Facebook Twitter RSS

Thursday, February 09, 2012

Widgets

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்கள் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு



Dayanidhi Maran and Kalanithi Maranடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்தம் மூலம் இவர்கள் முறைகேடாக ரூ.550 கோடி அளவிற்கு பணம் ஈட்டியதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று அமலாக்கப் பிரிவினர் இந்த வழக்கை பதிவு செய்து எப்ஐஆரும் பதிந்துள்ளனர்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act-PMLA), அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act-FEMA) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் மிக மிகக் கடுமையானதாகும். இதன் கீழ் சன் டிவி மற்றும் மாறன் சகோதரர்களின் சொத்துக்களைக் கூட முடக்கும் அதிகாரம் அமலாக்கப் பிரிவுக்கு உண்டு.

2ஜி லைசென்ஸ் பெற சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்தபோது அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் இழுத்தடித்ததாகவும், பின்னர் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்பந்தப்படுத்தியதாகவும், இந்த நெருக்குதலால் ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரன் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதாகவும், இதன் பிறகு ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி லைசென்ஸை தயாநிதி மாறன் ஒதுக்கித் தந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சன் டைரக்ட் நிறுவனத்தில் அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் நிறுவனம் ரூ. 550 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. செளத் ஏசியா எண்டர்டெயின்மெண்ட் ஹோல்டிங்ஸ் என்ற துணை நிறுவனம் மூலமாக இந்தப் பணத்தை முதலீடு செய்தார் அனந்தகிருஷ்ணன்.

இதன்மூலம் மாறன் சகோதரர்கள் ரூ. 550 கோடி அளவுக்கு முறைகேடாக லாபம் அடைந்ததாக அமலாக்கப் பிரிவு கூறியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டையடுத்து கடந்த ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவிலியிருந்து விலக நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மறுத்து வந்தாலும், இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets