சென்னை.டிச.26 - தமிழகம் கடும் மின்பற்றாக்குறையில் தத்தளித்து வருகிறது. எனவே இடைக்கால நிவாரணமாக கல்பாக்கம் அணு மின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம்,வல்லூர் மின் நிலையம் ஆகியவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சமீப காலமாக தமிழ்நாடு எப்போதும் இல்லாத அளவு கடும் மின் தட்டுப்பாடு பிரச்சினையில் இருப்பதை தாங்கள் அறிவீர்கள் தமிழகத்துக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் பல வழிகள் வாயிலாக 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. எனவே, 4 ஆயிரம் மெகாவாட் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு தமிழ்நாட்டின் 3வது முறையாக பதவி ஏற்றபோது தமிழ்நாட்டுக்கு கூடுதலாக மின்சாரம் வழங்கவேண்டும் என தங்களிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் மத்திய அரசின் எதிர்மறைவான நடவடிக்கையால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதே நேரத்தில் கடந்த 672011 அன்று தங்களுக்கு எழுதிய கடிதத்தில் 1000 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக வழங்க வேண்டும் என கோரியிருந்தேன். ஆனால் எங்களுக்கு (தமிழகத்துக்கு) 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
23102012 அன்று தங்களுக்கு எழுதிய கடிதத்தில் டெல்லி மாநில அரசு பயன்படுத்தாமல் ஒப்படைத்த மத்திய தொகுப்பு மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதில் எனக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக மத்திய அரசு வேண்டுமென்றே எதிரான பதிலையே அளித்தது.
எனவே குறைந்தபட்சமாக தமிழ்நாட்டில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை அருகேயுள்ள வல்லூர் மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் 2830 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்கவேண்டும்.
தமிழ்நாட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மின் திட்டங்கள் முழுமையாக செயல்படும் வரை, கடுமையாக மின்தட்டுப்பாட்டினால் தவிக்கும் தமிழக மக்களுக்கு இடைக்கால ஏற்பாடு ஆக இந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
கூடங்குளத்தில் அணுமின் திட்டம் இடையூறு எதுவுமின்றி சிறப்பாக செயல்பட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதும் தாங்கள் அறிந்ததே. சமீபத்தில் நான் உங்களை சந்தித்தபோது, கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதை எதிர்த்து நடந்த போராட்டங்களின்போது எழுந்த மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்க எனது தலைமையிலான அரசு எடுத்த முயற்சிகளை தாங்கள் கனிவுடன் கேட்டு அறிந்தீர்கள்.
பதிலுக்கு கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் 2000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்த்தேன். காரணம் எதுவுமின்றி இதை நான் குறிப்பிடவில்லை. அதற்கான முன் நிகழ்வுகள் இல்லாமலும் இல்லை.
ஆந்திரபிரதேச மாநிலத்தில் துவக்கப்பட்ட சிம்ஹாத்ரியில் உள்ள மத்திய அனல்மின் உற்பத்தி நிலையத்தில் தலா 500 மெகாவாட் மூலம் 2 யூனிட்களில் 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை அனைத்தும் ஆந்திர மாநிலத்துக்கே வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மின் தட்டுப்பாடினால் கஷ்டப்படும் மக்களுக்கு கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இறுதியாக தமிழ்நாட்டில் மத்திய அரசு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் இடைக்கால அளவாக வழங்கவேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் எங்களுக்கே வழங்கவேண்டும் என்பதை தாங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அதை உடனடியாக பரிசீலித்து எங்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் வழங்க வேண்டும்.பிற மாநிலங்களுக்கு ஒரு நீதி, தமிழகத்திற்கு ஒரு நீதி என்று மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. அதை நிறுத்தி தமிழக மக்களுக்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment