இத்தாலியைச்
சேர்ந்த மிகப் பெரிய பயணிகள் கப்பல் ஒன்று தரை தட்டி கவிழ்ந்த விபத்தில்,
மூன்று பேர் பலியாகினர். எனினும், கப்பலில் இருந்த நான்காயிரத்துக்கும்
மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இத்தாலியைச்
சேர்ந்த கோஸ்டா கான்கொரிடா என்ற கப்பல், 450 மில்லியன் யூரோ செலவில்
கட்டப்பட்டு, 2006 முதல் பயணிகள் கப்பலாக செயல்படத் துவங்கியது.
"டைட்டானிக்' கப்பல் போன்ற இக்கப்பலில், ஐந்து உணவு விடுதிகள், 13 மதுபான
விடுதிகள், நான்கு நீச்சல் குளங்கள், ஜாக்குஸ்ஸி நிறுவனத்தின் ஆடம்பரமான
ஐந்து நீச்சல் தொட்டிகள், 6,000 ச.மீ., பரப்பளவில் உடற்பயிற்சிக் கூடம்,
தியேட்டர், சூதாடும் அரங்கம், டிஸ்கோ அரங்கம் உள்ளிட்ட சகல வசதிகளும்
உள்ளன. இதில், மொத்தம், 3,780 பயணிகள் செல்லலாம்.
இக்கப்பல்
நேற்று இத்தாலி தலைநகர் ரோம் அருகில் உள்ள துறைமுகத்திலிருந்து
புறப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக சிறிது தூரத்தில் உள்ள கிக்லியோ தீவின்
கரையருகில், தரை தட்டி, சிறிது சிறிதாக பக்கவாட்டில் சாயத் துவங்கியது.
இதற்குள் நிலவரத்தை ஊகித்துவிட்ட கப்பல் அதிகாரிகள், அனைத்துப் பயணிகளையும்
பத்திரமாக சிறு படகுகள் மூலம் வெளியேற்றினர். கப்பலில், இத்தாலி, ஜெர்மனி,
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் என, மொத்தம் 4,234
பேர் இருந்தனர். இவர்களில் 4,165 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மற்றவர்களைப்
பற்றிய தகவல்கள் தெரியவில்லை. பலர் படகுகளை நம்பாமல், கடலில் குதித்து
நீந்தி கரை சேர்ந்தனர். இதில் மூன்று பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல்
வெளியாகியுள்ளது.விபத்துக்குள்ளான கப்பல்,சிறிது சிறிதாக சாயத் துவங்கி,
தற்போது அதன் அரை பாகம் கடலில் மூழ்கிக் கிடக்கிறது.
No comments:
Post a Comment