மும்பை:மும்பை
தாக்குதல் வழக்கில் டெல்லி போலீஸ் கஸ்டடியில் உள்ள அபூஜிண்டால் என்ற ஸஈத்
ஸபீஉத்தீன் அன்ஸாரி முன்னர் இந்தியாவின் இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) உளவாளியாக
செயல்பட்டவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையைத்
தொடர்ந்து சிமி உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் நகர்வுகள் குறித்து ஐ.பி
மற்றும் உள்ளூர் போலீசாருக்கு அபூ ஜிண்டால் தகவல் அளித்ததாக போலீஸ்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியாவில் இருந்து விமானத்தில்
அனுப்பட்ட அபூ ஜிண்டாலை டெல்லி விமானநிலையத்தில் வைத்து டெல்லி போலீஸ் கைது
செய்ததாக கூறப்படுகிறது. இவர் மீது மும்பை தாக்குதல் மற்றும் 2006
அவுரங்காபாத் ஆயுதக்கடத்தல் வழக்கு ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.
அதேவேளையில் அபூஜிண்டால்தான் அவரங்காபாத்
ஆயுதக்கடத்தல் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். பிறந்த
ஊரான மராத்வாடாவில் உள்ள பீடில் எலக்ட்ரீசினியனாக வேலைப் பார்த்தவர் அபூ
ஜிண்டால் என்ற அன்ஸாரி. காண்ட்ராக்டர்களுடன் பணியாற்றிய அன்ஸாரிக்கு போலீஸ்
நிலையங்களில்தான் பெரும்பாலும் வேலை இருந்து வந்தது. அப்பொழுதுதான்
அன்ஸாரி போலீஸ் மற்றும் உளவுத்துறையுடன் நெருக்கமானதாக கூறப்படுகிறது.
2006-ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி
அவரங்காபாத்தில் ஆயுதவேட்டை நடத்தப்பட்டது. டாட்டா சுமோவில் இருந்து 10
ஏ.கே 47 துப்பாக்கிகளும், 30 கிலோ வெடிப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ஆயுத வேட்டை நடத்தப்பட்டதாக ஏ.டி.எஸ்
துணை கமிஷனர் டி.எஸ்.தாவலே மஹராஷ்ட்ரா உள்துறைச் செயலாளருக்கு எழுத்து
மூலம் தெரிவித்தார். இத்தகவல் உளவுத்துறைக்கு அன்ஸாரி மூலமே கிடைத்துள்ளது.
ஆனால், ஆயுதக்கடத்தல் வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க அனுமதி கோரி உள்துறை
செயலாளருக்கு தாவலே அளித்த மனுவில் அன்ஸாரி தேடப்படும் குற்றவாளியாக
சேர்க்கப்பட்டிருந்தார்.
அவுரங்காபாத் ஆயுத வேட்டைக் குறித்து
தகவல் அளித்தவர் அன்ஸாரி(அபூ ஜிண்டால்). ஆனால் ஆயுத வேட்டை நடந்த வேளையில்
MH 20 U 1240 என்ற காரில் தப்பிய இருவரில் ஒருவர் அன்ஸாரி என்று குழப்பமான
தகவலை ஏ.டி.எஸ் கூறுகிறது. அன்று தப்பிய அன்ஸாரி பங்களாதேஷ் வழியாக
பாகிஸ்தானுக்கு சென்றாராம்.
இந்நிலையில் மும்பை தாக்குதலின் வேளையில்
வெளியான பெயர் தாம் அபூ ஜிண்டால். அபூ ஜிண்டால்தான் தங்களுக்கு ஹிந்தி
மொழியை கற்பித்தார் என்றும், தாக்குதல் வேளையில் ஸாட்லைட் வழியாக உத்தரவு
பிறப்பித்தவர் அபூ ஜிண்டால் என்றும் அஜ்மல் கஸாப் உறுதிமொழி
அளித்திருந்ததாக போலீஸ் கூறுகிறது. ஆனால், இதில் என்ன பிரச்சனை என்றால் அபூ
ஜிண்டால்தான் அன்ஸாரி என்பதை ஐ.பியோ, போலீஸோ அடையாளம் காணவில்லை.
அமெரிக்க ஏஜன்சியான சி.ஐ.ஏதான் அபூ
ஜிண்டாலை குறித்து கூடுதல் தகவல்களை இந்தியாவுக்கு அளித்துள்ளதாம்.
இந்நிலையில் அன்ஸாரி தான் அபூஜிண்டால் என்பதை கஸாப் அடையாளம்
காட்டவேண்டும். அபூஜிண்டால் தொலைபேசியில் தாக்குதல் நடத்தியவர்கள் என
கூறப்படும் நபர்களுக்கு அளித்த உத்தரவுகளின் குரல் பதிவை அமெரிக்க
ஏஜன்சிகள் இந்தியாவுக்கு அளித்துள்ளன. அதில் உள்ள சப்தமும், அன்ஸாரியின்
குரலும் ஒன்றுதானா? என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.source thoothu online.com
No comments:
Post a Comment