' மாலி ' இன்று மீடியாக்களின் பார்வையில் அதிகம் உச்சரிக்கப்படும் ஆபிரிக்க நாடு . முதலாளித்துவ வல்லரசான 'பிரான்ஸ்' இன்று அதன் மீது ஒரு சண்டித்தனமான ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்துள்ளது . ஒரு வலிமை பொருந்திய நாடு வறிய ஆபிரிக்க நாடொன்றில் அரசியல் இராஜ தந்திர ரீதியில் ஆக்கிரமிப்பு செய்வது இது தான் முதல் தடவையல்ல . ஆனால் சொல்லப் பட்ட காரணம் தான் சற்று சிந்திக்கத் தூண்டுவது. அது வழமை போலவே இஸ்லாமிய தீவிர வாதம் , பயங்கர வாதம் எனும் நொண்டிச் சாட்டாகும் . இதனடிப்படையில் இஸ்லாம் பற்றிய தவறான அச்சத்தில் திசை திருப்பப்பட்டிருக்கும் மனித சமூகம் இன்று மாலியின் நிகழ்வுகளை ஒருபக்கப் பார்வையிலேயே பார்க்கின்றது .
பொதுவாகவே அநேகமான ஆபிரிக்க தேசங்கள் முதலாளித்துவ காலனித்துவ ஏகாதிபத்தியத்தின் இரும்புக் கரங்களின் பிடியில் காலம் காலமாக இருந்து வருபவை . இந்த முதலாளித்துவம் தமது அதிகாரக் கடிவாளத்தை வறிய ,பின்தங்கிய , நாடுகள் என சர்வதேச அளவில் இனங்காட்டப்படும் இந்த நாடுகள் மீது போட நினைப்பது ஏன் ? என்ற உண்மையை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் .
ஒவ்வொருவரும் தமது மனதை தொட்டு பேசவேண்டும் எமக்குத் தெரிந்தவரை ஆபிரிக்க மக்கள் தொடர்பில் அவர்களது சமூக ,கலாச்சார ,அரசியல் ,பொருளாதார, நிலைகள் எவ்வாறு இனம் காட்டப் பட்டுள்ளன ?
#மிகக் கடுமையான வறுமையும் , பஞ்சமும் .
#உள்நாட்டு யுத்தங்கள் , கோத்திர வாத சண்டைகள் .
#பழங்குடி வாழ்க்கை .
#போசாக்கற்ற மக்கள் .
#அச்சகரமான சூழல் .
என்ற உருவங்களே மனக்கண் முன் வரும் . ஆனால் இவை யாவும் அதன் பூமிக்கு மேல் உள்ள உருவாக்கப் பட்டு சித்தரிக்கப் படும் வடிவமாகும் . ஆனால் இந்த உலகத்தையே விலை பேசும் செல்வங்கள் அதன் பூமிக்கு கீழேதான் இருக்கின்றன . அது ஆபிரிக்காவின் இயற்கை வளங்கள் . இன்னும் இந்த வல்லரசுகள் அஞ்சும் யுரேனியம் , புளுட்டோனியப் படிமங்களையும் அதிகமாகவே ஆபிரிக்கா கொண்டுள்ளது .
முதலாளித்துவ சுரண்டல் வர்க்கத்தின் அழுத்தமான பார்வை பதிந்த இடமும் இதுதான் .அதன் காரணமாக ஆபிரிக்க மக்கள் ஒரு மோசமான சித்தரிப்பு நோக்கி நகர்த்தப் பட்டார்கள் . தம்மைப் பற்றியும் ,தமது நிலத்தைப் பற்றியும் அவர்கள் சிறிதும் சிந்திக்க அவகாசம் கொடுக்கப் படவில்லை . முதலாளித்துவ காலனித்துவத்தின் குறைந்த விலையுடைய கைக்கூலிகளாக அவர்கள் மாற்றப் பட்டார்கள் .அங்கு வளங்கள் மீதான பகல் கொள்ளை சர்வ சாதாரணமாக அங்கு மேற்கொள்ளப் பட்டது .
# காலனித்துவம் .
# நவ காலனித்துவம் .
# நாடுகளை அரசற்ற நிலைக்கு (அனார்க்கி ) ஆக்கி உள்நாட்டு கலவரங்களை தூண்டி யுத்தப் பிரபுக்களை ஏற்படுத்தி ஆயுத விற்பனைக்கு பதிலாக கனிய வளங்களை பரிமாறுதல் .
போன்ற பல்வேறு நடவடிக்கைகளை செய்து அதன் வளங்களின் ஆதிக்கத்தை தமது கையில் வைத்திருப்பதே உண்மையில் இந்த (பிரான்ஸ் உட்பட ) முதலாளித்துவம் ஆபிரிக்க விவகாரத்தில் கவனத்தை குவிக்கும் பிரதான நோக்கமாகும் . இந்த பின்னணியை உணர்ந்தவர்களாகவே நாங்கள் மாலியின் விவகாரத்தை ஆராயத் தொடங்க வேண்டும் . பிரதான உண்மை என்னவென்றால் போசாக்கின்மை என்று அடையாளப் படுத்தப்படும் இந்த ஆபிரிக்க தேசங்கள் தாம் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான போசாக்குகள் என்றால் அது மிகையான கருத்தல்ல .
No comments:
Post a Comment