(டாக்டர் ஆங்ச்சுவி எழுதிய 'பெய்ரூத்திலிருந்து ஜெரூசலம் வரை' நூலின் மொழியாக்கம்)
நான், மேலைநாட்டு பெண் மருத்துவர் ஒருவரை Patronising bastard என்று என்று கோபத்தில் திட்டியது மருத்துவர்கள் அனைவரையும் ஒன்று போல் பாதித்துவிட்டது, என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் என்னைப் பற்றியும், நான் கோபத்தில் கொட்டிய வார்த்தைகளைப் பற்றியும், ஒரு சூறாவெளி பிரச்சாரத்தை அந்த அம்மா செய்திருந்தது.
ஒரு கட்டத்தில் நானே குற்ற உணர்வால் கொந்தளித்தேன். ஆனாலும், கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டும், விரட்டப்பட்டும், அகதிகளான பின்னரும் அழிக்கப்பட்டும் வந்த அந்த மக்களை அவள் அந்திக்கும்பல் எனப்பேசியதற்கு நான் பேசியதே சரியாக இருக்கும் என நான் என்னை தேற்றிக்கொண்டேன். இனிமேல் இப்படிப் பேசிடும் தெம்பை யாரும் பெற்றிட மாட்டார்கள். அந்த வகையில் எனக்கு வெற்றிதான். இந்த வகையில் எனக்கு அஃது மாபெரும் வெற்றிதான்.
அதனால் இதில் என்ன வந்தாலும் வரட்டும் என்று விட்டு விட்டேன்.
இதில் விரும்பத்தகாதவை விளைந்தால், அதில் நான் பாதிக்கப்பட்டால், அந்தப் பாதிப்பை இந்த மக்களுக்கு நான் செய்யும் சிறு தியாகமாக எடுத்துக் கொள்வேன்.
என்ன வந்தாலும் அது இந்த மக்களின் அல்லல்களுடன் ஒப்பிடும் போது அது ஒன்றுமில்லை, என்பதுதான் உண்மை.
இப்படியெல்லாம் ஓர் ஆய்வை எனக்குள்ளேயே நடத்தி என்னை நான் தேற்றிக்கொண்டேன். உறுதியானேன்.
அடுத்தநாள் நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கே என்னை வரவேற்றதெல்லாம், ஆங் சுவீ -யை மருத்துவமனையிலிருந்து அகற்றிடும் முயற்சிகள் நடக்கின்றன, என்ற செய்திதான். நான் அதைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.
‘அஜீசா’ ஹாலித், எப்போதும் பிசியாக இருப்பவள். அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவளுடைய வேகமான வேலைகளில் இடையூராக இருக்க வேண்டாம் என நான் முடிவு செய்து கொண்டேன்.
ஆகவே எனது பணிகளின் பக்கம் திரும்பினேன். நான் அஜீஸா ஹாலித் இன் அறையைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.
போகும்போது அவள் அறையை எட்டிப்பார்த்தேன். அவள் ஒரு தாயைப் போல் அகதிகள் முகாமிலிருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் ஓடோடி வந்து அந்த மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள். அதாவது அந்த கும்பலுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
என்னையுமறியாமல் நான் அவள் அறைக்குள் அடியெடுத்து வைத்தேன். என்னைக் கண்டதும் எல்லோருடைய முகமும் என் பக்கம் திரும்பியது.
அஜீசா என்னிடம் எப்படி இருக்கின்றாய் “சுவீ” என்றாள். நன்றாக இருக்கின்றேன். உன்னை நான் தொந்திரவு செய்ய விரும்பவில்லை என்றேன்.
அஜீசா “அப்படி ஒன்றுமில்லை வா” என்றாள். நான் நேரடியாக விஷயத்திற்கு வந்தேன்.
என்னை மருத்துவமனையிலிருந்து அகற்றும் வேலைகள்? எனத் தொடங்கினேன்.
அஜீசா ஹாலித் சற்றும் யோசிக்காமல் “சுவீ” நான் அனைத்தையும் அறிவேன். அப்படியரு அறிக்கையை என்னிடம் தந்தார்கள், நான் அதைக் கிழித்துப் போட்டுவிட்டேன்.
நீ வேண்டும் எனக்கு. இவர்கள் (மேலை நாடுகளிலிருந்து மருத்துவம் செய்ய வந்த மருத்துவர்கள்) வேண்டுமானால் இங்கிருந்து போகட்டும், என்றாள்.
அவளுடைய சொற்களில் தொனித்த உறுதி சற்று குன்றிப் போயிருந்த என் உற்சாகத்தையும் உணர்வையும் தூக்கி நிறுத்தியது.
அஜீசாவைப் போன்ற பெண்கள், இருக்கும் வரை எதுவும் நடக்காது. பாலஸ்தீன் அகதிகளை அரவணைக்கும் தாய் ஒருத்தி இருந்து கொண்டே இருப்பாள்.
நான் பெற்ற உற்சாகம் அடங்குமுன் அவள் இன்னொன்றையும் சொன்னாள்.
அது, இந்த மக்கள் என்னவர்கள். என்ன வந்தாலும் அவர்கள் இங்கே தான் இருப்பார்கள் என்றாள்.
இஃது என்னிடம், இரட்டிப்பு உற்சாகத்தை ஏற்படுத்திற்று. அந்த மக்கள் மீது அவளுக்கு அவ்வளவு அக்கறை இருந்தது.
அன்று நான் பலருக்கு அறுவை சிகிச்சை செய்தேன் உற்சாகத்துடன். அந்த உற்சாகம் குன்றாமல் என்னுடைய ஹோட்டல் அறைக்கு வந்தேன். ஹோட்டல் அறைக்கு லெபனானைச் சார்ந்த சில கிருஸ்தவ சகோதரிகள் வந்தார்கள்.
என்னிடம் நீ ஒரு கிருஸ்தவப்பெண். ஆனால் நீ இஸ்ரேலுக்கு பயங்கர எதிரியாக இருக்கின்றாய் என்றும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.
நான் அவர்களிடம், பலஸ்தீன் மக்கள் படுகொலை செய்யப்பட்டதைச் சொன்னேன். கிருஸ்தவர்கள் மீதும், யூதர்கள் மீதும் எனக்கேற்பட்ட காட்பும், கசப்பும், நியாயமானதுதான் என்பதையும் தெளிவு படுத்தினேன்.
அவர்கள் சற்று குழம்பினார்கள். என்றாலும் நான் பாலஸ்தீன் அகதிகள் பக்கம் முழுதும் சாய்ந்துவிட்டதாகவும், இஸ்ரேலியர் மீது கோபவேசத்தோடு இருப்பதாகவும் குறை கூறினார்கள்.
அன்பை போதிக்கும் கிருஸ்தவத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொலை செய்பவர்கள் அநாதைகள் முகாமையும், அவர்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவமனையையும் அழிப்பவர்கள், இவர்களெல்லாம் மனிதர்களே அல்ல. இவர்களும், இவர்களுக்கு வக்காளத்து வாங்குபவர்களும் மனிதர்களாக நிச்சயமாக இருக்க முடியாது.
கிருஸ்தவத்தின் பெயரால் இங்கு நடக்கும் அடாத செயல்களால், நான் கிருஸ்தவத்தையே வெறுக்கின்றேன் என சரமாரியாக சொற்களைத் துப்பாக்கிக் குண்டுகளாய் பாய்ச்சினேன்.
அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
நான் அவர்களிடம் நாளைக்காலை என்னோடு வாருங்கள், நாம் ஷாப்ரா, ஷத்திலாவைச் சுற்றிவருவோம் என்றேன். இவர்கள் வருகையால் கிருஸ்தவ வட்டாரம் இயங்கத் தொடங்கி இருக்கின்றது என்பது எனக்குப் பளிச்செனப்பட்டது.
அவர்கள் சரி என்றார்கள்
அடுத்த நாள் காலையில் அவர்களில் மூன்று பேர் வந்தார்கள்.
நான் அவர்களை அழைத்துக் கொண்டு நேரே ஷப்ரா, ஷத்தீலா முகாம்களுக்குச் சென்றேன்.
இந்த முறை நான் வழக்கமாக நுழையும் திசையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நேர் எதிரான திசையிலிருந்து முகாமிற்குள் நுழைந்தேன்.
அவர்களுடன் முதன் முதலில் அதாவது, எடுத்த எடுப்பிலேயே ஓர் நடுத்தரவயது பெண்மணியைச் சந்தித்தேன்.
என்னைக் கண்டதும் ஓடோடி வந்து என்னைக் கட்டிப்பிடித்தாள்.
அத்தனை சூழ்நிலைகளும் அவர்களுக்கு எதிராகப் போய்க் கொண்டிருந்த போதும் அவள் தன் இழந்த வீட்டை ஒரு பதுங்குமிடமாக ஆக்கிக் கொண்டிருந்தாள். ஆமாம்! அகதிகள் முகாமில் ஒரு வீடு!
இஸ்ரேலின் இராணுவத்தினரால் குண்டுவீசியும், புல்டோசர்களை இயக்கியும் இடிப்பார்கள். இதனை பொறுத்துக் கொள்ள வேண்டும். இடிபாடுகளில் கிடைத்தவற்றைக் கொண்டு இல்லம் செய்திட வேண்டும். அதிலே நாட்களை நகர்த்திட வேண்டும்.
எது இடிந்ததோ இல்லையோ!
எது தகர்ந்ததோ இல்லையோ! அவர்களிடமிருந்த இங்கிதம், நன்றியுணர்வு , விருந்தோம்பல் இவை கிஞ்சிற்றும் குறைந்திடவில்லை.
என்னையும் என்னோடு வந்த மூன்று பேரையும் தங்க அந்த இடிபாடுகளிடையே அமரவைத்து அரபு தேனீரை தந்தாள்.
என்னைப்பார்த்து “நீங்கள் என் மகனுக்கு சிகிட்சை செய்திருக்கின்றீர்கள். நான் உங்களைக் காஸா மருத்துவமனையில் சந்தித்திருக்கின்றேன்” என்றாள்.
மகன் எங்கே? நன்றாக இருக்கின்றானா? என்ற இரண்டு கேள்விகளையும் ஒன்றாகவே கேட்டேன்.
இதற்குப் பதிலாக அவள் தேம்பித்தேம்பி அழ தொடங்கி விட்டாள்.
எனக்கு ஏன் இப்படியெல்லாம் கேட்டோம் என்றாகி விட்டது.
உங்களிடம் வைத்தியம் பெற்றபின் என் மகன் நன்றாகத்தான் இருந்தான். அவன் அதோ அங்கே இருக்கும் மைதானத்தில் ஏனைய சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான்.
அந்த சிறுவர்களுக்கு நடுவே ஒரு குண்டை வீசினார்கள். குழந்தைகள் சின்னா பின்னமாகச் சிதறிப் போய்விட்டார்கள் என அழுது கொண்டே சொன்னாள்.
நானும் என்னோடு வந்த மூன்று கிருஸ்தவ பெண்களும் அவளுக்கு ஆறுதல் சொன்னோம்!
அந்தக் கிருஸ்தவ சகோதரிகளுக்குப் போதும், போதும் என்றாகிவிட்டது.
நான் அவர்களை வேகமாக அந்த அகதிகள் முகாமிற்கு வெளியே அழைத்து வந்தேன்.
வரும் வழியில் அவர்கள் ஒரு காட்சியைக் கண்டார்கள்.
அந்தக் காட்சி:
இடிந்த வீடுகளிலுள்ள இடிபாடுகளை ஓரளவுக்கு பதுங்கும் பொந்துகளாக ஆக்கி, அதில் தங்கள் உடல்களை மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள், அந்த அகதிகள் முகாம்களில் வாழ்ந்த பாலஸ்தீன முஸ்லிம்கள்.
அவற்றை அன்று இரவே இடிப்பதற்கு ஓர் ஏற்பாட்டை செய்திருந்தார்கள் இஸ்ரேலிய இராணுவத்தினர். அந்தப் பணியை ‘பே அல்பெக்’ என்றொரு பிரிவைக் கொண்டு செய்தார்கள்.
இந்த “பே அல் பெக்” (Ba albek)- என்ற படையில் இஸ்ரேலிய இராணுவத்தினருடன், லெபனானைச் சார்ந்த கிருஸ்தவர்களுமிருந்தார்கள்.
இவர்கள் ஷாப்ரா, ஷத்திலா, படுகொலைகளின் போது ஆங்காங்கே பதுங்கி இருந்து, தப்பியோடும் பாலஸ்தீன முஸ்லிம்களையும், ஆங்காங்கு ஒழிந்து கொள்ளும் முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும், இஸ்ரேலிய இராணுவத்தினருக்குக் காட்டிக் கொடுத்தனர்.
படுகொலைகளின் தொடக்கத்தில் இவர்கள் இஸ்ரேலிய அழுத்தங்கள் வந்தால் பழியை இவர்கள் மீது போட்டுவிடலாம் என்பதே!
இப்போது இவர்கள் இரவு நேரங்களில் இடிபாடுகளிலிருந்து எழும் வீடுகளை இடித்துக் கொண்டிருந்தார்கள்.
இவர்களையும், கிருஸ்தவத்திற்காகவும், இஸ்ரேலியர்களுக்காகவும் அதோடு வந்த கிருஸ்தவ சகோதர்களுக்கு அறிமுகம் செய்தேன்.
அவர்கள் அரண்டு போனார்கள்.
அத்தோடு அவர்கள் சரி “சுவீ” நாங்கள் செல்கின்றோம் என்றார்கள்.
நான் வாருங்கள் என்னோடு, காஸா மருத்துவமனைக்கு நீங்கள் வக்காலத்து வாங்கி வாதாடும், இஸ்ரவேலர்களின் இன்னொரு முகத்தையும் குரூரத்தையும் காட்டுகின்றேன் என்றேன்.
அவர்கள் நாங்கள் ஏற்கெனவே அதிர்ந்து போயிருக்கின்றோம். இன்னும் அதிகம் வேண்டாம் எனச் சொல்லி விட்டு என் பதிலுக்குக் காத்திருக்காமல் போய் விட்டார்கள்.
நான் நேரே காஸா மருத்துவமனைக்குச் சென்றேன். என்னுடைய அறுவை சிகிட்சை அரங்கிற்கு சென்று, அறுவை சிகிட்சைகளைத் தொடங்கினேன்.
மாலைவரை தொடர்ந்து அறுவை சிகிட்சைகளைச் செய்தேன். நொறுங்கி போன பல உடல்களை ஒன்று சேர்த்தேன்.
மாலை ஐந்து மணி அளவில் ஓய்வெடுக்கச் சென்றேன். மீண்டும் எட்டு மணிக்கெல்லாம் தொடங்கினேன்.
நடு இரவு வரை என் சேவையைத் தொடர்ந்தேன்.
நடு இரவில் மருத்துவமனையில் ஒரு பெரும் பரபரப்பு:
ஆமாம் சில இஸ்ரேலிய இராணுவத்தினர் ஆறு பேரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். இவர்கள் ஆறு பேரும் வீடுகளை இடித்துக் கொண்டிருக்கும் போது கீழே வீழ்ந்தவர்கள்; இதனால் உடல் ஒடிந்து போனவர்கள்.
இவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரை காஸா மருத்துவமனைக்கு அழைத்து வந்த பரபரப்பில், மொத்த மருத்துவமனையும் விழித்துக் கொண்டது.
அந்த பரப்பில் நான் முந்திச் சென்றேன். அவர்கள்-அந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பீதிவயப்பட்டு நின்றார்கள்.
அவர்கள் என்னிடம் எலும்புகள் தாம் சேதமடைந்திருக்கின்றன. உடனேயே சிகிட்சை செய்யுங்கள் என்றார்கள்.
நான் அவர்களை யார் என்று தெரிந்து கொண்டேன். அகதிகள் முகாமில், இடிபாடுகளைக் கொண்டு எழுப்பிய வீடுகளையும், இஸ்ரேலிய இராணுவத்தினர் வீசிய குண்டுகளால் வீழாத அவர்களையும், வீடுகளையும் இடித்தவர்கள் ‘பே அல் பெக்’ என்ற இஸ்ரேலின் கைக்கூலிகள். அவர்களிடம் இவர்கள் எங்கிருந்து எப்படி வீழ்ந்தார்கள் எனக்கேட்டேன். அதற்கு அவர்கள் தற்செயலாக நிகழ்ந்து விட்டவிபத்து என்றார்கள். பாலஸ்தீன அகதிகளுக்கு துன்பமிழைக்கும் இவர்களுக்கு இங்கே வைத்தியம் நிச்சயமாகச் செய்யக்கூடாது என முடிவு செய்தேன்.
அவர்களிடம் இங்கே மருத்துவர்கள் இல்லை என்றேன். அவர்கள் பிச்சை கேட்டதைப் போல் நின்றார்கள். இந்த நேரத்தில் யாரோ பின்னாலிருந்து என் தோள்பட்டைகளைத் தட்டுவதுபோலிருந்தது.
இவர்கள் அகதிகள் முகாமில் பாலஸ்தீனர்களைக் கைது செய்ய ஓர் கூறையில் ஏறிடும் போது கீழே வீழ்ந்து விட்டார்கள் என்ற குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தேன் அஜீசா ஹாலித் நின்று கொண்டிருந்தாள்.
அவள் தான் காஸா மருத்துவமனையின் நிருவாகி!
அவன் என்னிடம் தனியாகப் பேசிட வேண்டும். கொஞ்சும் வா என்றாள்.
நான் அவருடன் சென்றேன். தனியாக ஓரிடத்தில் வைத்து அவள் “சுவீ நீ இவர்களுக்குச் சிகிட்சை அளிக்க வேண்டும். நீ என்ன நினைக்கின்றாய் என்பது எனக்குத் தெரியும். என்னை நம்பு! என்னுடைய குடும்பம், இவர்களால் நிரம்ப நஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் ஜெரூசலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம். எங்களை அங்கே இருந்து துரத்திவிட்டார்கள். எங்களை முற்றுகை இட்டார்கள். பின்னர் கூட்டாகக் கொலை செய்தார்கள். இந்த ரணங்களெல்லாம் இன்னும் ஆறவில்லை. ஆனால் நாம் யாருக்கும் சிகிட்சை அளிக்கமாட்டோம் எனச் சொல்லிட முடியாது. ஏனெனில் நாங்கள் பாலஸ்தீன செம்பிறைச் சங்கத்தைச் சார்ந்தவர்கள். எங்களுடைய கொள்கைகள் எல்லா நோயாளிகளையும் ஒன்று போல் பார்க்க வேண்டும் என்று எங்களைக் கட்டாயப்படுத்துகின்றன, அவர்கள் எங்கள் எதிரிகளாக இருந்தாலும் சரியே!
(அஜீசாவின் இந்த சொற்கள் இஸ்லாத்தின் உன்னதமான தத்துவம் ஒன்றை பறைசாற்றுவதால் அதனை இங்கே ஆங்கிலத்திலும் ஆங்க் சுவீ அவர்களின் சொற்களில் தருகின்றோம்.
Then I felt someone gently ragging at my white coat, it was AZZIZA, The Hospital administrator. she wanted to talk to me in private. Please swee, she said, you have to treat these people. I know what you are thinking. But, believe me, my family has saffered so much. We are forced to leave Jerusalem, then siege, then the massacre. All these wounds are still sore, but we can not deny anyone medical care. We are the palestinian red cross society, and are prmaces compell us, to give medical care to all alike even an enemies.!)
நான் அந்த அழகிய நங்கையின், பெருந்தன்மை மிக்க முகத்தை எட்டிப்பார்த்தேன்.
அத்தனை அல்லல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிய பின்னரும் அவள் தன் பெருந்தன்மையை எவ்வளவு, எள்ளின் மூக்களவு, மூக்கின் முனை அளவுக்குக்கூட குறைத்துக் கொள்ளவில்லை.
அஜீசாவின் இந்த சொற்கள், நான் சுருங்கி போனதையும் அவள் விரிந்து வியாபித்து நிற்பதையும் காட்டின.
நான் அவளுக்கு நிரந்தர அடிமையானேன். அஜீசாவின் மேன்மை, மருத்துவக்கல்லூரியில் நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன், சிங்கப்பூரில் வைத்து எடுத்து உறுதிமொழியை எனக்கு நினைவுபடுத்திற்று.
உண்மையைச் சொன்னால் அஜீசா, மருத்துவ உலகின் ஒழுக்க விழுமியங்களை எனக்குப் பொட்டில் அறைந்தாற்போல் நினைவுபடுத்தினாள். நான் அட்டியின்றி அவர்களுக்கு சிகிட்சை அளித்தேன். ஆனால் எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அந்த பெண்மணி என்னை காஸா மருத்துவமனையிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றி கண்டுவிட்டாள். அப்படித்தான் அடுத்தநாள் செய்திகள் சொல்லின. -தொடரும் .source வைகறை வெளிச்சம்
No comments:
Post a Comment