Facebook Twitter RSS

Sunday, January 08, 2012

Widgets

பறிபோகும் தமிழக உரிமைகள்?




தமிழகம் எதிர்நோக்கும் வாழ்வா, சாவாபிரச்சினை முல்லைப் பெரியாறு மாத்திரம் அல்ல கர்நாடகத்துடன் காவிரி நதிநீர் பிரச்சினை, ஆந்திராவுடன் பாலாற்றுப் பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு பிரச்சினை இவற்றுடன் அண்டை நாடான இலங்கையுடன் கச்சத்தீவுப் பிரச்சினைஎனத் தமிழகத்தின் எல்லைகளுக்கு அப்பால் நிலை கொண்டுள்ள பிரச்சினைகளின் விளைவாக தமிழக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் நெருக்கடிக்குள்ளாகி வருகிறது. தமிழகம் தனது நியாயமான உரிமைகளைப் பறி கொடுத்து வருகிறதோ?



காவிரி நீர் : வருமா? வராதா?

கர்நாடகத்தில் குடகில் உற்பத்தியாகும் காவிரி, சுமார் 800கிலோ மீட்டர் நீளமுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 350கி.மீ. தூரமும், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் 450கி.மீ. தூரமும் பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது. கர்நாடகத்தைவிட அதிக தூரம் தமிழகப் பகுதியில் பாய்கிற காவிரியாற்று நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கு என்பது அந்த மாநிலமாகப் பார்த்து நமக்கு அளிக்கிற பரிசோ, பிச்சையோ அல்ல. அது தமிழகத்தின் உரிமை. ஒரு நதியின் மீதான உரிமை அது உருவாகும் மாநிலத்திற்கு மட்டுமல்ல, அதன் மூலம் பாரம்பரியமாகப் பாசனம் பெறும் பகுதிகளுக்கும் உண்டு என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இதற்கு Riparian water rights என்று பெயர்.


1924ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்த சென்னை மாநிலத்திற்கும், மைசூர் அரசரின் ஆட்சியின்கீழ் இருந்த சமஸ்தானத்திற்குமிடையே காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காவிரி நீரில் தமிழகத்திற்குரிய பங்கு 427டி.எம்.சி. தண்ணீர். 50ஆண்டுகளுக்குப் பிறகு, உபரிநீரின் அளவைக் கணக்கிட்டு, அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு பிரிவு. அது ஒரு பிரிவு மட்டும்தான். ஆனால், அந்த ஒப்பந்தம் 50ஆண்டுகளுக்கு மட்டும்தான், அது செயலிழந்துவிட்டது என்று திரிக்கத் தொடங்கியது கர்நாடகம். இதனால், 1971ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது.


"1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அதில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு 205டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதில் தமிழகத்தில் விவசாயவேலைகளுக்கு ஏதுவாக, ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும் 137டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

ஆனால், இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் ஏற்க மறுத்து விட்டது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழ்நாட்டில் மழை கிடையாது. அப்போதுதான் குறுவை சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடி மூலமாகத்தான், விவசாயிகளின் வாழ்க்கைக்குத் தேவையான பணம் கிடைக்கும். காவிரித் தண்ணீர் முறையாகக் கிடைக்காததனால் குறுவை சாகுபடி பெருமளவு குறைந்துவிட்டது.


2005ம் ஆண்டு நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இடைக்காலத் தீர்ப்பில் 205டி.எம்.சி. என்று கூறிவிட்டு, இறுதித் தீர்ப்பில் அதைவிடக் குறைவாக 178டி.எம்.சி. என்று கூறியுள்ளது நடுவர் மன்றம். அதையும் கூட ஏற்க மறுத்துவிட்டது கர்நாடகம்" என்கிறார், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.


நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகிய இரண்டையுமே ஏற்க மறுத்த கர்நாடகம், ‘தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது’ என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகமும், தமிழகமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. வழக்கு நிலுவையில் உள்ளது.


அப்படியானால், இப்போதும் சில நேரம் காவிரி நீர் தமிழகத்திற்கு வருகிறதே அது எப்படி? தமிழகத்தில் மழை இல்லாத ஜூன், ஜூலை மாதங்களில் தண்ணீர் வருவதில்லை. அக்டோபர் மாதம் கிருஷ்ணராஜசாகர் நிரம்பியதும் அணை திறக்கப்படும். அதாவது, தண்ணீர் திறக்கப்படாவிட்டால் அணை உடைந்துவிடும் என்ற அச்சத்தில் வெளியேற்றப்படும் நீர்தான் தமிழகத்திற்கு வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், கர்நாடகத்தின் வடிகாலாகத்தான் தமிழ்நாட்டை நடத்துகிறது கர்நாடகம்.

ஒப்பந்தங்களை ஒரு பொருட்டாக மதிக்காத கர்நாடகம், காவிரியின் துணை நதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி, காவிரி நீர்முழுவதையும் தேக்கி வைக்கிறது. 1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிய நேரத்தில், கர்நாடகத்தின் பாசனப்பரப்பு 11.2லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 25லட்சம் ஏக்கருக்கும் மேல் அதிகரித்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டின் பாசனப்பரப்பு முன்பிருந்ததைவிட வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. முப்போக சாகுபடி செய்து வந்த நிலங்கள், தற்போது ஒரு போக சாகுபடி நிலங்களாகச் சுருங்கி விட்டன.


தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிற அரசியல் கட்சிகள்காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கைப் பெறுவதற்கு, உரிமையை நிலைநாட்டுவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, விவசாயிகளுக்கு மாற்றுப்பயிர் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதாவது, காவிரியில் நமக்கு உரிய பங்கு கிடைக்காது என மனதளவில் முடிவுக்கு வந்து, மாற்று வழிகளை யோசிக்கத் துவங்கி விட்டன.


பாலாறா? பாழாறா?


 

வடிநிலப்பரப்பிலும், தண்ணீர் அளவிலும் காவிரிக்கு அடுத்தபடியாக இருப்பது பாலாறு. கர்நாடகாவில் கோலார் அருகே நந்தி மலைத்தொடரில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93கி.மீ.தூரமும், ஆந்திராவில் 33கி.மீ. தூரமும் கடந்து தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்தில் 222கி.மீ.ஓடி, சென்னைக்கு 100கி.மீ. தொலைவில் கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் இது கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் ஓடி (அதனால் இதற்கு குப்தகாமினி என்று கர்நாடகத்தில் பெயர்), பெத்தமங்களா என்ற இடத்தில் பூமிக்கு வெளியே வருகிறது. கண்ணுக்குத் தெரியாமல் ஓடுவதாலோ என்னவோ, கர்நாடகம் இதில் பிரச்சினை செய்வதில்லை. ஆனால், ஆந்திரம் தகராறு செய்கிறது.


தமிழகத்தில் பாலாற்றுப் படுகையின் பரப்பளவு 11,000கி.மீ. இப்படுகையில் வாழும் மக்கள் குடிநீருக்காவும், விவசாயத்திற்காகவும் பல நூற்றாண்டுகளாக பாலாற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். பாலாறு மூலமாக, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 2லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தன. காவிரி டெல்டா பகுதிக்கு அடுத்த படியாக தமிழகத்திற்கு அதிக நெல் விளைச்சலைத் தருவது பாலாற்று வடிநிலப்பகுதி. ‘அதெல்லாம் ஒரு காலம்’ என்று சொல்லும் அளவுக்கு இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது. பாலாற்றில் தண்ணீருக்குப் பதிலாக கானல் நீரை மட்டுமே இன்று காண முடிகிறது. பாலாற்றின் மூலம் தண்ணீர் பெறுகிற 317ஏரிகள் இன்று வறட்சியை நோக்கிச் செல்கின்றன. பாலாற்றில் இருந்து செல்லும் 606ஆற்றுக்கால்வாய்களின் நிலையும் அதோகதிதான்.


1802ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிகளில் புதிய அணைகளோ, நீர்த்தேக்கங்களோ, நீர் அமைப்புகளோ ஏற்படுத்தக் கூடாது. பாலாறு உட்பட 15முக்கிய நதிகள் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், ஆரம்பத்தில் இருந்து இந்த உடன்படிக்கைக்கு மாறாக கர்நாடகம் செயல்பட்டு வருகிறது.


பாலாற்றின் மூலம் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு 77டி.எம்.சி. ஆனால், பாலாற்றில் இப்போது கனமழை காலங்களில் மட்டுமே தண்ணீர் ஓடுகிறது. கர்நாடகத்தில் பல அணைகளைக் கட்டி, ஏராளமான தண்ணீரை அம்மாநிலம் எடுத்துக் கொள்கிறது. 45கி.மீ. தூரம் மட்டுமே பாயும் ஆந்திரப் பகுதியிலும் ஏராளமான தடுப்பணைகளை ஆந்திரா கட்டியுள்ளது. போதாக்குறைக்கு, தமிழகத்தின் எல்லைப்பகுதியான குப்பம் அருகே 250கோடி ரூபாய் செலவில் 160அடி உயரத்தில் தடுப்பணை ஒன்றைக் கட்டுவதற்கு முயற்சித்துவருகிறது ஆந்திர அரசு. இதன் மூலமாக ஆந்திரப் பகுதியில் 120கிராமங்கள் பயன் பெறும் என்றும், அங்கு புதிதாக கால்வாய் வெட்டப்பட்டு, சித்தூர்-திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளது ஆந்திர அரசு. தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஆந்திர அரசின் அணை கட்டும் முயற்சி தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அங்கு அணை கட்டப்படுமானால், தமிழ்நாட்டின் பாலாறு பாசனப் பகுதிகள் நிரந்தரமாக பாலைவனமாக மாறிவிடும்.

எல்லை தரும் தொல்லை

தமிழகத்தின் தண்ணீர் வளம் குறைவானது. தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டில் பாய்கிற ஒரே நதி தாமிரபரணி. மற்ற எல்லா நதிகளுமே அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகி, தமிழகத்திற்கு வருபவை. அதனால்தான், தண்ணீர் உரிமைகளை மறுக்கிற அண்டை மாநிலங்களுடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.


"குமரி மாவட்டத்தில் நெய்யாறு பிரச்சினை, நெல்லை மாவட்டத்தில் அடவிநயினாறு பிரச்சினை, ஆழியாறு புன்னப்புரா பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, பாலாறு பிரச்சினை, முல்லைப் பெரியாறு, ஒகேனக்கல் என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம், தமிழகத்துக்குச் சொந்தமான பகுதிகளை நாம் இழந்ததுதான். மாநில எல்லைகளைப் பிரிக்கும்போது, தமிழகத்துக்குச் சொந்தமான பல பகுதிகளை இழந்துவிட்டோம். தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழகத்திற்குச் சொந்தமானவை. அங்கு 2கிராமங்களில் மட்டுமே மலையாளிகள் உள்ளனர். கர்நாடகத்தின் மாண்டியா, கொல்லேகால் பகுதிகளில் சில கிராமங்கள் தமிழ்நாட்டிற்குச் சொந்தமானவை. தமிழர்கள் அதிகம் வசிக்கிற கோலார் தங்கவயல் கர்நாடகத்திற்குப் போய்விட்டது. தமிழகத்திற்குச் சொந்தமான சித்தூர், நெல்லூர், திருப்பதி ஆகிய பகுதிகள் ஆந்திராவிற்குப் போய்விட்டன. தமிழகத்திற்குச் சொந்தமான நெடுமாங்காடு, நெய்யாறு பகுதிகள் கேரளாவுக்குப் போய்விட்டன. இப்படி தமிழகத்துக்குச் சொந்தமான பகுதிகளை இழந்ததுதான் இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம்" என்கிறார், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.


மீட்கப்படுமா கச்சத்தீவு?





ஆறாத ரணமாய் நீடித்து வருகிறது தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் கொலைவெறித் தாக்குதல்கள். இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, கச்சத்தீவுப் பிரச்சினை. கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிப்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை. அப்பகுதிக்குச் சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் கச்சத்தீவைப் பயன்படுத்துவது நீண்டகால வழக்கம். ஆனால், இன்றைக்கு கச்சத்தீவுப் பகுதிக்குச் சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கொலைவெறியோடு தாக்குகின்றனர். துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகின்றனர். படகுகளை சேதப்படுத்துகின்றனர். வலைகளையும், பிற கருவிகளையும் பறித்துச் செல்கின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுஇலங்கை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.


1974ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததுதான் இப்பிரச்சினைகளுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஒப்பந்தத்திற்கு முன்பு கச்சத்தீவுப் பகுதி எப்படி இருந்தது?


"கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமானது. தமிழக மீனவர்களும், இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களும் கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிப்பது நீண்டகால வழக்கம். கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அச்சமயத்தில், தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் கச்சத்தீவு செல்வார்கள். அதேபோல் இலங்கையில் இருந்தும் கச்சத்தீவுக்கு வருவார்கள். பாஸ்போர்ட், விசா தேவையில்லை. அம்மை குத்தியிருந்தால் போதும். இந்தியாவிலிருந்து இலங்கையில் மலையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களில் 5லட்சம் பேர், திடீரென இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அவர்கள் தங்களின் நெருங்கிய உறவினர்களைப் பிரிந்தனர். இரு நாட்டிலும் உள்ள மலையகத் தமிழர்கள் தங்கள் உறவுகளைச் சந்திக்கும் இடமாகவும்கச்சத்தீவு இருந்து வந்தது" என்கிறார், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இரா.சனார்த்தனம்.


1974ம் ஆண்டு இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையே உருவான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானாலும்கூட, கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிப்பது, கச்சத்தீவில் வலைகளை உலர்த்துவது, ஓய்வெடுப்பது உள்ளிட்ட உரிமைகள் தமிழக மீனவர்களுக்கு உண்டு என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக, 1976ம் ஆண்டு மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவில் இரு நாட்டு எல்லைகளை வரையறுப்பதற்காக ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அது வேறு பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்கான ஒப்பந்தம். ஆகையால், தமிழக மீனவர்களின் உரிமைகள் குறித்து அதில் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், தற்போது இரண்டாவது ஒப்பந்தத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறது இலங்கை. தற்போது கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவம் தொடர்கிறது. இரு நாடுகளிடையிலான ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறி வருகிறது.


இதுவரையில், இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களால் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் உடலில் துப்பாக்கிக் குண்டுகளைச் சுமந்து திரிகின்றனர். உடல் ஊனமுடைந்த 300க்கும் மேற்பட்டோர், தொழிலுக்குச் செல்ல முடியாமல் நடைபிணமாக உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.


இந்த அவலங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்திய அரசோ கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. கச்சத்தீவு மீட்கப்படுமா? தமிழக மீனவர்களின் துயரங்கள் துடைக்கப்படுமா?


ஒகேனக்கலிலும் சிக்கல்

 

நல்ல குடிநீரைப் பார்த்தறியாத தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், புளோரைடு கலந்த நீரைப் பயன்படுத்துவதால் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதையும் செயல்படுத்தக்கூடாது என்று வம்பு செய்கிறது கர்நாடகம். காரணம், இத்திட்டத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுமாம். தமிழக எல்லைக்குள் வருகிற காவிரி நீரை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்வது தமிழ்நாட்டின் உரிமை. ஆனால், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அரசும், அங்குள்ள அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஒகேனக்கல் எங்களுக்குச் சொந்தம் என்று கூறிக்கொண்டு ஒகேனக்கலுக்கு படகில் வந்து அத்துமீறுகிறார்கள்.


30லட்சம் பேருக்கு நல்ல குடிநீர் வழங்கப்போகிற இத்திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கர்நாடகத்தின் எதிர்ப்புக்குரல் தணிந்த நிலையில் உள்ளது. ஆனாலும் இது டைம்பாம் மாதிரி. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.


மறுக்கலாமா மொழியுரிமையை?



தமிழர்களின் தாய் மொழிக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்பது நெடுநாளைய குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டைத் துடைத்தெறிவதற்கான எந்தவொரு அசைவும் இதுவரை இல்லை.


"ஒரு மனிதனுடைய விடுதலையின் முதல் அடையாளம், அவனுடைய மொழியைப் பயன்படுத்தச் செய்வதுதான். ஆனால், இந்தியாவில் இன்று வரையில் ஆட்சி மொழியாகத் தமிழ் இல்லை. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றங்களிலும் நீதிமொழியாகத் தமிழ் இல்லை. நமக்கான சட்டங்கள் அனைத்தும் அயல் மொழியிலேயே இடம் பெறுகின்றன. நமக்கு வழங்கப்படும் தீர்ப்புகளை மொழிபெயர்த்துத்தான் படிக்க வேண்டியுள்ளது. வேறு மாநிலங்களுடன் தமிழில் தொடர்பு கொள்கிற உரிமை நமக்கு இல்லை. ஆங்கிலத்தில் அல்லது இந்தியில்தான் தொடர்புகொள்ள முடிகிறது. முதன்மை மொழியாக ஆங்கிலமும், இந்தியும் தான் இருக்கிறது. துணை மொழியாக மட்டுமே தமிழ் உள்ளது. தமிழ்நாட்டில் இயற்றப்பட்டுள்ள ஆட்சிமொழிக்கான சட்டத்தில், ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தமிழைத் துணைமொழியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. ‘also tamil’ என்பதுதான் தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் நிலையாக உள்ளது. வழிபாட்டுத் தலங்களில்கூட தமிழர்கள், தமிழில் வழிபடுகிற உரிமை மறுக்கப்படுகிறது. அங்கு வடமொழிக்கு அடுத்த இடத்தில்தான் தமிழ் உள்ளது" என்கிறார், தமிழ்தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு.


தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வதாரங்களுக்கு உயிர் கொடுத்துவரும் இந்த உரிமைகள் மீட்கப்படுமா?

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets