காபூல்:ஆப்கான் அரசு மற்றும் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் தாலிபான் தலைவர்களுடன் நாளை (வெள்ளிக்கிழமை) பிரான்சில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்கள். 2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்பு அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பிரான்சு அமைச்சகத்தின் பொருளாதார உதவியுடன் பாரிஸை மையமாக கொண்டு இயங்கும் ஃபவுண்டேசன் ஃபார் லா என்ற அமைப்பு இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது. தாலிபானின் பாகிஸ்தானில் இருக்கும் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சவூதி மற்றும் பாகிஸ்தானில் முந்தைய தாலிபான் அரசின் தூதராக பணியாற்றிய ஷஹாபுத்தீன் தல்வார் மற்றும் குழுவினர் தாலிபான் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்கள். தாலிபான் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் உருவாக்கிய உயர்மட்ட அமைதிக்குழுவின் தலைவர் ஸலாஹுத்தீன் ரப்பானியின் தலைமையிலான குழு ஆப்கான் அரசின் பிரதிநிதிகளாக கலந்து கொள்வார்கள்.
ஆனால், ஆப்கான் அரசின் பிரதிநிதிகள் தாலிபான் தலைவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவார்களா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்காவின் கைப்பொம்மையாக விளங்கும் ஹமீத் கர்ஸாய் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்று இதுவரை தாலிபான் கூறிவந்தது.
No comments:
Post a Comment