அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலைக்கு தலைமை வகித்த முதல்வர்
நரேந்திர மோடிக்கு எதிராக பல வருடங்களாக தொடரும் சட்டரீதியான போர் என்னை
தளரச்செய்துவிட்டது என்று குல்பர்க் சொஸைட்டியில் கொடூரமாக கொலைச்
செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா
ஜாஃப்ரி கூறுகிறார்.
“இனி எனக்கு சிறிது ஓய்வு
தேவைப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எப்பொழுதும் என்னை சுற்றிலும்
பாதுகாப்பு படையினர் நிற்கின்றனர். இந்த வயதில் என்னால் இயலாது” – மகன்
தன்வீர் ஜாஃப்ரி, மகள் நஸ்ரின், பேரப் பிள்ளைகளான தவ்ஸீஃப் ஹுஸைன், ஸுபின்
ஹுஸைன் ஆகியோருடன் குல்பர் சொஸைட்டியில் கரியும், புகையும் படர்ந்த தனது
பழைய பங்களாவில் இருந்துகொண்டு 70 வயதான ஸாக்கியா ஜாஃப்ரி கண்ணீர் மல்க
கூறுகிறார்.
குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 10
ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
சாஃப்ட்வர் பொறியாளரான கணவர் நஜீப்
ஹுஸைனுடன் அமெரிக்காவில் வசிக்கும் மகள் நஸ்ரினுடன் செல்ல ஸாக்கியா ஜாஃப்ரி
விரும்புகிறார். தற்போது ஸாக்கியாவுடன் வசிக்கும் அவரது மகள் நஸ்ரின்
வருகிற மார்ச் 11-ஆம் தேதி அமெரிக்காவிற்கு செல்லவிருக்கிறார். மகளுடன்
ஸாக்கியாவும் செல்கிறார். ஆறு மாதம் அங்கு தங்குவார். சூரத்தில் larsen
& toubro நிறுவனத்தில் எக்ஸ்க்யூடிவ் பொறியாளராக பணியாற்றும் மகன்
தன்வீருடன் குஜராத் இனப்படுகொலைக்கு பிறகு ஸாக்கியா வசித்து வந்தார்.
அமெரிக்காவிற்கு செல்ல ஸாக்கியா தீர்மானித்து இருந்தாலும் நீதிமன்றத்தில்
தொடர்ந்த வழக்கின் தொடர் நடவடிக்கைகள் குறித்த கவலையில் உள்ளார்.
இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு
மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் நகலை வருகிற மார்ச்
15-ஆம் தேதி ஸாக்கியாவிடம் அளிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.
சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட்
உட்பட வேறு எவருக்கும் அறிக்கையின் நகலை வழங்கமுடியாது என்றும் நீதிமன்றம்
தெரிவித்தது. தான் இந்தியாவில் இல்லாதது வழக்கை பாதிக்கும் என்ற கவலையும்
ஸாக்கியாவுக்கு உண்டு.
2002-ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களை
நரேந்திர மோடியால் ஒரு போதும் மறைக்க முடியாது என்று ஸாகியா ஜாஃப்ரியின்
மகள் நஸ்ரின் கூறுகிறார். குல்பர்க் சொஸைட்டியில் தீயில் எரிந்து கிடக்கும்
வீடுகள் இனப்படுகொலையின் ஆதாரங்கள் ஆகும். அதனை யாரும் மறக்கமுடியாது
எனவும் நஸ்ரின் கூறுகிறார்.
குஜராத் இனப்படுகொலை நடக்கும்
வேளையில் நஸ்ரின் அமெரிக்காவில் இருந்தார்.
மும்பையை சார்ந்த டீஸ்டா ஸெடல்வாட்,
டெல்லியில் இருந்து ஹர்ஷ் மந்தர், குஜராத் பி.யு.சி.எல் தலைவரும் மனித
உரிமை ஆர்வலருமான டாக்டர் ஜெ.எஸ்.பந்தூக்வாலா உள்பட பலர் குஜராத்
இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது நினைவு தினத்தில் குல்பர்க் சொசைட்டிக்கு
வருகை தந்தனர்.to asiananban
No comments:
Post a Comment