Facebook Twitter RSS

Thursday, January 03, 2013

Widgets

எம்.எல்.ஏ -வாக இருக்கக்கூட தகுதியில்லாத மோடி எப்படி பிரதமர் ஆக முடியும் : மேதா பட்கர் !



மேதா பட்கர்... மங்கலான நிறத்தில் கந்தலான காட்டன் புடைவை, எப்போதோ சீவப்பட்ட‌ கூந்தல், களைப்பான முகம், தோளில் ஒன்று கையில் ஒன்று என இரண்டு ஜோல்னா பைகள், நிறைய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை பேசும் காகிதக் கத்திக‌ளோடு நாடு முழுக்கச் சுற்றி வரும் நம் நூற்றாண்டின் போராளி. இவர் சமிபத்தில் ஒரு இதழ்க்கு அளித்த பேட்டி
 ''ஒரு பக்கம் சமூகத்தின் சகல தளங்களிலும் பெண்கள் முன்னேற்றம் காண்கிறார்கள். ஆனால், மறுபக்கம் நாட்டின் தலைநகரிலேயே ஓடும் பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி கொடூரமான பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் அவலம் அரங்கேறுகிறதே?'
''டெல்லி கேங் ரேப்... மூன்று நாட்களாக எனக்குத்
தூக்கமே வரவில்லை. 'குற்றவாளிகளைக் கொடூரமாகக் கொல்ல வேண்டும். தூக்கில் போட வேண்டும்’ என்று நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அரசியலே அறியாமல் கூப்பாடு போடுப‌வர்கள்தான் இந்த மாதிரியான சம்பவங்களுக்குக் காரணம் என்பேன் நான். கொஞ்சமும் யதார்த்தம் புரிந்து கொள்ளாமல் இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் வீதிக்கு வந்து போராடும் சமூகச் செயற்பாட்டாளர்களும் ஒரு விதத்தில் காரணமானவர்களே. ஆட்சியாளர்களும், ஊடகமும், காவல் துறையும் மட்டுமே காரணம் அல்ல... கார்ப்பரேட் சூழல் அதர்மம், பணம் என மாறிவிட்டதால் பெண்களைப் போகப் பொருளாகவும், ஆபாசத்தை அள்ளித் தரும் விற்பனைச் சரக்காகவும் மட்டுமே பார்க்கிறார் கள். இன்று சினிமாவில் மட்டுமா, சமூகத்தின் அத்தனை தளங்களிலும் பெண்களைக் காம உணர்வுகளைத் தூண்டும் ஒரு பட்சியாகவே பாவிக்கிறார்கள். இந்த நிலை மாறும் வரை இதுபோன்ற கொடூரமான பாலியல் பலாத் காரங்களும், பெண்கள் மீதான வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.''
''நரேந்திர மோடி மீண்டும் குஜராத் முதல்வர். அவருக்கு எதிரான உங்கள் போராட்டங்கள் வீணாயிற்றே?''
''நாம் நமது தேர்தல் செயற்பாட்டு முறைகளையும் விதிகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என குஜராத் தேர்தல் முடிவுகள் மீண்டும் நமக்குச் சத்தமாகச் சொல்லி இருக்கின்றன. நர்மதா அணை விவகாரம், சிறுபான்மை இனத்தின் மீதான தாக்குதல், முதலாளித்துவப் போக்கு, மிரட்டல் யதேச்சதிகாரம் போன்ற ஏராள அடக்குமுறைகளுக்கு மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும். மோடியின் வெற்றி அவருக்கு எதிரான எங்கள் பிரசாரப் பணிகளைப் பாதிக்காது!''
''ஆனால், 'நரேந்திர மோடியின் அடுத்த இலக்கு இந்தியப் பிரதமர் பதவி’ என்று அரசியல் அரங்கில் ஹேஷ்யங்கள் பரபரக்கின்றனவே?''
''அதெல்லாம் நாடக வசனங்கள். பொருட்படுத்தத் தேவை இல்லை. ஒரு எம்.எல்.ஏ-வாக இருக்கக்கூட தகுதி இல்லாதவர் மோடி. பிறகு எப்படி அவர் பிரதமர் ஆவார்? பி.ஜே.பி-யில் இருப்பவர்களே அவரை ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை. பிறகு, மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?''
''கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை மக்கள் ஓயாமல் விதவிதமாகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், மத்திய, மாநில அரசுகள் அவர்களை ஒடுக்குவதிலேயே அக்கறை காட்டுகிறதே?'
''கூடங்குளம் மக்களின் தொடர் போராட்டம் நாடு முழுக்க ஒருவித சிலிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது. என்னை இயக்கும் மாபெரும் உந்து சக்தியாக இருக்கிறது. அரசாங்கத்தின் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு மக்கள் இன்னமும் களத்தில் நிற்பது ஆச்சர்யம் அளிக்கிறது. கூடங்குளம் மக்களின் போராட்டத்தை முதலில் ஆதரித் தும் பிறகு எதிர்த்தும் ஜெயலலிதா போட்ட அரசியல் நாடகம் பெரும் கண்டனத்துக்கு உரியது. தொடர் உண்ணாவிரதம் இருந்த மக்களிடம் மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதா பேசக்கூட இல்லை. நான் அங்கு சென்றிருந்தபோது, 'நாங்கள் இவ்வளவு போராடியும்... புரண்டு அழுதும்... அரசாங்கத்துக்கு எங்கள் குரல் கேட்கவே இல்லையே’ என நிறையப் பெண்கள் கண்ணீர்விட்டார்கள். நாட்டின் எந்த ஒரு பொருளாதார வளர்ச்சியும் நாட்டு மக்க ளின் நலனுக்காக, அவர்களுடைய தார்மீக விருப்பத்தின் பேரிலேயே நிறைவேற்றப்பட வேண்டும்!''
''தமிழகத்தில் தர்மபுரி அருகே தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எப்படிப் பார்க் கிறீர்கள்?''
''சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆதிவாசிகளின் வாழ்வும், தலித் மக்களின் வாழ்வும் இன்னும் மேன்மை அடையவில்லை. நாம் சர்வ சாதாரணமாக அனுபவிக்கும் எந்த வசதிகளும் உரிமைகளும்கூட அவர்களுக்குக் கிடையாது. ஆனால், சகல வசதிகளையும் அனுபவிக்கும் கார்ப்பரேட்களைவிட அந்த மக்களே இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். தர்ம‌புரி சம்பவத்தை நேரில் சென்று பார்க்க முடியாமல் போய்விட்டது. காதல், கல்யாணம் என்பதெல்லாம் சும்மா ஒரு காரணம். அடிமனதில் கனன்றுகொண்டு இருந்த வன்மம்தான் அந்த மக்களின் மீதான வன்முறைக்குக் காரணம். தமிழ்நாட்டில் இந்த விஷயத்தை யாரும் சரியாகக் கையாளவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் 'தமிழர்... தமிழர்...’ என்று பேசுகிற கட்சிகள், அமைப்புகள்கூட இந்த விவகாரத்தில் மௌனியாக இருக்கின்றன. இவர்கள் தாக்குதல் நடத்தியவர்களை விடவும் ஆபத்தானவர்கள். ஏன், தமிழ் நாட்டில் இருக்கும் தலித்துகள் யாரும் தமிழர்கள் இல்லையா?''

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets