Facebook Twitter RSS

Tuesday, January 17, 2012

Widgets

முஸ்லிமல்லாதவருடன் எவ்வாறு பழகுவது?

Print E-mail
கேள்வி :  முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்களின் தொடர்பு எந்தெந்த வகையில் அமைய வேண்டும்?
பதில் :  முஸ்லிமல்லாத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதில் அதிகமான முஸ்லிம்களுக்கு தெளிவான பார்வை இல்லை.

முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரையும் அறவே வெறுத்து அவர்களை அடியோடு ஒரு சாரார் புறக்கணித்து ஒதுக்கிவிடுகின்றனர். முஸ்லிமல்லாத மக்களும் இஸ்லாத்தைப் புரிந்து ஏற்க வேண்டுமானால் அவர்களுடன் நெருங்கிப் பழகுவதன் மூலமே அது சாத்தியமாகும். இதை உணராமல் முஸ்லிமல்லாத மக்களை அறவே ஒதுக்குவதும், அவர்களிடமிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொள்வதும் முற்றிலும் தவறாகும்.
மற்றொரு சாரார் அவர்களுடன் இரண்டறக் கலந்து விடுகின்றனர். இஸ்லாம் தடை செய்துள்ள காரியங்களை அவர்கள் செய்யும் போது அதில் பங்கெடுத்துக் கொண்டு தாமும் அது போல் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் செய்யும் பலதெய்வ வழிபாட்டில் கூட கலந்து கொள்ளும் அளவுக்கு நடந்து தம்மை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிக் கொள்கின்றனர். இதுவும் தவறாகும்.
இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளில் எதையும் விட்டுக் கொடுக்காமலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் பேணி நடப்பதுதான் அவர்களுடன் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய சரியான முறையாகும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவில் வாழ்ந்த காலகட்டத்தில் அவர்களின் முதன்மையான எதிரிகளாக யூதர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொலை செய்யவும் அவர்கள் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்பட்டனர். அப்படி இருந்த யூதர்கள் அனைவரையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளாகக் கருதி நடந்து கொள்ளவில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்யும் பொறுப்பை சில இளைஞர்கள் செய்து வந்தனர். அவர்களில் யூத இளைஞர் ஒருவரும் இருந்தார். (ஆதாரம்: புகாரி 1356)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீடுவரை செல்லவும் பணிவிடை செய்யவும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரால் நபிகள் நாயகத்தின் உயிருக்கே உலை வைக்க முடியும். அப்படி இருந்தும் எதிரி சமுதாயத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவரைத் தனது அந்தரங்க ஊழியராகச் சேர்த்துக் கொண்டார்கள். பின்னர் அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பது தனி விஷயம்.
ஒரு யூதப் பெண் சமைத்த ஆட்டு இறைச்சி நபிகள் நாயகத்திற்கு உண்ணக் கொடுத்தார். ஆனால் அதில் அவர் விஷம் கலந்து வைத்திருந்தார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் எதிரி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று எண்ணாமல் அந்த இறைச்சியில் ஒரு துண்டைச் சாப்பிட்டார்கள். அதில் விஷம் கலந்திருப்பதைக் கண்டு கொண்ட பின் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க நபியின் தோழர்கள் வற்புறுத்திய போது அதை அவர்கள் ஏற்கவில்லை. அப் பெண்ணை மன்னித்தார்கள். (ஆதாரம் புகாரி 2617)
எதிரி சமுதாயத்தவரும் நபிகள் நாயகத்திடம் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் இருந்ததையும் அதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கீகாரம் செய்ததையும் இதில் இருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொந்த ஊரில் இருந்து விரட்டப்பட்டு மதினாவுக்கு அகதியாக வந்தாலும் நாளடைவில் அவர்களே அரபு நாட்டின் அதிபராக வளர்ந்தார்கள்.
இப்படி இருந்தும் அவர்கள் தமது தேவைக்காக தமது கவசத்தை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்து கோதுமையைப் பெற்றார்கள். (ஆதாரம்: புகாரி 1926)
நாட்டின் அதிபர் அடைமானம் வைப்பவராகவும் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அடைமானம் பெறுபவராகவும் இருந்துள்ளனர். இதில் இருந்த மற்ற மக்களின் உரிமைகள் எந்த அளவுக்கு நபிகளால் மதிக்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் ஒரு சபையில் அமர்ந்திருந்த போது ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அதைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்றார்கள். உடனிருந்த தோழர்கள் இது யூதரின் பிரேதம் என்று சுட்டிக் காட்டினார்கள். அதைக் கண்டு கொள்ளாத நபிகள் நாயகம் அவர்கள் உங்களை ஒரு பிரேதம் கடந்து சென்றால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள் என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி 1228)
நபிகள் நாயகம் அவர்களைக் கொலை செய்திட சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் முயன்ற போது அவர்களும் அவர்களின் நெருங்கிய தோழரான அபூபக்கரும் ஊரைவிட்டு இரகசியமாக வெறியேறினார்கள். மதினாவுக்கு செல்லும் வழியைக் காட்டுவதற்காக முஸ்லிம் அல்லாத ஒருவரை நம்பி அவரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்கள். (ஆதாரம் புகாரி 2103)
எந்தச் சமுதாயம் கொலை செய்வதற்கு திட்டமிட்டுவிரட்டி விடுகிறதோ அதே சமுதாயத்தைச் சேர்ந்த நம்பகமானவரிடம் வழி காட்டும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். நபிகள் நாயகம் வாழ்க்கையில் இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஒருவர் முஸ்லிமாக இல்லை என்ற காரணத்துக்காக உலக விஷயங்களில் அவரை வெறுத்து ஒதுக்குவது நபிகள் நாயகம் காட்டித் தராத வழியாகும்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஜகாத் ஒரு கடமையாகும். செல்வந்தர்களிடம் இருந்து திரட்டப்படும் இந்த நிதியை எட்டு வகையான மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. அவர்களில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதற்காக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுவதும் சேர்க்கப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 9:60 பார்க்க.)
ஜகாத் என்ற நிதியைக் கூட முஸ்லிம் அல்லாதவருக்கு கொடுக்கலாம் என்றால் இஸ்லாத்தின் தாராளத் தன்மையை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆயினும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் இப்படி நட்புடன் பழகுவது என்பது அனைவருக்கும் பொதுவானதல்ல. முஸ்லிம் அல்லாத மக்களில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் ஒழிப்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டவர்களும் உள்ளனர். இவர்கள் மிக மிக குறைவு என்றாலும் இத்தகையவர்களும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
நம்மை ஒழிப்பதே ஒரே லட்சியம் என்று நடப்பவர்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்துப் பார்த்து இவர்கள் விஷயத்தில் மட்டும் அலட்சியப்படுத்தி ஒதுக்குமாறு இஸ்லாம் வழி காட்டுகிறது.
தன்னை அழிப்பதையே கொள்கையாகக் கொண்ட எவருடனும் யாரும் பழக மாட்டார்கள் என்பது இயல்பான ஒன்றுதான். இதைக் குறை கூற முடியாது. இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளில் இருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர் உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றியோர் உங்களை வெளியேற்றியதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள் (திருக்குர்ஆன் 60:8,9)
சங்பரிவாரம் போன்றவர்களுடன் நாம் எந்த ஒட்டும் உறவும் வைக்க முடியாது. அது நம்மை நாமே அழிப்பதாகவும் தான் அமையும் இத்தகைய போக்கு உள்ளவர்கள் இந்துக்களில் கால் சதவிதம் கூட இருக்க மாட்டார்கள். இவர்களைத் தவிர மற்ற மக்கள் அனைவரிடமும் நமது மார்க்கத்தை விட்டுக் கொடுக்காத வகையில் பழகுவதும் உதவிக் கொள்வதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets