கெய்ரோ:எகிப்து பாராளுமன்ற கீழ்
சபைக்கான தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய இஃவானுல் முஸ்லிமீனின்
அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி பாராளுமன்ற துணைச் சபையான
ஷூரா(ஆலோசனை) கவுன்சில் தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மேலும்
இன்னொரு இஸ்லாமிய கட்சியான அந்நூர் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி 180
உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற துணை சபையில் 106 இடங்களை கைப்பற்றி
மிகப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. ஸலஃபிகளின் கட்சியான அந்நூர் 46 இடங்களை
கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தது. 14 இடங்களை கைப்பற்றிய அல் வஃப்த்
கட்சி 3-வது இடத்தை பிடித்துள்ளது. தேர்தல் கமிஷன் தலைவர் அப்துல் முஈஸ்
இப்ராஹீம் தேர்தல் முடிவுகளை அறிவித்தார்.
சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றிய பிறகு எகிப்தில்
சுதந்திரமாகவும், நீதியாகவும் நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய
கட்சிகள் பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாதங்கள் நீண்ட தேர்தல் நடைமுறை வருகிற ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர்
தேர்தல் மூலம் நிறைவுறும்.
No comments:
Post a Comment