இந்தியாவில் உள்ள கால்சென்டர்கள் மூலம் மிரட்டல் விடுத்து அமெரிக்கர்களிடம் அந்நாட்டு நிறுவனம் ஒன்று ரூ.25 கோடி கடன் வசூல் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. மக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து கலிபோர்னியாவைச் சேர்ந்த "இபீஸ் எல்எல்சி' என்ற அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அந்நாட்டு மத்திய வர்த்தக ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த விவரம்: அமெரிக்காவில் உள்ள இபீஸ் எல்எல்சி நிறுவனம் தன்னை ஒரு கடன் அளிக்கும் நிறுவனம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது. கடன் தேவைப்படுவோர் அணுகலாம் என்றும் விளம்பரப்படுத்தியுள்ளது. இதை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தை அணுகியுள்ளனர். அவ்வாறு அணுகியவர்களிடம் இருந்து வங்கிக் கணக்கு எண், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட முக்கியமான விவரங்களை பெற்றுக்கொண்டுள்ளது. பின்னர் கடனுக்கு நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது என்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது
இதனால் கடன் வாங்க விரும்பியவர்கள் அந்நிறுவனத்தில் ஆன்லைனில் கடனுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அந்நிறுவனம் கடன் வழங்கவில்லை. மாறாக இந்தியாவில் உள்ள சில கால்சென்டர்களை அழைத்து கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களின் தொலைபேசி எண்களை கொடுத்து அவர்களை மிரட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கடன் வாங்காதவர்களை வாங்கியதாகக் கூறி, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு அந்நிறுவனம் நிர்பந்தித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்ததுபோல் போலியான ஆவணங்களையும் அந்நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தியாவில் உள்ள கால்சென்டர்கள் மூலம் மிரட்டல் வந்ததும் ஏராளமான அமெரிக்க வாடிக்கையாளர்கள் ஓடிப்போய் அவர்கள் சொல்லிய தொகையை அமைதியாகச் செலுத்திவிட்டு வந்துள்ளனர். ஆனால் சிலர் மிரட்டலுக்குப் பயந்து பணத்தை கட்டவில்லை. அவர்கள் துணிச்சலாக அந்நாட்டு மத்திய வர்த்தக ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஆணையம் நடத்திய விசாரணையில் அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 2010, ஜனவரியில் இருந்து இந்திய கால்சென்டர்கள் மூலம் 10000 அமெரிக்க வாடிக்கையாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். ரூ.25 கோடி அளவுக்கு வசூலித்து மோசடி செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய கால்சென்டர்களுக்கும் சர்வதேச அரங்கில் அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. இந்திய கால்சென்டர்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment