Facebook Twitter RSS

Sunday, December 23, 2012

Widgets

யார் இந்த பாசிஹ்?


வைகறை வெளிச்சம்:fasiq_495நமது உளவுத்துறையினர் அடுக்கடுக்கான திகிலை நாட்டுக்குக் தந்து கொண்டிருக்கின்றனர். ஊடகங்களையும் திகிலால் திக்குமுக்காடச் செய்து வருகின்றார்கள். சுருக்கமாக சொன்னால் முஸ்லிம்களை தீவிரவாத பரம்பரையினராய் காட்டிட முயற்சி செய்கின்றார்கள் உளவுத்துறையினர்.
இதற்கு நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன. இந்த வகையில் வழக்கறிஞர் கென்னடி அவர்களின் சொற்கள் முஸ்லிம் சமுதாயம் எத்தகையதொரு சூழ்நிலையை எதிர்கொள்கின்றது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கிடும். (வழக்கறிஞர் கென்னடி அவர்கள் தான் திருச்சி தமீம் அன்சாரியின் வழக்கை நடத்திக் கொண்டிருப்பவர்)
இஸ்லாத்தில் சாதியக் கொடுமை இல்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளில் இஸ்லாத்திற்கு நிறைய நபர்கள் மதம் மாறி இருக்கின்றார்கள்.

இங்குள்ள மற்ற மதமக்களோடு சேர்ந்து முஸ்லிம்கள் மக்கள் விரோத தவறான கொள்கைகளுக்கு எதிராகப் போராடு கின்றார்கள். இதனை தாங்கிக் கொள்ளாத அரசு உளவுத்துறையோடு சேர்ந்து இவ்வாறு பொய்வழக்குகளைப் புனைகின்றது இஸ்லாமியர்களைச் சமூகத்தில் தனிமைப் படுத்த உளவுத்துறை சதிசெய்கின்றது. (பார்க்க வைகறை வெளிச்சம் - நவம்பர் 2012 பக்கம் 36)
நீதித்துறையின் செயல்களைக் கூறிவிட்டு மேற்கண்ட செயல்கள் இஸ்லாமியர்களை ஒரு சமூகத்தின் மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தி, சட்டம் நீதித்துறை அரசு இவை அனைத்தும் தங்களுக்கு எதிராக உள்ளதாகக் கருதிடும் ஓர் இறுக்கமான சமூக சூழலை உருவாக்க இவை வித்திடும். (பார்க்க வைகறை வெளிச்சம் நவம்பர் - 2012 பக்கம் 38)
இதைத்தான் அன்று மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தாவன் அவர்கள் இப்படிச் சொன்னார்கள்
“அதாவது இந்தியாவின் நீதிபரிபாலனம், வர்க்க சிந்தனை வகுப்புவாத சிந்தனை இவற்றை அடிப்படையாக கொண்டது. அது பெண்களுக்கும் தலீத்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானது சிறுபான்மையினர் இந்த நீதிபரிபாலத்தைப் பார்த்து பதறுகின்றார்கள். காரணம் அவர்களுக்கு நீதி கிடைக்காது என்பது மட்டுமல்ல. அவர்கள் நீதியின் பெயரால் கொடுமைப்படுத்தவும் படுவார்கள்”  (The Hindu :Oct 3,2003)
உளவுத்துறை தொடர்ந்து தரும் திகில்களின் ஒரு பகுதியாக டெல்லியில் வைத்து பீகாரைச் சார்ந்த பாசிஹ் என்பவரை கைது செய்து கபளீகரப்படுத்தி உள்ளார்கள். இப்படி அப்பாவிகளை சிறையிலடைத்து முஸ்லிம்களை வில்லன்களாகக் காட்டுவதை ஒரு நீண்ட திட்டத்துடன் தான் செய்கின்றார்கள்.
முதன் முதலில் சமுதாயத்தின் அடிமட்டத்திலிருக்கும் ஏழை எளியவர்களைக் குறிவைத்தார்கள். அவர்கள் ஏழைகளாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த நாட்டு சட்டங்களையும் அறியாதவர்களாக இருந்தார்கள். இதனால் நமது உளவுத்துறையினர் நீதித்துறையோடு நின்று நிறைவேற்றிய சதிகளை ஏனென்று கேட்பாரில்லை.
எடுத்தற்கெல்லாம் அன்றாடங் காய்ச்சிகளையே குறைசொல்லி பழகிப் போய்விட்ட நமது மேடை முழங்கிகள் அந்த மக்களையே இடித்தும் கடிந்தும் பேசினார்கள். ஏன் முஸ்லிம்களிலுள்ள ஓரளவுக்கு வசதி படைத்தவர்களை நம்பவும் வைத்து விட்டார்கள்.
அடுத்து உளவுத்துறையினர் நடுத்தர மக்களைக் கைவைத்தார்கள். அப்போதும் அவர்களை கேட்பாரில்லை. அடுத்து அவர்கள் படித்தவர்கள் மேல்தட்டு மக்கள் பேராசிரியர்கள் இவர்களைக் கைவைத்தார்கள்; வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏன் பத்திரிக்கையாளர்களையே கைவைத்தார்கள். இப்ஃத்திகார் ஜீலானி, SAR ஜீலானி காஷிஃபி இவர்களெல்லாம் இந்த வரிசையிலேதான் இடம் பெறுகின்றார்கள்.
இந்த வரிசையில் இப்போது பாசிஃக் என்ற முஸ்லிம் இடம் பெற்றுள்ளார். இவர் ஒரு பொறியியல் வல்லுநர்.
fasiq_495
நமது உளவுத்துறையினர் நமது நீதிபதிகளுக்கே வெளிநாடுகளோடு தொடர்பிருக்கின்றது எனக் கதைகட்டியவர்கள். அந்தக் கதைகளைக் கோப்புக்களாகவும் Files பின்னர் Dossiers என்ற விசாரணை அறிக்கைகளாவும் வளர்த்து விடுகின்றார்கள்.இதைகண்டு நீதிபதிகளே குலை நடுங்குகின்றார்கள்.
இதைத்தான் நாம் பாபரி மஸ்ஜித் வழக்கில் பார்த்தோம். நீதிபதி S.U.கான் அவர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கும் தொடர்புகள் இருப்பதாக ஒரு மலையளவு கோப்புகளை தயார் செய்து அவரை அதைக் கொண்டு மிரட்டினார்கள். இதனை இந்தியா டுடே பத்திரிகையே வெளியிட்டது. இதனை நாம் விளக்கமாக வைகறை வெளிச்சம் நவம்பர் 2010 இதழில் வெளியிட்டிருந்தோம். இதனை இப்போது நாம் வெளியிட்டுள்ள பாபரி மஸ்ஜித் அடிப்படை தகவல்கள் என்ற நூலிலும் வெளியிட்டுள்ளோம்.
நீதிபரிபாலத்தையே உளவுத்துறை இப்படி ஆட்டிப்படைக்க இயலும் என்றால் தமீம் அன்சாரிகள், பாசிஃஹ் இவர்கள் எந்த மூலைக்கு?
இப்படித்தான் இப்போது பாட்னாவைச் சார்ந்த பாசிக் என்பவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.
ஃபாசிக் முஹம்மதின் குடும்பம்
ஃபாசிக் முஹம்மது மிகவும் கண்ணியமான குடும்பத்தைச் சார்ந்தவர். இவருடைய தந்தை டாக்டர் ஃபைரோஸ் அஹமத் ஒரு மருத்துவர். பீஹார் மாநில அரசில் பணியாற்றிக்கொண்டிருப்பவர். பீகாரிலுள்ள மதுபானி மாவட்டத்தின் சுகாதார மையத்தை பராமரிக்கும் பொறுப்பை சுமப்பவர்.
பாசிஹ் முஹம்மதின் தாத்தா மஹ்பூப் பாஷா தந்தையின் தந்தையும் ஒரு மருத்துவர். பாசிஹ் முஹம்மது-இன் தயார் அம்ரா ஜமால் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிகின்றார். பாசிஹ் முஹம்மது-இன் மாமனார் மனைவியின் தந்தை உர்ஃபான் அஹ்மத் பிகார் மாநில பொதுவிநியோக அதிகாரி.
தனது மகனைப் பற்றி சொல்லிடும் பாசிஹ் முஹம்மது-இன் தந்தை இப்படி தன் ஆதங்கத்தைத் தெளிவுபடுத்தினார்.
“என்னுடைய மகனை சவூதி அரேபியாவில் வைத்து மே 13 இல் கைது செய்தார்கள். ஐந்து மாதங்கள் ஆகியும் என் மகன் என்ன தவறு செய்தான் என்பதைச் சொல்லிடவில்லை. என்னுடைய மகன் அப்பாவி அவன் குற்றமேதும் செய்திருந்தால் அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துங்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும். ஆனால் இவ்வளவு நாள் அவனை காவல் துறையின் எடுப்பில் வைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எங்கள் கிராமத்தைச் சார்ந்த டாக்டர் அப்துல் சலாமின் மகன் “காபில் அக்தர்” என்பவரை இப்படித்தான் கைது செய்தார்கள் கர்நாடகாவில் வைத்து அவனிடம் 20 வெள்ளைக் காகிதங்களில் கையப்பம் வாங்கியதாக என்னிடம் சொன்னார் அவனுடைய தந்தை. (Times of India, Oct 23 – 2012)
இப்போது பாசிஹ் முஹம்மது-ஐ சந்திக்க அவனுடைய மனைவி நிக்காத் பர்வின் டெல்லி சென்றிருக்கின்றார். கணவனுக்காக நீதியைத்தேடி அலையும் கஷ்மீர் பெண்களின் கதையாகவும் அது முடியலாம்.
நமக்குத் தெரியும் நீதி நிச்சயமாக டெல்லியில் இல்லை. அவன் ஒரு முஸ்லிம் என்பதனால் தான் கைது செய்யப்படுகின்றான். சித்திரவதைச் செய்யப்படுகின்றான்.
பாசிஹ் விவகாரத்தில் சவூதி அரேபியாவில் நடந்ததென்ன?
நமது உளவுத்துறை அண்மைக் காலந்தொட்டு வெளிநாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றார்கள். அரபுநாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் பாதுகாப்பிலும் அடாவடித்தனங்களின் கீழுமிருக்கின்றன என்பதை நாமறிவோம்.
அரபுநாடுகளில், மன்னராட்சியை எதிர்ப்பவர்கள் அதை எதிர்க்கவேண்டும் என சிந்திப்பவர்கள் இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள். ஆகவே அரபு மன்னர்களுக்கு எதிராக முஸ்லிம்களே திரும்பிடும் வாய்ப்பிருக்கின்றது என்றொரு பீதியை அரபு நாட்டு ஆட்சியாளர்களின் மனங்களில் ஏற்படுத்தி வருகின்றார்கள் அமெரிக்கர்கள்.
இப்படியரு பீதியை ஏற்படுத்திட இரவும் பகலும் உழைக்கின்றார்கள் அமெரிக்காவின் உளவுத்துறையினர். பொய் மூட்டைகளை இரகசிய தகவல்களாகவும் ஆய்வறிக்கைகளாகவும் முத்தான முடிவுகளாகவும் சமர்ப்பிப்பதில் அமெரிக்க உளவுத்துறையை யாரும் விஞ்சிவிட இயலாது.
நமது உளவுத்துறையினர் அவர்களின் சிஷ்யர்கள் தாம். ஆனால் போகின்ற போக்கைப் பார்த்தால் நமது உளவுத்துறையினர் அவர்களை விஞ்சி விடுவார்கள் போலிருக்கின்றது.
இந்தப் பின்னணியில் நமது உளவுத் துறை நம் நாட்டிலிருந்து பிழைக்கச்செல்லும் முஸ்லிம்களை பற்றிய பொய் தகவல்களை சவூதி அரசுக்கு அனுப்புகின்றது. ஏற்கெனவே பீதி வயப்பட்டிருக்கும் சவூதி அரேபிய அரசு அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற அளவில் தான் உளவுத்துறை தரும் தகவல்களைப் பார்க்கின்றது. உளவுத் துறையினர் குறிப்பிடும் நபர்களைக் குறிவைக்கின்றது. நமது உளவுத்துறையின் நாடகத்தை அரங்கேற்றத் தேவைப்படும் போது சவூதி ஆட்சியாளர்களை தொடர்பு கொள்கின்றார்கள். அவர்கள் உடனேயே அந்த அப்பாவி இந்தியர்களை அனுப்பி விடுகின்றார்கள். நிச்சயமாக இந்தியாவில் உளவுத்துறை ஆடும் சதுரங்கத்தை சவூதி ஆட்சியாளர்கள் முழுஅளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்குப் புரிய வைக்கவும் முடியாது. ஆனால் அவர்கள் அதைப்புரிந்திடும் நாள் ஒன்று வரும்.
இந்தச் சூழ்நிலையிலும் சூழ்ச்சியிலும் தான் இப்போது பாசிஹ் முஹம்மது சிக்கிக் கொண்டான்.
பாசிஹ் முஹம்மது விசயத்தில் சவூதி அரசு சற்று வித்தியாசமாக நடந்திருக்கின்றது. பாசிஹ் முஹம்மத் இந்தியா அனுப்பும்முன் பாசிஹ் முஹம்மது மீது நீங்கள் குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்திருக்கின்றீர்களா? என்றொரு வினாவை எழுப்பி இருக்கின்றது சவூதி அரசு.
இந்தக் கேள்விக்கு நமது உளவுத்துறையில் நேரடியாக ஆமாம் என்று சொல்லிட இயலவில்லை. காரணம் நமது உளவுத்துறை இங்கே ஒரு கற்பனை கதையை புனைந்து வைத்துள்ளது. இந்தக் கற்பனைக்கு பாசிஹ் முஹ்ம்மது எந்த அளவுக்குப் பொருந்தி வருவான் என்பதை பாசிஹ் முஹம்மது வந்தபின் அவனை சித்திரவதை செய்து தான் அறிந்திட இயலும். அவனிடம் கையெழுத்து வாங்கிட வேண்டிய வெள்ளைத்தாள்களில் கையெழுத்து வாங்கிய பின்தான் தங்கள் நாடகத்தை கற்பனைக் கதையை வெளியே சொல்லிட இயலும். ஆனால் இதுவரை குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யவில்லை.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதை அறிந்த சவூதி அரசு பாசிஹ் முஹம்மதை நாடுகடத்திட இயலாது எனக் கூறிவிட்டது.
ஆனால் உளவுத்துறை நமது அரசின் வழி பயங்கர அழுத்தங்களைத் தந்தது. இதனால் சவூதி அரசு இரண்டு நிபந்தனைகளை விதித்து பாசிஹ் முஹம்மது-ஐ இந்தியாவுக்கு அனுப்பியது. அந்த நிபந்தனைகள் பாசிஹ் முஹம்மத்-ஐ சவூதி அரசுக்குத் தெரியாமல் கைது செய்யக் கூடாது.
அப்படி கைது செய்தால் அதாவது சவூதி அரசின் அனுமதியோடு கைது செய்தால் அதனை இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். சற்று விளக்கமாகச் சொன்னால் ஏதோ உலகை இரண்டாகப் பிளக்கவிருந்த ஒருவரைக் கைது செய்துவிட்டோம் எனக் கூப்பாடு போட்டு விருது வாங்கிட முனையக் கூடாது. அதனை இரகசியமாகவே வைத்துக் கொள்ளவேண்டும்.
பாசிஹ் முஹம்மது-ஐ டெல்லி விமான நிலையத்தில் வைத்து உயரப் பறந்து பாய்ந்து பிடித்தாக கூறிய நமது அதிகாரிகள் இரண்டு நிபந்தனைகளையுமே காற்றில் பறக்க விட்டார்கள். தங்கள் விருப்பம் போல் ஆட்டம் போட்டார்கள்.
நமது தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் திகில்களை விற்பனை செய்திட வேண்டும் என விரும்புகின்றன. அவை பாசிஹ் முஹம்மத் மீது ஒரு முழுஅளவு விசாரணையை நடத்தி முடித்துவிட்டன.
அவனைப் பெரிய குற்றவாளியாகப் குற்றப்படுத்திவிட்டன. இனி நீதிமன்றங்களில் என்ன நடந்தால் என்ன? இந்த Electronic Media என்ற மின்னணு ஊடகங்கள் கிஞ்சிற்றும் திருந்தியதாக தெரியவில்லை. பத்திரிக்கை உலகம் இப்போது நமது மிகப்பெரிய போராட்டத்திற்குப்பின் செய்திகளின் மறுபக்கத்தை அவ்வப்போது சுட்டிக் காட்டுகின்றன. இப்போது பாசிஹ் முஹம்மது விவகாரத்தில் அவரது குடும்பத்தின் வாக்கு மூலங்களை மக்கள் மன்றத்திற்கு தந்திருந்தன.
ஆனால் பக்கம் பக்கமாக பாசிஹ் முஹம்மதைக் குற்றப்படுத்தும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றிக்கு என்ன ஆதாரம் எனப்பார்த்தால் அத்தனைக்கும் உளவுத்துறையின் கூற்றுக்கள் தாம் ஒரே ஆதாரம். “The Sources Say” என்று பக்கங்களை நிறைக்கின்றார்கள் தொலைக்காட்சி செய்திகளுக்கும் இதே உளவுத்துறை தகவல்கள்தாம் ஆதாரம்.
குற்றசாட்டுகள்:
பாசிஹ் முஹம்மது மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு 26/11 என்று அடையாளப்படுத்த படும் மும்பை தாக்குதலுக்குக் காரணமாக செயல்பட்டார். பெங்களூரில் சில தாக்குதல்களை நடத்தினார். இந்தியன் முஜாஹித்தீன் என்றொரு அமைப்பில் அங்கம் வகித்தார் என்பனவாகும்.
26/11 என்ற மும்பைத்தாக்குதல் பற்றி நாம் நாடெங்கும் ஒரு பெரிய பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கின்றோம். அந்தப் பிரச்சாரத்தின் மையப்பகுதியாக கர்கரேயைக் கொலை செய்தது யார் என்ற நூல் இருந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த 26/11 என்ற மும்பை தாக்குதலினால் (நடந்தது 2008 ஆம் ஆண்டு) இது வரை இப்படி ஒரு குற்றவாளியை அவர்கள் காட்டிடவில்லை. ஆனால் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இப்படியரு குற்றவாளியைக் காட்டுகின்றார்கள். இஃது ஒன்றே தேவைக்கு தகுந்தார் போன்ற இவர்கள் வழக்குகளைக் ஜோடிப்பார்கள் என்பதை எடுத்துக்காட்டும். ஆமாம் 26/11 வழக்கில் உச்ச நீதிமன்றமே தீர்ப்புக்கூறி விட்டது. அப்படி இருக்க புது குற்றவாளியைக்காட்டினால் வழக்கை மீண்டும் நடத்துவார்களா?
சந்தேகம் எனும் சரக்கு:
தீவிரவாதி என்ற சந்தேகம். இது நமது உளவுத்துறையும் அதன் கடைக்கண் அசைப்பில் இயங்கும் காவல்துறையும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கெதிராகப் பயன்படுத்திடும் மிகப்பெரிய ஆயுதம்.
முஸ்லிம்களை கைது செய்திட வெறும் சந்தேகம் போதும். ஆனால் இந்துத்துவவாதிகள் என்ன செய்தாலும் கைதுகள் நடக்காது. அப்படியே கைது செய்யப்பட்டாலும் உடனேயே பிணையில் விடுவிக்கப்பட்டு விடுவார்கள். எடுத்துக்காட்டாக நந்தேத் குண்டு வெடிப்பில் கைது செய்ப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்துத்துவதீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதை குறிப்பிடலாம்.
இப்போது பாசிஹ் முஹம்மது-ஐ இதே சந்தேகத்தின் அடிப்படையில் தான் கைது செய்திருக்கின்றார்கள். இனிமேல் இந்தியாவில் இருக்கும் ஐந்து சித்திரவதைக் கூடங்களில் ஒன்றில் வைத்து அடித்து நொறுக்கி வெள்ளைத்தாள்களில் கையெழுத்து வாங்கி வழக்குத் தொடர வேண்டும். இந்தியாவில் இயங்கிவரும் சிறப்புச் சித்திரவதைக் கூடங்களைப்பற்றித் தெரிந்திட பார்க்க வைகறை வெளிச்சம் செப்டம்பர் 2009 பக்கம் 19-26
இந்தியன் முஜாஹிதீன் :
இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக நமது உளவுத்துறை கூறிவருகின்றது 2007 ஆம்ஆண்டு ஹைதராபாத்திலுள்ள மக்கா மஸ்ஜித்-இல் ஜும்ஆவில் வெடித்த குண்டுகளுக்குப் பிறகு நமது உளவுத்துறை தனக்குத்தானே ஏற்படுத்திய அமைப்புத்தான் இது.
ஆனால் முஸ்லிம்கள் இப்படி ஒரு அமைப்பு இந்தியாவில் இல்லையென்றும் அப்படி இருந்தால் அது குறித்த வெள்ளை அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என்றும் கூறினார்கள். அரசு ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
இதையும் வைகறை வெளிச்சத்தில் வெளியிட்டிருந்தோம்
தீவிரவாதம் பற்றிய வெள்ளை அறிக்கை
இப்போது தீவிரவாதம் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை முஸ்லிம்களே தயாரித்து வருகின்றார்கள். அது பற்றிய அறிவிப்பு ஒன்று இந்த இதழில் இடம் பெற்றுள்ளது.
பாசிஹ் முஹம்மது இந்த இந்தியன் முஜாஹிதீன்களில் ஒருவராகவும் இன்னும் மூன்று பேர் அரபுநாட்டுப் பாலைமணலில் மறைந்திருப்பதாகவும் கதைகள் பறக்கின்றன.
பாசிஹ் முஹம்மது மீது புனையப்பட இருப்பது பொய் வழக்கு என்பதற்கு இதுவே சாட்சி.
டெக்கான் முஜாஹித் :
இப்படியும் ஒரு தீவிரவாத அமைப்பு முழுமூச்சில் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற ஜமுக்காளத்தில் வடிகட்டியப் பொய்யை அவிழ்த்து விட்டார்கள். ஆனால் அது எடுபடவில்லை. சரி இப்போது இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பின் பெயரால் முஸ்லிம்களை அழிப்போம் பின்னர் தேவைப்பட்டால் டெக்கான் முஜாஹிதீன் என்ற அமைப்பை கொண்டு வந்திடலாம் என விட்டுவிட்டார்கள்.
வெளிவராத ஆவணங்கள்:
நமது அதிரை அப்பாவி தமீம்அன்சாரி விவகாரத்திலும் முஹம்மது பாசிஹ் விவகாரத்திலும் உளவுத்துறை வழக்கமாகக் காட்டும் மூன்று ஆவணங்களைக் காட்டிட வில்லை. அவை செல்போன் சிம்கார்டு, திருக்குர்ஆன் பிரதி, இந்தியாவின் வரைபடம்.
ஒரு வேளை இவற்றை இனி நம்மக்கள் நம்பமாட்டார்கள் என விட்டு விட்டார்கள் போலும்
நாம் இந்தக் கட்டுரை வழி நினைவு படுத்தியதால் இனி காட்டினாலும் காட்டுவார்கள். நவூதுபில்லாஹ்
என்னதான் முடிவு:
இந்தக் கொடுமைகளை எதிர்ப்பதற்கு நடுநிலையாளர்களோடு இணைந்து முஸ்லிம்கள் ஒரு பெரும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். இதில் அவர்களோடு துணைநிற்க நிறைய நியாயவான்கள் நல்லவர்கள் பெரும்பான்மை சமுதாயத்தில் உண்டு.
முஸ்லிம்களை அந்நியப்படுத்தி தனிமைப்படுத்தி அழிக்கும் முயற்சியின் முதற்கட்ட நடவடிக்கையே இவை. வேறுசொற்களில் சொன்னால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வைக்கப்படும் உலை. இதனால் இந்தச் சூழ்ச்சியை முறியடிப்போம்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets