம் பிரபலப்படுத்தப் படவேண்டும் என்பதே படத்தை தயாரித்தவர்களின் நோக்கம். அது இப்போது நிறைவேறிவிட்டதாக தெரிகிறது. பட்டி தொட்டியில் உள்ளவர்களெல்லாம் “அப்படி என்னப்பா அந்த படத்தில் இருக்கிறது, இந்த முஸ்லிம்கள் போராட்டம் நடத்துகிறார்கள்” என்று கேட்டவண்ணம் படத்தை பார்க்கின்றனர்.
இது போன்ற படம் எடுப்பதை தடுக்க இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கிறார்கள், விஷம கருத்துகளை விதைக்கிறார்கள் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தை நாட வேண்டும். படக்குழுவினர் படத்தில் நடித்தவர் அனைவரின் மீதும் வழக்குகள் பதியப்பட வேண்டும். இதை வெளியிட அனுமதித்த சென்சார் போர்டு மீதும் வழக்கு பதியவேண்டும்.
இதற்கு அப்பாற்பட்டு சினிமா என்பது நிஜவாழ்வின் பிரதிபிம்பமே என்ற வாதத்தை எடுத்துக்கொண்டு பேசுவேமாயானால் இந்த படம் எடுக்கப்பட்டதை ஊக்குவித்தது எது என்பதை முஸ்லிம்கள் ஆழ்ந்து ஆராய வேண்டும். ஆங்காங்கே அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என முத்திரைக்குத்தப்பட்டு கைது செய்யப்படுவதும் அதனை ஊடகங்கள் தங்களுடைய விஷமத்தின் மூலம் அனைவருடைய மனதிற்கும் கொண்டு சேர்த்து விஷத்தை விதைப்பதுமே நாம் அறிந்த வரையில் இதற்கான முக்கிய காரணங்களாகும்.
ஆகவே அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படும் போதும் அவர்கள் ஆண்டு கணக்கில் சிறையிலடைக்கப்படும் போதும் முஸ்லிம்கள் குரல் கொடுக்காமல் போவோமேயானால் இத்தகைய ஊடக தாக்குதல்களை தாங்கியே ஆகவேண்டிய நிலை ஏற்படும். நிஜத்தில் நம்மை தீவிரவாதிகள் என்று கூறுவதை தடுக்க முயலாமல் சினிமாவில் நம்மை தீவிரவாதிகள் என கூறுவதை தடுக்க முயல்வது நிஜத்தை விட்டு நிழலை தண்டிப்பது போல். எனவே, உடனடியாக நாம் செய்ய வேண்டியது இதுவரை எப்படியோ என்று இருந்து விட்டோம், ஆனால் இனி வருங்காலங்களில் எந்த ஓர் அப்பாவி முஸ்லிமையும் தீவிரவாதி என முத்திரைக்குத்தி தண்டிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அதை எதிர்த்து போராடுவோம் என உறுதி கொண்டு அதற்கு அச்சாரமாக தற்போது தீவிரவாதி என முத்திரைக் குத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தஞ்சை தமீம் அன்சாரிக்கு நியாயம் கேட்டு குரல் எழுப்பவேண்டும். அதனால் எழக்கூடிய பிரச்சனைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவேண்டும். செய்யுமா முஸ்லிம் சமுதாயம்...?
- அபூ அஃப்ரஹ்

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets