“இந்த நேரத்துல ஒரு பொண்ணுகூட என்னடா பண்ட்ற” என்று விழிகளை உருட்டி மிரட்டிக் கேட்ட அந்தக்கும்பல், அந்த இளைஞனை அடித்துத் துவைத்துப் பிழிந்து வெளியே தூக்கி வீசியது.
“நாங்கள் நண்பர்கள் திரைப்படம் பார்த்துவிட்டு வருகின்றோம்” என்று அந்த இளம்பெண் பதில் கூறியவுடன், “நீ பேசாதடி வாயை மூடடி” என்று கத்திக் கொண்டே அந்தக் கும்பலில் ஒருவன் இரும்புக் கம்பியால் அவளைத் தாக்கி திக்குமுக்காடச் செய்தான்.
வலியால் அலறித்துடித்தாள் அவள். ரத்தம் சொட்ட சொட்ட கதறிக் கொண்டிருந்த அவளை அந்தக் கும்பல் பலாத்காரம் செய்தது. தங்களின் காமத்தீ அடங்கிப் போன பின்னர் அவளை அப்படியே தூக்கி வெளியே வீசி விட்டுபோய்விட்டது அந்தக்கும்பல்.
இது ஒரு திரைப்படக் காட்சியல்ல. உலகிலேயே அதிகமான மக்கள் வாழும் இரண்டாவது நாடு. எதிர்கால பொருளாதார வல்லரசு என்றப் பெருமையைப் பெற்றிருக்கும் இந்திய துணைக் கண்டத்தின் தலைநகரம் டில்லிப்பட்டணத்தில் நடைபெற்ற உண்மை நிகழ்வு.
தெற்கு டில்லியிலுள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் பிசியோதெரபி படித்துக் கொண்டிருக்கும் இருபத்து மூன்று வயது மாணவி அவள் தனது ஆண் நண்பர் ஒருவருடன் 16.12.2012 அன்று மாலை திரைப்படம் பார்க்க சென்றிருக்கிறாள். இவர் ஒரு பொறியாளர். இருவரும் திரைப்படம் முடிந்து இரவு சுமார் 9.30 மணியளவில் முனிர்கா என்ற பேருந்து நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்தனர் தம் இடத்துக்கு செல்லும் பேரூந்தை எதிர்பார்த்து.
வந்தது ஒரு பேரூந்து. அது யாதவ் டிராவல்ஸ் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனத்தினுடையது. ஒரு பள்ளியின் ஆசிரியர்களையும் மாணவர்களையும் தினந்தோறும் பகல் நேரங்களில் ஏற்றிச் செல்வதற்கான ஒப்பந்த ஊர்தி.
அது ஒரு பொதுப்பேரூந்து என்று கருதி அதில் ஏறியிருக்கின்றனர் அந்த யுவனும் யுவதியும். பேரூந்துக்கு உள்ளே ஏற்கனவே ஆறு பேர் இருந்தனர். ஆறுபேரும் ஒரே கும்பலைச் சார்ந்தவர்கள் இருவரும் உள்ளே சென்று அமர்ந்ததும் இந்த நேரத்துல ஒரு பொண்ணுகூட என்னடா பண்ட்ற என்ற கேட்டபடியே நெருங்கினர் அவர்களை.
அதன் பின்னர் நடந்தவை மேலே நீங்கள் படித்தவை
அந்த மாணவியை ஹில்பூர் என்ற இடத்திலுள்ள மேம்பாலத்தில் வீசிவிட்டு கிளம்பிவிட்டது பேரூந்து இப்போது அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பப்பட்டார். அங்கே அவர் உயிர் துறந்தார்.
தலைநகர் டில்லியே அல்லோல கல்லோலப்படுகின்றது. மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் அமைப்பினர் போன்றோர் குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிடுகின்றனர். நமது மக்கள் பிரதிநிதிகளாம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இந்த பிரச்சனைப் பற்றி ஆத்திரத்தோடும் அழுகையோடும் பேசினர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோரை தூக்கில் தொங்க விட வேண்டும் என்றனர்.
“எனக்கும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்தச் சம்பவம் என்னையும் பாதித்துள்ளது” என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள்
தில்லி உயர் நீதி மன்றம் தானே முன் வந்து இந்த வழக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கை எதிர் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் தினந்தோறும் நடத்த டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி டி.முருகேசன் ஒப்புக் கொண்டிருக்கிறார். காவல் துறையின் நடவடிக்கையும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் இது பற்றிய செய்திகள் தலைப்பு செய்திகளாக இடம் பெற்றுவருகின்றன. நீட்டிமுழக்காமல் சொன்னால் மொத்த இந்தியாவின் கவனமும் இதன் மேல் குவிந்து கிடக்கின்றது.
இது இப்படியிருக்க இந்தியாவின் தென்கோடியில் மற்றொரு சம்பவம். கடந்த டிசம்பர் 20ம்தேதி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்த கிளாங்குளம் என்ற கிராமத்தைச் சார்ந்த சவ்ந்திர ராஜனின் மகள் புனிதா வயது 13 பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.
தில்லியில் நடந்த கொடூரத்துக்கு எதிராக நீதித்துறை, சட்டத்துறை, நிர்வாகத்துறை, பாராளுமன்றம், பத்திரிக்கைத்துறை என அனைத்தும் எழுந்து நிற்கின்றது. கிளாங்குளத்தில் நடந்த அநீதி காற்றோடு வெறும் பேச்சாக போகிறதே ஏனிந்த பாகுபாடு என்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கேட்கிறார் இது நியாயமான கேள்வி.
தில்லியோ, கிளாங்குளமோ, தலைநகரோ, கடைக்கோட கிராமமோ, புனிதாவோ, அநீதி அநீதி தான். குற்றம் குற்றம் தான். தண்டனைகள் பாரபட்சமின்றி குற்றவாளிகளுக்கு தரப்பட வேண்டும்.
ஒரு குற்றவாளிக்கு உரிய தண்டனையை உரிய நேரத்தில் பெற்றுத் தருவதற்கு கூட பெரும் கொந்தளிப்பும் மக்களிடையே பெரும் ஆர்ப்பரிப்பும் தேவைப்படுகின்றது. இங்கே நமது நிர்வாக நடைமுறையிலுள்ள தாமதங்களும் சிக்கல்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக மறைமுக அநியாயங்களையே செய்து கொண்டிருக்கின்றன.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எந்த மாதிரியான தண்டனைகளை தருவது என்பதில் கூட நமக்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை.
இவற்றுக்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் சிலர் நம் சட்டங்களைக் குறை சொல்கின்றனர். நம் நிர்வாக நடைமுறை சரியில்லை என்கின்றனர். சிலர் நமதுநீதிமன்றங்களை குறை காண்பர். சிலர் சமூகத்தை குறை கூறுவர். சிலர் தன் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அந்தப் பெண்ணின் நடை உடைகளே காரணம் என்பர். இவற்றுள் எது சரி என்று நீண்ட பெரும் விவாதங்களும் கூட நடப்பதுண்டு.
உண்மையைச் சொன்னால் தாம் எப்படி வாழ்வது என்பதை மனிதனே தீர்மானித்துக் கொள்ளும் சமூக அமைப்பில் இது போன்ற குற்றங்களையும் தவிர்க்க இயலாது. குற்றவாளிகள் உருவாவதையும் நிறுத்த முடியாது. மனிதச் சட்டங்களுக்கு அந்த வலிமையில்லை. ஏனெனில் சட்டங்களை இயற்றும் வலிமை மனிதனுக்கில்லை.
மனிதனைப் படைத்த இறைவன் தான் மனித சுபாவங்ளை நன்கறிந்தவன். மனிதனிடமிருந்து குற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் நன்கறிந்தவன். ஒரு மனிதனைக் கூட மற்றொரு மனிதனால் முழுமையாகப் புரிந்திட முடியாது எனும் போது மொத்த மனித இனத்தையும் அறிந்திட மனிதனால் முடியுமோ.
எனவே நமது சிந்தனையின் அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது. நமது சட்டங்களின் அடிப்படையிலேயே பலஹீனம் இருக்கிறது.
மனிதனைப் படைத்த ஏக இறைவன் மனிதனிடம் பல குணங்களை உணர்வுகளை அமைத்தான். அவற்றுள் ஒன்று பாலுணர்வு. இந்த பாலுணர்வுக்கு மனித அறிவுக்குமிடையே அவ்வப்போது நடக்கும் போட்டியில் பலநேரங்களில் மனித அறிவு தோற்கிறது. பாலுணர்வு வெல்கிறது. பாலுணர்வு கிளர்ந்தெழும் போது அதை வீழ்த்திடும் அளவுக்கு எல்லா நேரங்களிலும் மனிதன் பலமுள்ளவனாக இருப்பதில்லை.
மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான் (4:28) என்று ஏக இறைவன் கூறுவது பாலுணர்வு பற்றித்தான்.
தடுக்கப்பட்ட வழியில் தம் இச்சையைத் தீர்த்தால் தாம் உயிரெனப் போற்றும் மானத்திற்கும் மரியாதைக்கும் பங்கம் ஏற்படலாம். சிலபொழுது உயிரே பறிக்கப்படலாம் என்ற அச்சம் தான் மனிதனைக் குற்றத்தினருகே செல்ல விடாமல் தடுக்கும்.
எனவே தான் இறைவன் கூறுகின்றான்: விபச்சாரம் செய்தவர் ஆண் பெண் இருவரையும் நூறு கசையடி அடியுங்கள். நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புவோராக இருந்தால் அல்லாஹ்வின் சட்டத்(தை நிலைநாட்டுவ)தில் அவ்விருவர் மீதும் இரக்கம் உங்களுக்கு ஏற்பட வேண்டாம். அவ்விருவரையும் தண்டிக்கும் போது இறை நம்பிக்கையுள்ளோரில் ஒரு கூட்டம் நேரில் பார்க்கட்டும்(24:2).
இங்கே இறைவன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகின்றான் இருவர் மனம் ஒப்பிச் செய்யும் விபச்சாரத்தில் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும் 2. தண்டனையில் ஆண் பெண் வேறுபாடில்லை 3. நூறு கசையடிகள் தண்டனை தர வேண்டும் 4. தண்டனை தந்திட இரக்கப்பட்டு தயங்கக் கூடாது ஒரு கூட்டத்தின் முன்னிலையில் தண்டனை பகிரங்கமாக நடத்தப்பட வேண்டும்.
திருமணத்துக்கு முன்னர் விபச்சாரம் செய்பவர்களுக்கு மேற்கண்ட தண்டனை தரவேண்டும் எனக் கூறும் இஸ்லாம் திருமணம் செய்து கொண்ட பின்னரும் இந்த மானக்கேட்டில் இல்லறத்துக்கு வெளியே விபச்சாரத்தில் வீழ்ந்தால் அவர்கள் பூமியின் மேல்பரப்பில் வாழும் உரிமையை இழக்கின்றார்கள் என்கிறது. ஆம் அவர்களுக்கு மரண தண்டனை தான் தர வேண்டும் என்கிறது.
இறைவன் வழங்கிய இந்த தண்டனை நடைமுறையில் இருந்த நாட்களிலும் நாடுகளிலும் குற்றங்கள் அறவே நின்றன. இந்தச் சட்டங்களைப் பெற்றிட எவரும் போராடவில்லை. ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. ஆட்சியாளர்களின் இல்லங்களை முற்றுகையிட்டுப் பெறவில்லை. இந்த சட்டங்களை மனித சுபாவத்தை அறிந்த அல்லாஹ் உவந்தளித்தவை இவை.
பாதிக்கபட்ட சகோதரிக்கு நீதி வேண்டி வீதியில் நின்று போராடும் அன்பர்களே குற்றவாளிகளை கழுவிலேற்றிக் கொல்ல வேண்டும் என்று துடிக்கும் நெஞ்சங்களே ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே எந்த போராட்டமுன்றி உங்கள் உணர்வுகளை சட்டமாக வடித்து வந்த அல்லாஹ்வை அந்த ஏக இறைவனை அவன் தந்த இனிய மார்க்கத்தைக் கொஞ்சம் ஏறிட்டுப்பாருங்களேன்.
ஆண்களின் தீய பார்வையிலிருந்தும் தீய தீண்டல்களிலிருந்தும் பாதுகாப்பு பெற்றிட ஒரு பெண் எப்படி ஆடையணிந்திட வேண்டும் என்பது தொடங்கி குற்றவாளிகளை முறைப்படி தண்டிப்பது வரை நீங்கள் அறிந்திட ஏராளம் இங்கே இருக்கிறது.
இந்த இனிய மார்க்கம் 1400 ஆண்டுகள் வரலாறு கொண்டது. பல நாடுகளில் இன்று வரை செயலில் இருப்பது. இனியும் இருக்கும். இதை அனைவரும் ஏற்றிட தடையேதும் இல்லை.
No comments:
Post a Comment