Facebook Twitter RSS

Monday, January 14, 2013

Widgets

இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?





எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர்.

தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினசரி 200ம் அதற்கு மேலும் வைட்டமின் "ஈ" எடுத்துக் கொள்வர்களுக்கு சர்வ தேச அளவில் 77 சதவீதம் இதய நோய்கள் வர வாய்ப்பில்லை என்கின்றனர் 2 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஆராய்ந்த ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600 யூனிட் வைட்டமின் "ஈ" எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதய நோய்களே வருவதில்லையாம்.

இளவயதுக்காரர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும், நடு வயதுக்காரர்கள் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கவும். வைட்டமின் "ஈ" உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், தவிடு நீக்காத கோதுமை மாவு, முளைவிட்ட தானியங்கள், அவாகோடா பழம், கொட்டை உள்ள உணவுகள் (நிலக்கடலை போன்றவை), கீரைகள், சூரியகாந்தி விதைகள், தாவார எண்ணெய் (சூரியகாந்தி எண்ணெய்), ஆலிவ் எண்ணெய், கடுகு, கேனோலா எண்ணெய் போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் அமிலம் நல்ல இதய நோய் தடுப்பானாக செயல்படுகிறது என்கின்றனர் ஹார்வார்டு யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். தினசரி 400 மி.கி., போலிக் அமிலம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவு என்கின்றனர். போலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகள் ஆரஞ்சு சாறு, கீரைகள், பச்சைக்காய்கறிகள், முளை கட்டிய பருப்புகள்.

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால், இதயச் செயலிழப்பு ஏற்படும். இதைத் தடுப்பதில் அமிலச் சத்தான "ஒமேகா 3" வேகம் காட்டுகிறது என்கிறார் வாஷிங்டன் நேஷனல் ஹெல்த் சென்டர் ஆராய்ச்சியாளர் சிமோபவுலாஸ். இந்த சத்து மீனில் அதிகம் உள்ளதால் மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் இல்லை என்கின்றனர்.

உடலில் கொழுப்பு சேர விடாமல், "ஒமேகா 3" தடுக்கிறது. எனவே, வாரத்திற்கு இருமுறை சால்மன், புளூபிஷ், மகிரால் வகை மீன்களை உண்ண சிபாரிசு செய்கிறார் சிமோபவுலாஸ். மீன் சாப்பிடாதவர்கள் வால்நட் பருப்பு, ப்ளாக்ஸ் ஆயில், சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளை உபயோகியுங்கள் என்கின்றனர். ஆலிவ் ஆயில் இதய நோய் வரும் வாய்ப்பை 53 சதவீதம் குறைக்கிறதாம்.

இதய நோய்கள் அபாயம் இன்றி வாழ தினமும் அரை கப் மாதுளம் பழச்சாறு அருந்துங்கள் என்கின்றனர் இஸ்ரேல் நாட்டிலுள்ள ராம்பம் மருத்துவ ஆராய்ச்சி மைய அறிஞர்கள். மாதுளை சாற்றில், "பாலி பெனோல்ஸ்" என்ற இதயத்திற்கு நன்மை செய்யும், "ஆன்டி ஆக்ஸிடென்ட்" அதிகமாக இருக்கிறதாம்.

டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத எண்ணெய் போன்றவற்றினால் ஆன உணவு பதார்த்தங்களை உண்ணாதீர்கள். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம் போன்றவற்றை குறைவாக உபயோகியுங்கள் என்கின்றனர்.

அதிக உப்புத்திறன் கொண்ட "அஜினமோட்டோ", சமையல் சோடா, சமையல் பொடி, போன்றவற்றை உபயோகிக்க கூடாது. உணவு உண்ணும் மேஜையிலிருந்து உப்பு தூவும் குடுவையை எடுத்துவிடுங்கள். உப்பிற்கு பதிலாக, எலுமிச்சை, பூண்டு மற்றும் வெங்காயம் கொண்டு உணவு தயாரிக்கவும்.

எப்பொழுதும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உண்ணுங்கள், ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை உணவில் சேருங்கள். பீன்ஸ், உருளைகிழங்கு போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்க்கவும். எல்லாவற்றையும் விட அதிக நீர் குடியுங்கள்.
 

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets